ஜொள் ரசிகர்களின் விசாரணை...களை கட்டுது 2வது ரவுண்ட்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       ல்லா அணிகளும் தலா ஒரு லீக் ஆட்டத்தில் விளையாடி முடித்த நிலையில் 2வது ரவுண்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. கத்துக்குட்டிகளிடம் ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் கால் இறுதி வாய்ப்பு காலை வாரிவிடும் என்பதால், பெரிய அணிகள் கையைப் பிசைந்து கொண்டுள்ளன.

சேப்பாக்கத்தில் நியூசிலாந்து - கென்யா மோதிய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம். சாவகாசமாகப் போய் 2வது பாதி ஆட்டத்தை ரசிக்கலாம் என்று திட்டமிட்டவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. பலர் ஸ்டேடியம் வாசலை மிதிப்பதற்குள்ளாகவே போட்டி முடிந்துவிட்டது. கென்யா வெறும் 69 ரன்னில் சுருள, நியூசிலாந்து ஓப்பனர்கள் 8 ஓவரில் கதையை முடித்துவிட்டார்கள். டி20 மாதிரி ஆடியிருந்தால்கூட கென்யா இதைவிட பெரிய ஸ்கோர் அடித்திருக்கலாம். ‘ஆழ்வார்பேட்டை அணியை இறக்கியிருந்தால்கூட அமர்க்களப்படுத்தி இருப்பார்கள்’ என்று அங்கலாய்த்தார் ஒரு சென்னை ரசிகர்!
Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
பளபளவென ஜொலித்த ஸ்டேடியத்தில் ஐந்தாயிரம் ரசிகர்களுக்கும் குறைவாகத்தான் வந்திருந்தார்கள். எல்லா டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று முதல் நாளே ஹவுஸ்புல் போட்ட நிலையில், ஸ்டேடியம் வெறிச்சோடியது வெறுப்பேற்றியது. பெரும்பாலான டிக்கெட்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் சங்கம், கிளப் உறுப்பினர்கள், ஸ்பான்சர்கள் என்று கோட்டா சிஸ்டத்தில் ஒதுக்கப்படுவதால் வந்த வினை இது. ஒதுக்கப்படும் டிக்கெட்களும் ஒழுங்காக விநியோகிக்கப்படுவதில்லை.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள ஃபைனலுக்கு, இப்படி ஒதுக்கீடு எல்லாம் போக வெறும் நாலாயிரம் டிக்கெட் மட்டுமே அப்பாவி ரசிகர்களுக்கு ‘போனால் போகிறது’ என்று ஒதுக்கி இருக்கிறார்கள். அதிலும் ஆயிரம் டிக்கெட்கள் ஆன்லைனில் விற்கப்படும் என்ற அலட்டல் அறிவிப்பு வேறு. ஒரே நேரத்தில் ஒரு கோடி ரசிகர்கள் மொய்த்ததில் அந்த இணையதளமே முடங்கிப் போனது. பெங்களூரில் இந்தியா & இங்கிலாந்து லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்டை வாங்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததில் ஒரே களேபரம். போலீசார் தடியடி நடத்தும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம். இப்படி வெறித்தனமான ரசிகர்களுக்கு அதிக டிக்கெட்களை ஒதுக்காமல், கிளப்களுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கும் மூட்டை கட்டி அனுப்புவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

கொல்கத்தா ஈடன் கார்டனுக்கு வேறு பிரச்னை. இந்தியா விளையாடுவதாக இருந்த ஒரே போட்டியையும் பெங்களூருக்கு பைபாஸ் செய்துவிட்டதால் ரசிகர்கள் செம மூட் அவுட். மற்ற அணிகள் ஆடும் ஆட்டத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கில் அழ அவர்கள் தயாராக இல்லை. ரூ.750க்கு மேல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை என்று கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கிறது பெங்கால் கிரிக்கெட் சங்கம். இந்த டிக்கெட் விஷயத்தில் ஐசிசி ஏதாவது நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.

கென்யாவை தொடர்ந்து கனடாவும் பரிதாபமாக மண்ணைக் கவ்வியதால், அடுத்த உலக கோப்பையில் கத்துக்குட்டி அணிகளுக்கு கல்தா கொடுப்பது என்ற ஐசிசி முடிவுக்கு ஆதரவு அதிகரித்தது. ஒரு சிலர் இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று சிபாரிசு செய்கிறார்கள். இங்கிலாந்து அணிக்கு நெதர்லாந்து தண்ணி காட்டியதைப் பார்த்தபோது அதில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. அந்த அணியின் டென் டஸ்சேட் ஆல்ரவுண்டராக அமர்க்களப்படுத்தினார். ஐபிஎல் போட்டி ஏலத்தில் இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தொகையைவிட 3 மடங்கு அதிகமாக கொடுத்து (சுமார் ரூ.70 லட்சம்) கொல்கத்தா அணி வாங்கியதை நியாயப்படுத்தி இருக்கிறார். கனடாவின் ரிஸ்வான் சீமாவும் தனது அதிரடியால் ரசிகர் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இவருக்கும் ஐபிஎல் டி20ல் பிரகாச எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்தி நடிகை மிங்க் சிங் தனது முதுகில் அழகாக ஓவியம் தீட்டிக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை விழிபிதுங்க வைத்தார். உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது, தங்கள் அணி கோப்பையை வென்றால் தலைநகர வீதிகளில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து பராகுவே மாடல் அழகி லரிஸா ரிகுல்மே பரபரப்பூட்டியது ஞாபகம் வருகிறது. இந்தியாவுக்காக இப்படி யாராவது அறிவித்திருக்கிறார்களா என்று ஜொள் ரசிகர்கள் ஆவலோடு விசாரிப்பதாகக் கேள்வி!

ரன் அவுட் ஆன ஆத்திரத்தில் ஆஸி. கேப்டன் பான்டிங் டிவியை அடித்து நொறுக்கியது, இலங்கை அணியின் உலகக்கோப்பைப் பாடலுக்கு தடை ஆகியவை லேசான சலசலப்பூட்டின. மற்றபடி பெரிய அளவில் சர்ச்சை எதுவும் கிளம்பாதது ஆறுதலான விஷயம். இந்திய அணி ஆட்டங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அம்சம். இரண்டாவது ரவுண்ட் ஆரம்பித்துவிட்ட நிலையில் எல்லா அணிகளும் இப்போதே புள்ளிப் பட்டியல், ரன் ரேட் என்று கணக்குப்போடத் தொடங்கிவிட்டன. அடுத்த வாரத்திலிருந்து அனல் பறக்கும்!
பா.சங்கர்
படங்கள்:முத்துகணேஷ், பரணி