80களில் கொடிகட்டிப் பறந்த ‘சிலுக்கு ஸ்மிதா’வின் வாழ்க்கையை வைத்து ‘டர்ட்டி பிக்சர்’ என்ற படத்தை பாலிவுட்டில் ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார்.
சிலுக்கு கேரக்டரில் வித்யா பாலன் நடிக்கும் அந்தப்படத்தின் செய்திகளும், புகைப்படங்களும் வெளியாக, சிலுக்கு அறிமுகமான ‘வண்டிச்சக்கரம்’ படத்தின் கதாசிரியரான வினு சக்ரவர்த்தி கொதித்துப்போனார். தன்னிடம் ஸ்கிரிப்ட்டைக் காட்டி ஒப்புதல் வாங்கிய பின்னரே அந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்க, சிலுக்குக்கு எந்த விதத்திலும் ரத்த சம்பந்தம் இல்லாத வினு சக்ரவர்த்தியிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்று ஏக்தா கபூரும் மறுக்க பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து வினு சக்ரவர்த்தி பேசினார்.
‘‘சிலுக்குக்கும் எனக்கும் ரத்த சம்பந்தம் இல்லாம இருக்கலாம். ஆனா ‘சிலுக்கு’ங்கறது நான் உருவாக்கிய கேரக்டர். அந்தக் கேரக்டரை ஒரு படைப்பாளியா ஆறு வருஷம் நான் என் ரத்தத்திலும் சதையிலும் கலந்து உருவாக்கியிருக்கேன். அதுக்காக தேடி ஆந்திராவிலிருந்து ‘விஜயா’ங்கிற பெண்ணைக்கூட்டி வந்தேன். அவளை ஆறு மாதம் பாதுகாத்து, சோறு போட்டு அவளுக்குள்ள சிலுக்குங்கிற கேரக்டரை சொல்லிக்கொடுத்து ஏற்றினேன்.
ஒரு சாராயக்கடை நடத்தற கேரக்டர்தான் சிலுக்கு. போதை கொண்ட கண்களும், கொஞ்சும் பேச்சுமா இருந்த அந்த கேரக்டரே தொடர்ந்து சிலுக்குங்கிற நடிகையோட கேரக்டராவும் ஆகிப்போச்சு. சிலுக்கு நான் உருவாக்கிய கேரக்டர். அதை சிதைக்கவோ, உருமாற்றவோ யாருக்கும் உரிமை இல்லை.
சிலுக்கு கேரக்டர் சாராய வியாபாரியா இருந்தாலும் தப்பான கேரக்டரா இருக்காது. அவளுக்கு ஆயுதமும், கவசமும் அழகுதான். ஆனா ஏக்தா படத்தோட தலைப்பும், மார்பு தெரிஞ்சும் புட்டத்துக்குக் கீழே புடவை இறங்கியும் இருக்கிற வித்யா பாலனோட படங்களும் பார்க்கும்போது அந்தக் கேரக்டரை சிதைச்சுட்டாங்களோன்னு என் இதயம் அழுது. நான் வளர்த்த மகளை விபசாரத்துக்குக் கூட்டிப்போக யாருக்கும் உரிமை இல்லை. சிலுக்கு என் வளர்ப்பு மகள். அவளோட காட்ஃபாதர் நான். நான் உருவாக்கியவள்தான் சிலுக்குங்கறதுக்கு ‘வண்டிச்சக்கரம்’ சென்சார் ஸ்கிரிப்ட் மூலமாவும், அதுக்கு வழங்கிய சென்சார் சர்டிபிகேட் மூலமாவும் சான்றுகள் இருக்கு. ஏக்தா தன்னோட படத்துக்கு சென்சாருக்குப் போகும்போது அங்கே என் சான்றுகளோடவும், வழக்கறிஞரோடவும் போய் நிப்பேன். அவங்க சொல்லட்டும் எனக்கும், சிலுக்குக்கும் என்ன சம்பந்தம்னு.
உண்மையான சிலுக்கு கேரக்டர் என்னங்கிறதை நான் அடுத்து எடுக்கப்போற ‘சிலுக்கு’ படம் மூலமா சொல்வேன். அதில நடிக்கபோறது நமீதா இல்லை. நமீதாகிட்ட சிலுக்குவுக்கான கண்களோ உதடுகளோ இல்லை. அதனால தீபிகா படுகோன்கிட்ட பேசலாம்னு இருக்கேன்..!’’
வேணுஜி