மழலையர் பள்ளி விதிமுறைகள் சரியா?



சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ‘தமிழகத்தில் 760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்படுகின்றன. ஆனால் அந்தப் பள்ளிகள் பெற்றோரிடம் ரூ.30 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன. முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்படும் இந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறைகளை ஜூலை 22ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் எதிரொலியாக அவசர அவசரமாக தமிழக பள்ளிக்கல்வித் துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. இதில் மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிகளாக கட்டிட அமைப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு வசதி, மருத்துவ வசதி என ஒரு பட்டியலை வெளியிட்டது. இந்த விதிமுறைகள் பற்றி கல்வியாளர் ‘பாடம்’ நாராயணன் கூறும்போது, ‘‘மழலையர் பள்ளி என்பதே அங்கீகாரம் இல்லாததுதான். அது ஒரு கல்வியே கிடையாது. இன்றைய சூழலால் பெரும்பாலான பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போக வேண்டிய சூழல் உள்ளது. அதனால் அவர்களுக்கு தங்களது பிள்ளைகளைப் பாதுகாப்பாக விட ஒரு இடம் தேவையாக உள்ளது. இந்த தேவையை மழலையர் பள்ளிகள் நிரப்புவதால் அது அதிகரித்து இருக்கிறது.

இது குறித்து ஆராய 2 வருடங்களுக்கு முன்பாக ஒரு குழு அமைத்தார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. பின்னர் பொதுநல வழக்கு போடப்பட்டதாலும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாலும் அவசர அவசரமாக 14 பக்கத்துக்கு விதிகளை உருவாக்கி குறிப்பிட்ட காலத்துக்குள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்திருக்கிறார்கள்.அடிப்படையில் பார்க்கப்போனால் இது பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரவே வராது. சமூகநலத் துறையின் கீழ்தான் வரவேண்டும். கல்வி என்பது எல்.கே.ஜி.யில் இருந்துதான் ஆரம்பமாகிறது. உண்மையில் பார்க்கப்போனால் இதை, க்ரீச் என்பார்கள். சிலர், நர்சரி, அங்கன்வாடி, பால்வாடி என்பார்கள். ஒரு குழந்தைக்கு விளையாட பத்து சதுர அடி இடம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

தீப்பிடித்தால் அணைப்பதற்கான கருவி இருக்க வேண்டும் என்கிறார்கள். இன்று உள்ள அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் கண்காணிக்கவே ஆள் கிடையாது. எந்த ஒரு குழுவோ ஆய்வாளர்களோ கிடையாது. அப்படி இருக்க புற்றீசல் போல பெருகிவிட்ட மழலையர் பள்ளிகளை யார் ஆய்வு செய்யப்போகிறார்கள்? இந்த விதிமுறைகளெல்லாம் ஒழுங்காக கண்காணிக்கப்படுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

 அரசுப் பள்ளிகள் முறையாக கண்காணிக்கப்படாததால்தான் அவை தரம் தாழ்ந்து கிடக்கின்றன. தனியார் பள்ளிகளை கண்காணிக்க ஆள் இல்லாததால்தான் அவர்கள் தங்கள் விருப்பம் போல் எதையும் தீர்மானம் செய்கிறார்கள். அரசு சொல்வது போல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினால் நல்லதுதான். ஆனால், ஏகப்பட்ட மழலையர் பள்ளிகளை மூடவேண்டியிருக்கும். அதேபோல பல இடங்களில் அரசின் அங்கன்வாடிகளே போதிய வசதிகள் இல்லாமல் கிடக்கின்றன. இவற்றை சமூகநலத்துறையின் கீழ் கொண்டுவந்து முறைப்படுத்த வேண்டும். அதுதான் சரியான தீர்வாக இருக்கும்’’ என்கிறார்.

- எம்.நாகமணி