மண்பானை ஏர்கூலர்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

சிக்கனமான மின்சார செலவில், மண்பானை ஏர்கூலர் துணையோடு, ஜில்லென்ற அறைக்குள் இருந்தபடி, கோடையை சமாளிக்கலாம்!

    ‘‘இந்த பூமி தாத்தா, பாட்டி சொத்து இல்ல. எதிர்காலத் தலைமுறைக்கு சொந்தமானது. பூமியை மாசுபடுத்தாம நம்ம சந்ததிகளுக்கு விட்டுட்டுப்போறது நமது கடமை. பூமி வெப்பநிலை உயர்வதில் ஏர்கண்டிஷனுக்கும் பங்கு உண்டு. ஏர்கூலராலும் பல பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கு. அதை மனதில் வைத்துத்தான் எந்த தீங்கும் ஏற்படுத்தாத மண்பானை ஏர்கூலரை உருவாக்கினேன்’’  அக்கறையோடு பேசுகிறார் மண்பானை ஏர்கூலரை கண்டுபிடித்துள்ள மாணவி சத்யப்ரியா!

‘‘சென்னையில நடந்த சம்பவம் அது. ஒரு தாய் தன்னோட குழந்தையை ஏசி ரூம் உள்ளே விட்டுட்டுப் போயிருக்காங்க. ஏசில இருந்து கேஸ் லீக் ஆகி குழந்தை இறந்து போச்சு. இப்படி ஏசியால ஏற்பட்ட விபத்துகள் இன்னும் நிறைய இருக்கு... ஏசி பயன்படுத்துறதால குளோபல் வார்மிங் ஏற்பட்டு இந்த பூமிக்கே ஆபத்து வரக்கூடிய சூழல். அதே நேரத்தில் இறுக்கமான சூழலிலும் வசிக்க முடியாது. இதற்கு தீர்வாக இந்த மண்பானை ஏர்கூலர் இருக்கும்’’ என்கிற சத்யப்ரியா மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 மாணவி.

“மண்பானை இயற்கையிலேயே குளிர்ச்சியானது. ஏர்கூலரில் உள்ள மோட்டார் இயங்கும்போது, பானையில் உள்ள தண்ணீர் குழாய் மூலம் உறிஞ்சப்பட்டு இயந்திரத்தின் உள்ளே வளைவு வடிவ தாமிர பைப்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்போது ஏர்கூலர் உள்ளே இயங்கும் மின்விசிறி மூலம் நமக்கு குளிர்ந்த காற்று கிடைக்கிறது. பின்னர் இந்தத் தண்ணீர் மற்றொரு குழாய் மூலம் மீண்டும் மண்பானைக்குள் செல்கிறது. இது மறுசுழற்சி மூலம் தொடர்ந்து இயங்குவதால் தொடர்ச்சியாக குளிர்ந்த காற்று கிடைக்கும்.

இந்த ஏர்கூலரில் வாயு ஏதும் நிரப்பப்படுவதில்லை. தண்ணீரை திரும்பத் திரும்ப ஊற்ற வேண்டிய அவசியமும் இல்லை. தண்ணீர் அதிலேயே தேங்கி, அதனால் காற்றோடு சேர்ந்து துர்நாற்றம் வீசும் அபாயமும் இல்லை. ஏர்கூலருக்குள் இருக்கும் தண்ணீரில் கொசுக்கள் வளர்ந்து நோய்களைப் பரப்புமோ என்ற பயமும் தேவையில்லை. மிதமான குளிர்ச்சூழலை அறைக்குள் தரும் என்பதால், தலைவலியோ, மூச்சு இரைப்போ ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் சுவர்களும்
பாதிக்கப்படு வதில்லை. புவி வெப்பமாவதையும் தடுக்க முடியும். குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய்க்குள் இதைத் தயாரிக்க முடியும். அறையோட அளவுக்குத் தகுந்தாற்போல பெரிய மண்பானையை பயன்படுத்தலாம்’’ என்கிற சத்யப்ரியாவின் இந்தக் கண்டுபிடிப்பு மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல பரிசுகளைத் தட்டி வந்திருக்கிறது!

‘‘சென்னையில் நடந்த 98வது அகில இந்திய அறிவியல் மாநாட்டுல கலந்துக்க மத்திய அரசு அழைத்தது. அங்கே இந்த மண்பானை ஏர்கூலரை பார்த்த அமர்த்தியா சென், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட நோபல் பரிசு வாங்கின 6 அறிஞர்கள் இதைப்பத்தி ஆர்வத்தோட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க. ‘உண்மையிலயே இது நல்ல கண்டுபிடிப்பு’ன்னு பாராட்டினாங்க. ‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையிலும், புவி வெப்பமாவதைத் தடுக்கும் வகையிலும், மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காத வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மண்பானை ஏர்கூலருக்கு காப்புரிமை வழங்க விண்ணப்பியுங்கள்’னு அறிவுறுத்தினாங்க’’ என உற்சாகப்படுகிற சத்யப்ரியா, காப்புரிமைக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்.

‘‘ஏசிக்கு அதிக மின்சாரம் செலவாகும். குளோபல் வார்மிங் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். ஏர்கூலரிலும் நிறைய சிக்கல்கள் இருக்கு. அதில் காற்று தண்ணீரோடு கலந்து வருவதால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல், சைனஸ் பிரச்னைகள் ஏற்படும். பாக்டீரியாக்கள் உருவாகி நோய்களுக்கும் வழி வகுக்கும். சுவர்களுக்கும் பாதிப்பு. இரும்புப்பொருட்களும் துருப்பிடித்து விடும். மண்பானை ஏர்கூலரில் எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்த 150 வருஷத்துல சுற்றுப்புறச்சூழல் நிறையவே அசுத்தமாக வாய்ப்பு அதிகமா இருக்கு. நாம சுகமா வாழ சுயநலமா இருந்துட்டு நம்ம சந்ததிக்கு என்னத்தை விட்டுட்டுப்போகப்போறோம்? அதுக்கு இந்த கண்டுபிடிப்பு கொஞ்சமாவது உதவும்’’ என வார்த்தைகளில் குளிர்ச்சியாகப் பேசுகிறார் சத்யப்ரியா.
ஆர்.எம்.திரவியராஜ்
படங்கள்: மணிகண்டன்