AIPMT மறு நுழைவுத் தேர்வு



தேர்வு தேதி: ஜூலை - 25

இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கானவை. மீதமிருக்கும் 15 சதவீத இடங்கள் AIPMT (All India Pre-Medical / Pre-Dental Entrance Test)  என்ற  அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படும். இந்தத் தேர்வை CBSE  ஆணையம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான AIPMT தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்தத் தேர்வுக்காக தயார் செய்யப்பட்டிருந்த வினாக்களுக்குரிய விடைகள், செல்போன்கள் மூலம் வெளியிடப்பட்டதாகவும் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணையில் ஹரியானா, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில மாணவர்கள், முறைகேடு மூலம் சட்டவிரோதமாகப் பயன் அடைந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரை ஹரியானா காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நுழைவுத் தேர்வை ரத்து செய்ததோடு, 4 வாரங்களுக்குள் மறு தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், நடத்தப்பட உள்ள தேர்வின் முடிவுகளை ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் வெளியிடவும் அறிவுறுத்தியது.மறு தேர்வு நடத்த கால அவகாசம் போதாது என்று முதலில் தெரிவித்த சி.பி.எஸ்.இ., தற்போது மறு நுழைவுத் தேர்வு ஜூலை 25ம் தேதி நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்தக் குழப்பத்தால் நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதியிருந்தனர். பல்வேறு வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் சென்று கடும் பயிற்சிக்கு பிறகு தேர்வை எதிர்கொண்ட அவர்கள் இப்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை உருவாகியிருப்பதால் மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘இந்த மறுநுழைவுத் தேர்வில் புதிய மாணவர்கள் யாரும் பங்கேற்க முடியாது. ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள், கண்டிப்பாக மீண்டும் பங்கேற்க வேண்டும். முன்பு பயன்படுத்திய அதே மின்னஞ்சல் முகவரியை பயன்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மறுதேர்வு தொடர்பான தகவல்கள் www.aipmt.nic.in  என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படும்’ என சி.பி.எஸ்.இ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- எம்.நாகமணி