நடு நிசி நாய்கள் சினிமா விமர்சனம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

உளவியல் ரீதியான குற்றங்களை உள்ளடக்கி ஒரு சைக்கோ த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். அதை உணரவைக்கும் முயற்சியில் அவர் கையாண்டிருக்கும் சம்பவங்கள் அதைவிட பயங்கரம்.

உளவியல் சிக்கல் உள்ளவர்களிடம் அப்பாவிகள் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் என்பதைச் சொல்கிற படம் இது. அப்படி எளிதில் ஜீரணிக்க முடியாத பாலியல் உணர்வுகளுள்ள மனிதனால் எட்டு வயதிலேயே அந்தத் தொடர்புகளில் சிக்கிக்கொள்ளும் அவரது மகன்தான் ஹீரோ. அவனை அந்தப் பாதக உலகிலிருந்து மீட்கும் பக்கத்துவீட்டுப் பெண்மணியே அவனை வளர்க்கும் பொறுப்பையும் ஏற்க, அந்தப்பெண்மணியிடமிருந்தே தொடங்குகிறது ஹீரோவின் கொடூர செயல்கள். அதன் தொடர்ச்சியான விளைவுகள் மீதிக்கதை.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineவீரா என்ற புதுமுக ஹீரோ அந்தப் பாத்திரத்துக்குள் இயல்பாகப் பொருந்தியிருக்கிறார். பதிமூன்று வயதிலிருந்து 22 வயதுவரையிலான உடல் தோற்றங்கள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளில்  அதிலும் உளவியல் சிக்கலுக்குள்ளானவராக அற்புதப்படுத்தியிருக்கிறார். அவரது சிறுவயதுத் தோற்றத்தில் வரும் சிறுவர்களின் தேர்வும், நடிப்பும் நன்று. அவரை வளர்க்கும் பெண்மணியாக வரும் ஸ்வப்னா நல்ல அறிமுகம். தான் செய்வது சரியா, தவறா என்று தெரியாமல் அவர் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்களுக்கு இயக்குநருக்குத்தான் அவர் நன்றி சொல்ல வேண்டும்.

ஏ.சி.பியாக வரும் தேவாவும் ஒரு புதுமுகம்தான். ஆனால் அறிமுகப்படம் என்றே தெரியாத வகையில் கேரக்டராக மாறியிருக்கும் அவரும் கவனிக்க வைத்திருக்கிறார். இவர்களுடன் நமக்குத் தெரிந்த ஒரே முகமாக சமீரா ரெட்டி. இரவிலேயே வரும் அவர் பாதி லைட்டிங்குகளிலும், பாவப்பட்ட முகத்துடனும் வருவது... அவரை எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. ஒலிகளால் மட்டும் நிரப்பப்பட்ட பின்னணி இசை இல்லாத முயற்சியும் இயக்குனரை கைகுலுக்கிப் பாராட்ட வைக்கிறது. இப்படி தரத்தில் உயர்ந்து நின்றாலும் படத்தின் கருத்தில் முரண்பட்டு நிற்கிறார் இயக்குநர்.

படம் ஆரம்பித்து முக்கால் மணி நேரத்துக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது. இன்னமாதிரியான படம் என்று தெரிந்து கொள்ளாமல் தியேட்டருக்குள் வருபவர்களின் நிலையும், கிட்டத்தட்ட ஹீரோவின் பிடியில் சிக்கிக்கொண்ட அப்பாவிகளின் நிலையாகத்தான் இருக்கும். அதேபோல் எந்த உண்மைகளையும் பொதுவில் சொல்வதற்கென்று சில எல்லைகள் இருக்கின்றன. அதைத் தாண்டும்போது, அதுவும் ஒரு சமூகக் குற்றமாகத்தான் ஏற்றுக்கொள்ளப்படும்.

பெற்ற தந்தையே மகனுடன் உறவு வைத்துக் கொள்வது, ‘அம்மா...’ என்றழைக்கும் பெண்ணிடம் மகன் போன்ற இளைஞன் அத்துமீறுவது என்று ஜீரணிக்கவே முடியாத கலாசார அதிர்ச்சிகளை நியாயப்படுத்த முடியவில்லை. உண்மையிலேயே அப்படி எங்கோ நடந்திருந்தாலும், அதைப் பொதுவில் வைக்க வேண்டிய காரணம் எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை.
‘உளவியல் சிக்கல் கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, சிகிச்சையளிக்கப்பட வேண்டியவர்கள்...’ என்ற கருத்தைக் கடைசியில் கூறும் இயக்குநர், அந்த உண்மையை படம் பார்ப்பவர்களும் உணரும் அளவில் ஹீரோவின் பரிதாப நிலையை விளக்கியிருக்க வேண்டும்.

 ஆனால் க்ளைமாக்ஸிலும் மனநலம் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணைப் பார்த்து கபடமாகச் சிரிக்கும் நிலையில், அவன் மேல் எந்தப் பரிவும் ஏற்பட வழியே இல்லை. கடைசியில் போலீஸிடம் வாக்குமூலம் அளிக்கும்போதும் தன்னை வளர்த்த பெண்மணி தன்னைப்பற்றி எந்த புகாரும் கூறாமல் போனது தன்னுடன் ‘படுத்த’ குற்ற உணர்ச்சியினால்தான் என்கிறார். அந்த அளவுக்குத் தெளிவான மனநிலையில் இருக்கும் அவரை எப்படி உளவியல் பிரச்னையுள்ளவர் என்று எடுத்துக்கொள்ள முடியும்..?

இதன் அடுத்த பாகத்தையும் எடுத்துவிடுவாரோ என்று இயக்குநரை சந்தேகிக்க வைக்கிறது இறுதிக்காட்சி. அப்படி ஏதும் ஐடியா இருந்தால் அவருக்கு ஒரு வேண்டுகோள். ‘இந்த நாய்களைப் பார்த்ததே போதும். டோன்ட் மேக் மோர் நாய்ஸ்..!’
குங்குமம் விமர்சனக்குழு