மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு



‘தடுப்பூசி போடுங்க!’தட்டியெழுப்பும் கருவி

இளம்பிள்ளை மரணங்களை, ஊனங்களைத் தடுக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு குழந்தைக்கும் அந்தந்த பருவத்தில் போட வேண்டிய எல்லா தடுப்பூசிகளையும் சொட்டு மருந்துகளையும் கொடுத்தாக வேண்டும். தெருவுக்குத் தெரு முகாம் அமைத்து இலவசமாகக் கொடுக்கும் போலியோ சொட்டு மருந்தையே தவற விடுகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். இதில் எங்கே மற்றதெல்லாம்? இதற்குத் தீர்வாகத்தான் கருவியொன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பொறியியல் கல்லூரி மாணவிகள்.

‘‘இந்தக் கருவியில தமிழ்நாடு முழுக்க பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் விவரங்களையும் அவங்க பெற்றோர் தொடர்பு எண்களையும் சேமிச்சு வைக்க முடியும். குழந்தையோட வயசைப் பொறுத்து எந்த சமயத்தில் எந்த தடுப்பூசியைப் போடணும்ங்கிற விவரத்தை இந்தக் கருவி கம்ப்யூட்டர் உதவியோட கணக்குப் போட்டு அந்த நாள்ல கரெக்டா ஆட்டோமேட்டிக் வாய்ஸ் கால் மூலமா நினைவுபடுத்தும்!’’ - ஒரே குரலில் அறிமுகம் தருகிறார்கள் மாணவிகள் காயத்ரி மற்றும் கீதா. எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் இறுதி ஆண்டு படிக்கும் இவர்கள்தான் இந்தக் கண்டுபிடிப்புக்குச்
சொந்தக்காரர்கள்.

‘‘போலியோ சொட்டு மருந்தாவது பரவாயில்ல. வருஷத்துக்கு ரெண்டு நாளை அரசாங்கமே நிர்ணயிச்சிருக்கு. அதுக்காக விளம்பரமெல்லாம் பண்ணுது. ஹெபாடைடிஸ் பி உட்பட இன்னும் எவ்வளவோ கொடூர நோய்களைத் தடுக்குற அத்தியாவசியமான தடுப்பூசிகள் இருக்கு. அதெல்லாம் எப்ப எப்ப போடணும்னு ஒரு டாக்டரை கன்சல்ட் பண்ணினாதான் தெரியும். கிராமங்கள்ல எங்கே அதுக்கெல்லாம் விழிப்புணர்வு இருக்கு? அப்படிப்பட்டவங்களுக்கு உதவத்தான் இந்தக் கருவி!’’ என்கிறார் இம்முயற்சிக்கு வழிகாட்டியாக இருந்த ஆய்வுப் பொறியாளர் ராஜபார்த்திபன்.‘‘இதில் ஜி.எஸ்.எம் சிம், மைக்ரோ கன்ட்ரோலர் சிப், நாலு ஸ்விட்ச், மானிட்டர், ஸ்பீக்கர் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கு. ஸ்விட்ச் ஒவ்வொண்ணும் ஒரு செய்தியைத் தரும்.

முதலாவது, குழந்தையைத் தாக்கக் கூடிய தொற்று நோய்களைப் பற்றிச் சொல்லும். ரெண்டாவது அதுக்கான தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து பற்றிச் சொல்லும். மூணாவது, நாலாவது ஸ்விட்ச்கள் உடல் பரிசோதனை பத்தின தகவல்களைத் தரும்!’’ என்கிறார் மாணவி காயத்ரி.மேலும் இதன் பயன்பாடு குறித்து விவரிக்கிறார் மாணவி கீதா...

‘‘தடுப்பூசி போட வேண்டிய நாளுக்கு ரெண்டு அல்லது மூணு நாட்களுக்கு முன்னாடியே இது பெற்றோரை அலர்ட் பண்ணிடும். போலியோ சொட்டு மருந்து கொடுக்குற காலகட்டத்தையும் கரெக்ட்டா இன்ஃபார்ம் பண்ணும். இந்தக் கருவிக்கு ‘ஜி.எஸ்.எம் சார்ந்த குழந்தை பாதுகாப்புக் கருவி’னு பேர் வச்சி, காப்புரிமைக்கு விண்ணப்பிச்சிருக்கோம்!’’ கிட்டத்தட்ட டாக்டர் செய்யும் வேலையை இது செய்யுதே!

- எம்.நாகமணி