அழகிய பட்சிகளான அன்னம், மயில், கிளிகளை ஒப்பீடு செய்ய நேர்ந்தால், இலக்கியத்தில் ஒரு பெண் அழகானவளாக அர்த்தம். ஆனால் ஒரு அழகியின் பெயரைத் தாங்கிய பெருமையால் சாதாரணமான ஒரு பறவை அழகானதாகக் கருதப்பட்டதை என்னவென்று சொல்ல..?
அந்த அழகிய யுவதி அமலா பால். அந்த அதிர்ஷ்டக்காரப் பறவை மைனா.
‘‘போகிற இடத்திலெல்லாம் ‘மைனா... மைனா...’ன்னே கூப்பிடறாங்களா..? எனக்கு என் பேரே மறந்துடும் போலிருக்கு...’’ என்று பொய்ச் சலிப்பாக சிரிக்கும் அமலா பால், கொச்சி தந்திருக்கும் இன்னொரு பட்சி. ‘சிந்துசமவெளி’யில் இறகுகள் வெட்டப்பட்டாலும், ‘மைனா’வில் நீண்ட சிறகுகளுடன் உயரே போய்க்கொண்டிருக்கும் இந்த பட்சி, விக்ரமுடன் மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் ‘பிதா’, லிங்குசாமியின் இயக்கத்தில் ஆர்யாவுடன் ‘வேட்டை’ என்று விரைந்துகொண்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கணேஷ் வினாயக்கின் இயக்கத்தில் ‘முப்பொழுதும் உன் கற்பனையில்’ படத்துக்காக பெங்களூருவில் அதர்வாவைக் காதலித்துக்கொண்டிருந்த அமலா பால், ‘‘இப்ப நான் நடிச்சுக்கிட்டிருக்க படங்கள் என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும்...’’ என்றார்.

‘‘சம்பள விஷயத்திலும் நீங்க அடுத்த கட்டத்துக்குப் போயிட்டீங்கன்னு அலர்றாங்களே, இண்டஸ்ட்ரியில..?’’ என்று ஒரு ‘யார்க்கர்’ போட்டால், ‘‘அப்படியா? இண்டஸ்ட்ரில பேசறாங்களா... இல்ல நீங்களே சும்மா போட்டு வாங்கறீங்களா..?’’ என்றவர், ‘‘நான் இங்கே நடிக்கணும்னுதான் வந்திருக்கேன். இன்னும் பதினஞ்சு, இருபது வருஷங்கள் கழிச்சுத் திரும்பிப் பார்க்கும்போது நான் குறிப்படத்தகுந்த நடிகையா இருக்கணும். ஒரு ரேவதியை, சுஹாசினியை, ஷோபனாவை, சிம்ரனை, ஜோதிகாவைப் பத்தி இன்னும் பேசறோம்னா அதுதான் நடிகையோட சாதனை. சம்பாதிச்ச ரூபாய் நோட்டுகள் மட்டும் இதைச் சாதிக்க முடியாது. நீங்க கேட்டதுக்காக சொல்றேன், இப்ப கூட காலத்துக்கும் பேசற மாதிரி கேரக்டரோட ஒரு நல்ல ஸ்கிரிப்ட் கொண்டுவரச் சொல்லுங்க... சம்பளம் வாங்காமலேயே நடிக்கிறேன்!’’ என்றார் பாசாங்கு இல்லாத உறுதியுடன்.
‘‘நீங்க வந்த நேரம் அனுஷ்கா, தமன்னான்னு பலமான போட்டிகள் இங்கே... எப்படி சமாளிக்கப் போறீங்க..?’’‘‘இதென்ன ரன்னிங் ரேஸா.. யார் முதல்ல வர்றாங்கன்னு பார்க்க. நான் இப்பதான் வந்திருக்கேன். இதில போட்டியெல்லாம் யார்கூடவும் வச்சுக்க முடியாது. நம்ம திறமை மட்டும்தான் நம்மை அடையாளம் காட்டும். அதனால இவங்கன்னு இல்ல, யார் வந்தாலும் என் போட்டி அவங்களோட இல்லை. என் வழியில நல்ல ஸ்கிரிப்ட்டுகளா பாத்து நடிக்க ஒத்துக்கிறதுதான் என்னை இங்கே முன்னேற வைக்கிற ஒரே வழி. அதைத்தான் செய்யறேன். என் சாய்ஸ் நல்ல டைரக்டர்கள். பாலா மாதிரி டைரக்டர்கள் கூப்பிட்டாங்கன்னா உடனே ஒத்துக்குவேன்..!’’
‘‘பாலா கூப்பிட்ட அதே நேரம் ரஜினி படத்தில நடிக்கக் கூப்பிட்டா..?’’‘‘நீங்க என்னை மாட்டிவிடணும்னு ஏதோ திட்டத்தோடவே பேசற மாதிரி இருக்கு. ரஜினி சார், கமல் சார்கூட நடிக்கிற வாய்ப்புகள் உடனே வந்து கதவைத் தட்டும்னு நான் கனவு காணலை. நான் இப்பதான் இண்டஸ்ட்ரிக்குள்ள வந்திருக்கேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. நான் இன்னும் உயர்ந்து பாலா சாரும், ரஜினி சார் படத்திலும் ஒரே நேரத்தில கேட்கிற வாய்ப்புகள் வந்ததுன்னா என்ன செய்வேன்னு அப்ப சொல்றேன். ஓகேயா..?’’
விக்ரமுடன் நடிப்பது பற்றிப் பெருமைப்படும் அமலா, அதே படத்தில் அனுஷ்காவும் இருப்பது பற்றிக் கேட்டால், ‘‘இதில் என்ன இருக்கு. பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கிறதில எந்தப் பிரச்னையும் இல்ல. இன்னும் கேட்டா விக்ரம், அனுஷ்காகூட நடிச்சது எனக்கொரு வாய்ப்பு. எப்படிப்பட்ட புகழ் வந்தாலும் எளிமையா பழகறது எப்படின்னு அவங்ககிட்ட கத்துக்கிட்டேன். ஒவ்வொருத்தர்கிட்டயும் கத்துக்கிறதுக்கு ஏதாவது இருக்கும்னு நம்பறவ நான்..!’’ என்கிறார் காந்தக் கண்களை விரித்து.
கண்களை இன்ஷ்யூர் பண்ணியாச்சா பெண்ணே..? வேணுஜி