அழிந்து வரும் தமிழர் இசைக் கருவிகள் தவண்டை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

        ய்யனார், கருப்பர், முனியாண்டி, வீரனார் போன்ற கிராமத்துக் காவல் தெய்வங்களுக்கு வருடந்தோறும் ‘மதலை எடுப்பு’ என்று ஒரு வழிபாட்டுச் சடங்கு நடப்பதுண்டு. வேண்டுதலுக்குப் பிறகு குழந்தை பெற்றவர்கள் குழந்தையைப் போலவே சுடுமண் உருவம் செய்தும், சுவாமி சிலைகளை செய்தும் சுமந்து வருவார்கள். அந்த ஊர்வலத்தின் முன்பு, பெரும் அரிவாள் ஒன்றைச் சுமந்தபடி அருள்வாக்கு பூசாரி மிரட்டலாக நடந்துவருவார்.

 ஊரைவிட்டு ஒதுங்கியிருக்கும் குயவர் தெருவில் இருந்து ஊரின் இன்னொரு எல்லையில் இருக்கும் கோயில் நோக்கி நடக்கும் இந்த மதலை எடுப்பு ஊர்வலத்தில் பறையும் உடுக்கையும் உக்கிரமாக இசைக்கப்படும். அந்த உக்கிரத்தில் அருள்வாக்கு பூசாரி மட்டுமின்றி மதலை சுமக்கும் குழந்தைகள் கூட அருள்வந்து ஆடும் காட்சி, அச்சப்படுத்தும்.

மாரியம்மா, ராக்கம்மா, ஏலாத்தம்மா, வெக்காளியம்மா போன்ற பெண்தெய்வங்களுக்கான மது எடுப்பு, தீச்சட்டி எடுப்பு, குண்டமிறங்குதல் போன்ற நிகழ்வுகளின்போது உக்கிரமூட்ட இசைக்கப்படும் தோற்கருவிதான் தவண்டை.

இடையில் சுருங்கி, இரு முனைகளிலும் விரிந்து உடுக்கை அமைப்பிலேயே இருந்தாலும், அதைவிட அளவில் பெரியது இக்கருவி. இருமுகக் கருவி என்றாலும் ஒருபுறத்தில் மட்டுமே வாசிக்கப்படும். உடுக்கையைப் போலன்றி, தக்கையைப் போல குச்சியைக்கொண்டே வாசிக்கப்படுகிறது.

இக்கருவியை தேவ வாத்தியம் என்கிறார் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தவண்டை கலைஞர் கணேசன். நடராஜருக்கு உகந்த இசைக்கருவி இது. நடராஜர் நடனம் புரியும்போது, பிரம்மா தாளம் வாசிக்க, விஷ்ணு தன் முதுகெலும்பை உருவியெடுத்து, அதைக்கொண்டே தவண்டை இசைத்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக, முதுகெலும்பைப் போலவே வளைந்த மஞ்சள் அரளிக்குச்சியைக் கொண்டு தவண்டையை இசைக்கிறார்கள். இந்த புராண நம்பிக்கையால் இது விஷ்ணுவோடு தொடர்புடையதாக இருப்பதால், சில பெருமாள் கோவில்களிலும் தவண்டை வாசிக்கும் வழக்கம் இருக்கிறது.  

உறுதியான பலா மரத்தின் வைரக்கட்டையைக் கொண்டு இக்கருவியின் உடல்பகுதி செய்யப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தவண்டை இசைக்கப்படுகிறது. உடுக்கையின் தோலைவிட கனத்த ஆட்டுத்தோல் கொண்டு முகங்கள் வார்க்கப்படுகின்றன. தோளில் தொங்கவிட்டுக்கொண்டே வலது கையால் இக்கருவியை இசைக்கிறார்கள்.

இதை இசைக்கப் பயிற்சிகள் ஏதும் தேவையில்லை. மேலோட்டமாக வாசிக்கும்போது தொய்வான சத்தமும் கொங்காரத்தை அழுத்திப் பிடித்து வாசிக்கும்போது வீரியமான சத்தமும் எழும்பும். பவானி சங்கமேஸ்வரர், கும்பகோணம் சக்கரபாணி, கும்பேஸ்வரன் கோயில்களிலும் இக்கருவி இசைக்கப்படுகிறது. மதுரையில் அஷ்டபாலகருக்கு எட்டுத்திக்கிலும் பலிசாதம் படைக்கும்போது தவண்டை தனிக்கருவியாக வாசிக்கப்படும். நவராத்திரி அன்று கருவறைக்கு முன்னுள்ள பிரகாரம் வரை செல்லும் பெருமையும் இக்கருவிக்கு உண்டு. இதுதவிர, மார்கழி மாதம் நடக்கும் எண்ணெய்க்காப்பு உற்சவத்திலும் இக்கருவி முதன்மையாக வாசிக்கப்படும்.

‘‘எண்ணெய்க்காப்பு உற்சவம் பத்து நாள் நடக்கும். தினமும் மாலை 5 மணிக்கு, மீனாட்சிக்கு தைலக்காப்பு போட்டு கண்ணாடி, சிக்குவாரி, சீப்பு, சந்தனப்பேலா, குங்குமச்சிமிழ், மருந்துப்பேலா மாதிரி எல்லா மங்கலப்பொருட்களையும் வச்சு அர்ப்பணிப்பாங்க. கிரீடம் இல்லாம, அம்மன் தலைமுடி தவழத் தவழ காட்சி தருவா. தைலக்காப்பு முடியும் வரைக்கும் நாதஸ்வரத்துக்கு பக்க இசைக்கருவியா தவண்டைதான் வாசிப்போம்’’ என்கிறார் கணேசன்.

தினமும் திருக்கால சந்தி, பூஜைகளில் நாதஸ்வரம், தாளத்தோடு சேர்த்து துணைக்கருவியாக தவண்டை வாசிக்கப்படும்.   ஸ்ரீரங்கத்தில் தவண்டையை ‘வீரவண்டி’ என்கிறார்கள். இங்கு இக்கருவியை கேசவன் என்பவர் இசைக்கிறார். பெருமாளுக்கு மங்கள ஆரத்தி செய்வதற்காக திரித்தட்டு எடுக்கும் வேளையில் சேமங்கலத்தோடு தவண்டை இசைக்கப்படுகிறது. முக்கிய வழிபாடுகளில்  இசைக்கப்படும் 18 வழிபாட்டு வாத்தியங்களில் தவண்டையும் இடம்பெற்றுள்ளது.

கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலில் தவண்டையை ‘எச்சரிக்கை’ என்கிறார்கள். சுவாமி புறப்பாட்டுக்கு முன் அறிவிப்பு செய்யவும், பூஜைகளின்போதும் தனித்தனி தொனிகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது. சில சிவன், விஷ்ணு ஆலயங்களில் சூலபாணி, செல்வர் உலாவின்போது தவண்டை வாசிக்கும் வழக்கம் இருக்கிறது.

உடுக்கையின் தொடர்ச்சியாகவும், இலக்கண வரம்புடைய பேரிசை தோற்கருவிகளுக்கு முந்தைய வடிவாகவும் கருதப்படும் இந்த இசைக்கருவி, அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர் அடையாளங்களில் ஒன்றாக மாறிவருகிறது.
வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம், நம்பிராஜன்