இரட்டைக் குழந்தைகள் ஒரே நாளில் பிறக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதிகப்படியாக 85 நாள் இடைவெளியிலும் இரட்டையர்கள் பிறந்திருக்கின்றனர். ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகளை இரட்டைப்பிறவிகள் என்பார்கள். தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு முட்டையுடன் ஒரு விந்தணு சேர்ந்து உருவாகும் கருவிலிருந்து இரண்டு குழந்தைகள் பிறக்குமானால் ‘மோனோஸைகோடிக்’ என்றும், இரண்டு தனித்தனி கருமுட்டைகளுடன் இரண்டு விந்தணுக்கள் மூலம் இரு குழந்தைகள் உருவாகிப் பிறக்குமானால் ‘டைஸைகோடிக்’ என்றும் மருத்துவ மொழியில் சொல்லுவார்கள். மோனோஸைகோடிக் குழந்தைகள் ஒரே ஜாடையிலும் உடல் அமைப்பிலும் இருப்பார்கள்.
மாடுகளுக்கு அதிக பால் சுரப்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுவதுண்டு. அந்த பசுக்களின் பாலைக் குடிக்கும் பெண்களுக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம். மகப்பேறுக்காகப் பெண்கள் உட்கொள்ளும் மருந்துகளும் இரட்டையர் பிறப்புக்குக் காரணமாக இருக்கலாம். செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்களுக்கும் இந்த வாய்ப்பு உண்டு.
சராசரியாக உலக மக்களில் ஆயிரம் பேருக்கு 8 என்ற விகிதத்தில் இரட்டையர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் ஆயிரம் பேருக்கு நான்கு பேர்தான் இரட்டையர்கள். அச்சு அசலாக ஒரே சாயலில் இருக்கும் இரட்டைப் பிறவிகள் உலகெங்கும் தோராயமாக 1 கோடிக்கும் அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் இரட்டைப் பிறவிகளில் 22 சதவிகிதம் பேருக்கு அப்பழக்கம் இருக்கிறது. என்னதான் ஒரே ஜாடையில் இருந்தாலும், இரட்டைப் பிறவிகளின் கைரேகை ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும்.

பிரேசில் நாட்டில், அர்ஜென்டினா எல்லையில் உள்ள லின்ஹா சௌ பெட்ரோ என்ற சிறு குடியிருப்புப்பகுதியில் 10 சதவிகிதம் பிரசவங்கள் இரட்டைக்குழந்தைகளே! காரணம் அங்கு வாழும் மக்களின் பரம்பரை ஜீன்கள்! உலக அளவில் மிக அதிகமாக இரட்டைப்பிறவிகள் தென்மேற்கு நைஜீரியா மற்றும் பெனின் பகுதியில் வசிக்கும் ஆப்பிரிக்க யோரூபா இன மக்களில்தான் இருக்கின்றனர். இங்கே ஆயிரத்தில் 45 பிரசவங்களில் இரட்டையர். ஹார்மோனைத் தூண்டிவிடும் ‘யாம்’ கிழங்கை அதிக அளவில் இவர்கள் உண்பதே காரணம். இது சர்க்கரைவள்ளிக்கிழங்கு போல இருக்கும்.
அரிதான சில பிரசவங்களில் இரட்டைப் பிறவிகள் ஒருவருடன் ஒருவர் ஒட்டிப் பிறப்பதுண்டு. இம்மாதிரி பிறப்பவர்களை சயாமிய இரட்டையர்கள் என்பார்கள். சயாமில் (இப்போதைய தாய்லாந்து) 1811ல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ச்சாங் மற்றும் எங்பங்கர் மிகவும் பிரபலம். அதனால் ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களை சயாமிய இரட்டையர்கள் என்று கூறுவார்கள். சயாமிய பூனைகளை வளர்ப்பவர்கள் இரட்டையாகத்தான் வளர்ப்பார்கள்! ஒட்டிப் பிறக்கும் இரட்டைகள் 50 ஆயிரம் , ஒரு லட்சம் பிரசவங்களுக்கு ஒன்று என்ற விகிதத்திலேயே நிகழ்கின்றன. இம்மாதிரி ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களுக்கு மூளை, இதயம் போன்ற மிக முக்கிய உறுப்புகள் பொதுவாக இருந்தால் அறுவை சிகிச்சை மிக சிக்கலானதாக இருக்கும்.
விலங்குகளிலும் மான், யானை போன்றவை அவ்வப்போது இரட்டைக் குட்டிகள் ஈனுவது உண்டு. 1975வாக்கில் முதுமலை யானை முகாமில் தேவகி என்ற பெண் யானை இருந்தது. அது இரண்டு ஆண் குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றது. அப்போது நீலகிரியில் பணியாற்றிய உயர் போலீஸ் அதிகாரியின் மனைவியும் பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைகளுக்கு சுஜய், விஜய் எனப் பெயரிட்டனர். அவர்களை நினைவு
கூறும் வகையில் யானை ஈன்ற இரு ஆண் குட்டிகளுக்கும் சுஜய், விஜய் என்றே பெயரிட்டனர்.சதுப்புநிலக் காடுகளில் வாழும் சில தாவரங்களின் விதைகள் மரத்தில் இருக்கும்போதே முளைத்து, நாற்றாகி, பின்னர் பூமியில் ரெடிமேட் செடியாக விழுந்து முளைக்கும். இதை விவிப்பேரி என்பார்கள். இதற்குக் காரணம் கீழே உள்ள உப்பு நீரில் விதைகள் விழுந்தால் முளைக்காது என்பதுதான். அபூர்வமாக ஒரே விதையில் இருந்து இரட்டைச்செடிகள் முளைப்பதும் உண்டு.
தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி என்று ஒன்று உண்டு (கிழவி அல்ல!). கிளவி என்றால் சொல் என்று அர்த்தம். இரண்டாக உள்ள அச்சொற்களைத் தனியே பிரித்தால் பொருள் இருக்காது. உதாரணம், ‘நீர் சலசல என்று ஓடியது’. இதில் ‘சலசல’ என்பது இரட்டைக்கிளவி.
சரி! இரட்டைக்கிழவிகளைப் பற்றிய ஒரு செய்தியைப் பார்ப்போமா? ஆமாம்... இரட்டையராகப் பிறந்து நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்நாள் கொண்ட இரட்டைக்கிழவிகள்! பெல்ஜியத்தில் உள்ள லியெஜ் என்னும் ஊரில் 1910 அக்டோபர் 2ல் பிறந்த இவர்கள் தம் நூறாவது வயதை 2010ல் இனிமையாகக் கொண்டாடினார்கள். இவர்களது பெயர்கள் கேப்ரியல் வோடெஹெமெய் & மேரி ஹென்ட்ரிக்ஸ்.
சிலர் இரட்டையராக இருக்க மாட்டார்கள் ஆனால், இணைந்தே தங்கள் துறையில் வெற்றிக்கொடி நாட்டியிருப்பார்கள். அவர்களையும் செல்லமாக இரட்டையர்கள் என்று அழைப்பது வழக்கம். நகைச்சுவையில் கலக்கிய லாரல் - ஹார்டி உண்மையில் இரட்டையர் அல்ல. ஆனால், ‘காமெடி இரட்டையர்’ என்றே புகழப்பட்டவர்கள். இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர் - கணேஷ் போன்றவர்கள் இணைந்து பணியாற்றியதால் ‘சங்கீத இரட்டையர்’ என அறியப்பட்டனர். சுரேஷ், பால கிருஷ்ணன் இருவரும் தங்கள் பெயர்களின் முதலெழுத்தை வைத்து ‘சுபா’ என்ற புனைபெயரில் ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். திரைப்படத் துறையிலும் கால்பதித்து முன்னேறி வருகின்றனர்.
ஜெமினி நிறுவனத்தின் லோகோவாக, குழலூதும் இரட்டையரைக் காண்பிப்பார்கள். இந்த இரட்டையர்களை டிசைன் செய்தவர் கார்ட்டூன் மேதை மாலி! சினிமாவில் இரட்டை வேடம் என்பது அனைத்துக் கதாநாயகர்களின் லட்சியக் கனவாகும். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘உத்தமபுத்திரன்’தான் தமிழில் வெளிவந்த முதல் இரட்டை வேடப் படம். இதில் பி.யூ.சின்னப்பா நடித்துப் பெரும்புகழ் பெற்றார்.
ஜேம்ஸ் ஹாரிசன் என்பவரின் மனைவி மியா. 2008ல் வாஷிங்டனில் மியாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் நிறத்திலும் ஜாடையிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாமல் இருந்தன. டிஎன்ஏ டெஸ்ட் செய்யப்பட்டது. இரு குழந்தைகளும் வேறு வேறு ஆண்களுக்குப் பிறந்தவை என்பது உறுதி செய்யப்பட்டது. சரி! இந்தக் கசமுசா பிரச்னையை இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் எப்படி எதிர்கொண்டனர் என்பதையும் இரட்டை தொடர்பான வேறு சில சுவையான தகவல்களையும்
அடுத்த இதழில் பார்ப்போமா..!