
பள்ளிக்கூடங்களில் ரிவிஷன் தேர்வுகள் நடக்கத் தொடங்கியிருக்கிற நேரம் இது. நாமும் நம்முடைய பங்குச் சந்தை பாடத்தில் ரிவிஷன் தேர்வு வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால், சந்தை இப்போது இருக்கும் சூழ்நிலையில் முதலீடு செய்வது என்பது உத்தமம் அல்ல! சென்செக்ஸ் இன்னமும் 2000 புள்ளிகள் சரியும் என்று நிபுணர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நம் பட்ஜெட் ஏற்படுத்தப்போகும் விளைவுகளும், இப்போது லிபியா நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்னைகளால் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படும் அபாயகரமான மாற்றங்களும் சந்தையை இன்னும் கீழே இழுக்கும் என்பதுதான் காரணங்களாக இருக்கின்றன. எனவே, இந்த வாரம் முதலீட்டு ஆலோசனையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு பங்குச் சந்தை முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பத்து கட்டளைகளாகத் தொகுத்திருக்கிறேன். கவனித்துக் கொள்ளுங்கள்.
1. தெரிந்து கொள்ளுங்கள்!பங்குச் சந்தையின் அன்றாட நிலவரம் குறித்து தகவல்களைத் தினமும் தெரிந்து கொள்ளுங்கள். தினசரி செய்தித்தாள் படித்தால்கூட போதும். அல்லது டி.வி. செய்திகள் கேட்டால்கூட நிலவரம் அறிந்து கொள்ளமுடியும்.
2. பகிர்ந்து கொள்ளுங்கள்!நமக்குக் கிடைக்கும் தகவல்களை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால், அவர்கள் சொல்லும் தகவல்களையும் கேட்டு அறிந்துகொள்ள முடியும். தகவல் பறிமாற்றம் என்பது ஒரு விஷயத்தின் அத்தனை பரிமாணங்களையும் அறிந்துகொள்ள உதவும்.
3. ஆராய்ந்து பாருங்கள்!எந்தத் தகவல் கிடைத்தாலும் உடனடியாக அதை ஏற்றுக் கொள்ளாமல், அதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து பாருங்கள். அந்தத் தகவலில் எத்தனை சதவீதம் சாத்தியம் இருக்கிறது. அதன் விளைவுகள் என்னவாக இருக்கப் போகிறது என்பது பற்றி ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது எப்போதுமே நல்லது.
4. சொந்தமாக முடிவெடுங்கள்!எல்லா தகவல்களையும் கேட்டுத் தெரிந்து அலசி ஆராய்ந்து பார்த்த பிறகு முதலீட்டு முடிவைச் சொந்தமாக எடுங்கள். பிறர் சொல்வதைக் கேட்டு முடிவெடுத்துவிட்டு பின்னால் வருந்துவதைவிட, சொந்தமாக முடிவு எடுப்பது நல்லது.
5. தேர்வு செய்யுங்கள்!நமக்கு நல்லமுறையில் சேவை செய்யக் கூடிய புரோக்கர்களைத் தேர்வு செய்து, அவர்கள் மூலம் முதலீடு செய்வது நல்லது. வெறுமே பங்குகளை வாங்கி விற்றுக் கொடுப்பவராக மட்டும் இல்லாமல் நம்முடைய தேவைகளை அறிந்து செயல்படுபவர்களாக இருக்கும் புரோக்கர்களைத் தேர்வு செய்யுங்கள்.
6. சிறுகச் சிறுக முதலீடு!கையில் இருக்கும் பணத்தை மொத்தமாக ஒரே நேரத்தில் சந்தைக்குள் போடாமல், சிறுகச் சிறுக முதலீடு செய்யுங்கள். அப்போதுதான் சந்தையின் சிறப்பான அத்தனை தருணங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளமுடியும். மொத்தமாகச் செய்துவிட்டு சந்தை கீழிறங்கும்போது கையைப் பிசைந்துகொண்டு நிற்கக் கூடாது.
7. பதற்றம் அடையாதீர்கள்!முதலீட்டின்போது எந்தச் சூழலிலும் பதற்றம் அடையாதீர்கள். சந்தை சரிந்தால் வாங்குவதற்கு ஏற்ற நேரம்... ஏறினால் விற்பதற்கு ஏற்ற நேரம் என்று சந்தையின் எல்லா நேரங்களுமே நல்ல நேரம்தான். அதனால், பதற்றமடையாமல் சந்தைக்குள் பயணிப்பது நிச்சயம் லாபம் தரக்கூடியது.
8. பகிர்ந்து செய்யுங்கள்!ஒரே துறையில் அல்லது ஒரே நிறுவனத்தில் மொத்த முதலீட்டையும் போடாமல், பல துறைகளில் பல நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்வது எப்போதுமே சிறந்தது. ஏனென்றால், ஒரு துறை கைவிட்டாலும் இன்னொரு துறை கை கொடுக்கும். பகிர்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.
9. இலக்கைத் தீர்மானியுங்கள்!பங்குகளை என்ன விலைக்கு வாங்க வேண்டும், என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதற்கான இலக்குகளைத் தெளிவாக நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். அந்த இலக்கு வரும்வரையில் பொறுமையாகக் காத்திருங்கள். இலக்கை அடைந்தவுடன் செயல்படுங்கள். அந்த நேரத்தில் பேராசையுடன் இலக்கைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல.
10. பணமாகப் பாருங்கள்!பங்குச் சந்தையில் ஏற்றம் இருக்கும்போது நம்முடைய இலக்கைத் தொட்ட பங்குகளை விற்று, லாபத்தைக் காசாக கண்ணால் பாருங்கள். கணக்கில் லாபத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தால் பின்னாளில் நஷ்டம் ஏற்படும்போதும் கணக்கையே பார்த்து வருந்திக் கொண்டிருக்க வேண்டி வரும். அதனால், லாபத்தை தனியாக எடுத்து பணமாக்கிக் கொள்வது நல்லது.
பத்து கட்டளைகளையும் கவனமாகக் கைக்கொள்ளுங்கள். பங்குச் சந்தையில் பணத்தை அள்ளுங்கள்..! அடுத்த வாரம் என்ன பங்கு, எந்தப் பின்னணியில் வாங்குவதற்கு ஏற்றது என்பதைப் பார்க்கலாம்.
காத்திருங்கள்... சொல்கிறேன் சி.முருகேஷ்பாபு