பொறுப்பின்மை, ரகளை என்றாலே கல்லூரி மாணவர்கள் மீது கறை படியும். பஸ் தினக் கொண்டாட்டங்களால் ஒட்டுமொத்தமாக தங்கள் மீது சேற்றை வாரி அப்பிக்கொண்டிருக்கிறார்கள் சில மாணவர்கள். புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் மது பாட்டில்களும் சிகரெட்டும். பெண்களை கேலி செய்வது, பேருந்துகளை உடைப்பது, நடத்துனர், ஓட்டுநர்களைத் தாக்குவது, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்வது என மாணவ சமுதாயத்தையே களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன சிலரின் கொண்டாட்டச் செயல்பாடுகள்.
‘‘மற்றவர்களைப் பாதிக்காத வகையில் யாரும் எந்த விழாவையும் கொண்டாடலாம். கொண்டாட்டம் என்கிற பேரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ எனக் குமுறுகிறார்கள் சென்னைவாசிகள்.

‘பஸ் தினம் கொண்டாடி மற்றவர்களை திண்டாட வைத்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்திருக்கிறார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ்.
‘‘மாணவர்களுக்கென தனிச்சட்டம் எதுவும் கிடையாது. அவர்களுக்கு எல்லையற்ற சுதந்திரத்தையும் யாரும் தந்துவிடவில்லை. கொண்டாட்டம் என்ற பெயரில் பஸ்ஸை சேதப்படுத்துகிறார்கள். பெண்களை கேலி செய்வது, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து விபத்துகளை ஏற்படுத்துவது என பஸ் தினம் கொண்டாடுவதால் பல வகைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. பேருந்துகளைச் சேதப்படுத்தி ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். 50 ரூபாய்க்கு மேல் பொதுச் சொத்துக்குச் சேதாரம் உண்டாக்கினாலே 5 வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.
இவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? அந்த இழப்பையும் அரசுதானே ஏற்கவேண்டும்? ஒருநாள் கொண்டாடினால் பரவாயில்லை. ஒரே கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு ரூட்டுக்கும் ஒவ்வொரு நாள் கொண்டாடுகிறார்கள். சந்தோஷங்களை ஓட்டல்களிலும் கிளப்களிலும் கொண்டாட வேண்டியதுதானே? எல்லாவற்றுக்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. அதை மீறும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், அதை ஊக்குவிப்பதற்குச் சமம்.
கேமரா பொருத்தி கண்காணித்தாலே தப்பு செய்பவர்களைக் கண்டுபிடித்து விடலாம். அதை ஏன் அரசு செய்ய மறுக்கிறது? தனியார் கல்லூரி மாணவர்கள் இதுபோல நடந்து கொள்வதில்லை. காரணம், கல்லூரி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துவிடும். மற்ற கல்லூரிகளில் கட்டுப்பாடுகள் இல்லாததால் இதுபோன்ற தவறுகளைச் செய்கிறார்கள். பஸ் தினத்துக்கு தடை விதிப்பதோடு, ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இனியும் அரசு இது போன்ற விஷயங்களில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது’’ என்கிறார் சுரேஷ்.
இந்திய மாணவர் சங்க அகில இந்திய இணைச்செயலாளர் செல்வாவிடம் பேசினோம்
‘‘பஸ் தினம் கொண்டாடும் விதத்தை நாங்க ஏத்துக்கல. இது 20-30 வருடங்களுக்கு முன் உருவான ஒரு கலாசார விழா. கல்லூரி ரூட்ல ஓடுற பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள், பொதுமக்களிடம் நட்பை உருவாக்கி புரிந்துணர்வை மேம்படுத்துறதுதான் அப்போ நோக்கமாக இருந்தது. காலப்போக்குல இதன் தன்மை மாறிப்போயிடுச்சு. இதுக்குக் காரணம் அரசுதான். ஒருபக்கம் எங்களைப் போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து கோரிக்கைகளுக்காகப் போராடும்போது மாணவர்கள் மீது லத்தி சார்ஜ் பண்றாங்க.
இன்னொரு பக்கம் தேவையில்லாத விழாக்களில் மக்களுக்கு இடையூறு செய்யும் மாணவர்களின் செயல்களை வேடிக்கை பார்க்கிறது அரசு. இதுபோன்ற அபத்த விழாக்களுக்கு லோக்கல் அரசியல்வாதிகள் ஊக்கம் கொடுக்கிறார்கள். மதுபானங்கள் உள்பட விழாச்செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவும் அரசின் தயவோடு நடப்பதுதான் கொடுமை. அடிப்படைக் கோரிக்கைகளுக்காக மாணவர்கள் ஒன்றுகூடி அரசுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்கிற காரணத்தால் இதுபோன்ற கேளிக்கைகளை அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது. எல்லா மாணவர்களும் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஐம்பது அறுபது மாணவர்கள் கூடி சிறு குழுவாகத்தான் ஈடுபடுகிறார்கள்.
முன்பெல்லாம் கல்லூரி கலாசார விழாக்கள் மூலம் திறமையை வெளிப்படுத்தி நல்ல வாழ்க்கைச் சூழலை மாணவர்கள் அமைத்துக்கொண்டனர். அதுபோன்ற விழாக்கள் நிறுத்தப்பட்டு விட்டன. கலாசாரம், திறமை சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் இதுபோன்ற யாருக்கும் பயனில்லாதவற்றில் கவனம் செல்கிறது.
கல்லூரி கலாசார விழாக்களை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். மாணவர் தேர்தலை நடத்த வேண்டும். அவர்களின் திறமையை சரியாகப் பயன்படுத்தும்போதுதான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும். இதை சட்டம் , ஒழுங்கு பிரச்னையாகப் பார்க்கக்கூடாது’’ என்கிறார் செல்வா.
ஆர்.எம்.திரவியராஜ்