திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால், சொர்க்கத்தை திருமணங்களே உருவாக்கும் வகையில் வகையில் திருமண வழிகாட்டியாக மலர்ந்திருக்கிறது ‘வெட்டிங் வோவ்ஸ்’ மாத இதழ். தென்னிந்தியாவின் முதல் திருமண லைஃப்ஸ்டைல் பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி.
‘‘கல்யாணத்துக்காக வட இந்தியாவில் ‘விவாகா’, ‘வெட்டிங் அஃபையர்’னு பத்திரிகைகள் வந்திட்டு இருக்கு. அந்த இதழ்கள் சென்னையிலும் கிடைக்குது. ஆனா, தென்னிந்தியாவில் உள்ள விபரங்களுக்கு அதில் முன்னுரிமை இருக்காது. அதனாலதான் நம்ம லைஃப்ஸ்டைலுக்கு ஏற்ப ஷாப்பிங், அழகுக்குறிப்பு, உறவுமுறை, கல்யாண பட்ஜெட், ஹனிமூன் டிப்ஸ்னு திருமணத்தின்போதும், அதற்குப் பின்பும் தேவைப்படும் விஷயங்களோடு ‘வெட்டிங் வோவ்ஸ்’ இதழை உருவாக்கினோம்.
பொதுவா கல்யாணம் நடத்தணும்னாலே அலைச்சலை நினைச்சு எல்லோருக்கும் பயம் வந்திடும். அவங்களுக்காக எந்தெந்த கலெக்ஷன் எங்கே கிடைக்கும்ங்குறதுல ஆரம்பிச்சு, கேட்டரிங், வெட்டிங் கார்ட்ஸ், பெண்ணோ, ஆணோ புது உறவுகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், தம்பதிகள் அன்யோன்யமாக இருப்பது எப்படி, ஃபிட்னஸை எப்படி பராமரிப்பதுன்னு அனைத்து விஷயங்களும் அடங்கிய முழுமையான இதழா இது இருக்கும்.
கல்யாணத்துக்கு முன்னால 6 மாதங்கள் படிச்சாலே போதும். அவங்களுக்குண்டான எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுப்பாங்க. இது மணமக்களுக்கு மட்டுமல்ல... பெற்றோருக்குப் பயன்படும் விஷயங்களும் இருக்கும். இது திருமண விஷயங்களைத் தாங்கி வரும் குடும்ப இதழ்’’ என பெருமையாகச் சொல்கிறார் ‘வெட்டிங் வோவ்ஸ்’ இதழின் வெளியீட்டாளரும், முதன்மை ஆசிரியருமான தட்சணாமூர்த்தி.
‘‘கல்யாணம் பெரிய ரிஸ்க். கல்யாணத்துக்கு முழுமையாக வழிகாட்டும் இதழை நடத்துவது, அதை விட பெரிய ரிஸ்க். தட்சணாமூர்த்தி அதை சாதித்துக் காட்டியிருக்கிறார். ஒரு ஆள் நடந்து போய்கிட்டே இருந்தான். திடீர்னு ஒரு பெண் குரல் மேலே இருந்து வந்தது. ‘அங்கேயே நில். இனி ஒரு அடி நகர்ந்தாலும் ஆபத்து’ன்னு சொல்லுச்சு. ஆனாலும், நிற்காம போயிட்டான். அவனையே தொடர்ந்து சென்றது அந்தக் குரல். ரோட்டை கடக்கறதுக்குத் தயாரா இருந்த அவனிடம் ‘சாலையைக் கடக்காதே... ஆக்ஸிடென்ட்ல உயிர் போயிடும்’னு எச்சரித்தது அந்தக் குரல். ஆனாலும், காதுல வாங்கிக்காம கடந்துட்டான் அவன். ‘ஆமா என் பின்னாலயே வர்றியே... நீ யாரு’னு அந்த குரல் வந்த திசையை நோக்கிக் கேட்டான். ‘நான் உன்னை பாதுகாக்க வந்த தேவதை’னு வந்தது பதில். ‘அடிப்பாவி... இப்ப வந்த நீ என் கல்யாணத்தப்போ எங்கே போன’ன்னு கேட்க, அடுத்த நிமிடமே மறைந்து விட்டது அந்த தேவதையின் குரல்! கல்யாணம் ரொம்ப முக்கியம். அது சரியா அமைஞ்சாதான் வாழ்க்கை அர்த்தப்படும். அதற்கு இந்த இதழ் சரியான வழிகாட்டியாக இருக்கும்’’ என இதழ் பற்றிய நம்பிக்கையை வெளிப்படுத்தினார் நடிகர் பார்த்திபன்.
விழாவின் கலர்ஃபுல் அட்ராக்ஷன் நடிகை ஸ்ரேயா. திருமணம் சம்பந்தமான பத்திரிகை விழா என்பதாலோ என்னவோ, நகைகள் அணிந்து கிட்டத்தட்ட மணப்பெண் போலவே வந்திருந்தார். பத்திரிகையை வெளியிட்டு வாழ்த்திப் பேசிய ஸ்ரேயாவிடம், அவரது கல்யாணத்தைப் பற்றிக் கேட்டோம். இதுதானே சரியான தருணம்?
‘‘இப்போதைக்கு கல்யாண ஐடியா இல்ல. என் மனசுக்கு யார் நல்லவரா படறாரோ அவரையே கல்யாணம் பண்ணிப்பேன். கூடிய சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுவேன். அப்ப உங்களுக்கெல்லாம் நிச்சயம் சொல்றேன்’’ என வழக்கமாக நடிகைகளின் ஃபார்முலா பதிலையே ஒப்பித்தார் ஸ்ரேயா.
ஸ்ரேயாவும் ‘வெட்டிங்க் வோவ்ஸ்’ வாசகர் ஆகிடுவாங்களோ! ஆர்.எம்.திரவியராஜ்
படங்கள்: புதூர் சரவணன்