‘‘நடிக்கும் ஆசை, பாடும் திறமையோடு மலேசியாவிலிருந்து 1964ல் தமிழகம் வந்த மலேசியா வாசுதேவன் செஞ்ச முதல் வேலை, தன் பாஸ்போர்ட்டை கிழிச்சுப் போட்டது. ஒருவேளை சினிமாவில சாதிக்க முடியாமப் போனா, எந்தக் காரணம் முன்னிட்டும் திரும்பிப் போயிடக்கூடாதுன்னுதான்...’’ என்கிறார் கடந்த வாரம் மறைந்த பாடகர், நடிகர் மலேசியா வாசுதேவனின் 46 வருட நண்பர் இயக்குநர் டி.கே.போஸ்.

அப்படிக் கிழித்துப் போட்டதால், மலேசியாவிலிருந்த அவரது தாயார் அம்மாளு அம்மையார் இறந்துபோனபோது அவரால் மலேசியா செல்லமுடியவில்லை என்பது தனி சோகம். இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவில் சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தவர், அதே இளையராஜா மூலம் பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...’ பாடலைப்பாடி தமிழ் சினிமாவில் பாடகராக அசைக்கமுடியாத இடத்தைப்பெற்றார்.
‘‘நிறைய பேர் அவரோட முதல் பாடலே அதுதான்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா அவர் 66ல வெளியான ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்திலேயே பாடிட்டார். அதுக்குப்பிறகும் சில படங்கள்ல பாடினார். ஆனா ‘16 வயதினிலே’ படம்தான் அவரைப் பாப்புலராக்குச்சு. பல குரல்கள்ல பாடத் தெரிஞ்ச அவர், பெரும்பாலும் சி.எஸ்.ஜெயராமன் குரல்ல பாடிக்கிட்டிருந்தார். ஆனா ‘16 வயதினிலே’க்குப் பிறகு பிஸியாகி 8000 பாடல்களைப் பாடி முடிச்சார். மலையாளம், தெலுங்கில 2000 பாடல்கள் பாடியிருப்பார்...’’ என்கிற டி.கே.போஸ் தொடர்ந்தார்.
‘‘அவரோட நடிப்பு ஆசையும் பாரதிராஜாவோட ‘கொடி பறக்குது’ படத்திலதான் வெற்றியடைஞ்சது. ஆனா இங்கே வந்தப்பவே, மலேசியாக்காரர்கள் ஒருங்கிணைஞ்சு தயாரிச்ச ‘ரத்தப்பேய்’ ங்கிற படத்தில அவர் நடிச்சுட்டார். ‘கொடி பறக்குது’க்கு பிறகு சினிமா நடிகராவும் புகழடைஞ்சு 85 படங்கள்வரை முடிச்சார். அவரோட சாதனைகளுக்காக மூணு மாசம் முன்னாலதான் மலேசியாவில பாராட்டு விழா நடந்தது.
28வது வயசில உஷாவைக் கைப்பிடிச்சார். ஒற்றுமையான தம்பதிகளுக்கு அவங்க உதாரணமா இருந்தாங்க. யுகேந்திரன்ங்கிற மகன் மேலயும், பவித்ரா, பிரஷாந்தினிங்கிற மகள்கள் மேலயும் அத்தனை பாசமா இருந்தார். சினிமாவில பாடகர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர்னு எல்லா துறைகள்லயும் திறமையை நிரூபிச்சவர், தயாரிப்பாளரா ஆகாம இருந்திருக்கலாம். பல நண்பர்கள் எச்சரிச்சும் துணிச்சலா ‘நீ சிரித்தால் தீபாவளி’ படத்தைத் தயாரிச்சு கையைச் சுட்டுக்கிட்டார். மற்றபடி அன்பு, ஆன்மிக நாட்டம், அடுத்தவர்களுக்குத் தெரியாம உதவற குணம்னு நல்ல மனுஷனா வாழ்ந்தார்...’’
அதுதான் அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜனுடன் திரையுலகின் முக்கியப்புள்ளிகளான ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், சிவகுமார் உள்ளிட்டோரை வரவழைத்து அவருக்கான அஞ்சலியைச் செலுத்த வைத்தது.
அதிலும் மலேசியா வாசுதேவனின் சக பாடகராக இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நட்பு எத்தனை வலுவுள்ளதாக இருந்தது என்பதற்கான நிகழ்ச்சி இது. தனியார் மருத்துவமனையில் அவர் இயற்கை எய்தியபோது எஸ்.பி.பி விசாகப்பட்டினம் செல்லும் விமானத்தில் இருந்தார். டேக் ஆஃபுக்கான கடைசி நிமிடத்தில் அவருக்குத் தகவல் கிடைக்க, மலேசியா வாசுதேவனின் உடலை வைக்கத் தோதான இடம் இல்லையென்று கேள்விப்பட்டு, தன் கோதண்டபாணி ஸ்டூடியோவில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அஞ்சலி செலுத்த வந்தவர்கள் நெகிழ்ந்து போன நிகழ்ச்சி அது.
‘‘இந்த அன்புக்கெல்லாம் எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு...’’ என்றவர் மலேசியா வாசுதேவனின் மகளும், பாடகியுமான பிரஷாந்தினி. ‘‘இறந்துபோன தன் அம்மா முகத்தைக் கடைசியா பார்க்கமுடியாதவர், என் முகத்தில் அவங்களைப் பார்த்துக்கிட்டிருக்கிறதா சொல்வார். எனக்கு அவங்கம்மா ஜாடைங்கிறதால என் மேல எல்லாத்தையும்விட அன்பா இருந்தார். தன்னோட உயர்வுக்குக் காரணமான இளையராஜா சாரை எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மறக்கலை. தன் மேடைக் கச்சேரிகள் எல்லாத்திலும் இளையராஜாவுக்கு நன்றி சொல்லிக்கிட்டே இருந்தார். அவர் இறந்த அன்னைக்குக் கூட எதேச்சையா அவரைப் பார்க்க இளையராஜா சார் வந்திருந்தார். அவர் வர்றதுக்குப் பத்து நிமிடம் முன்னாலதான் அப்பா கண்ணை மூடினார்ங்கிற செய்தி கேட்டு அவரால துக்கத்தை அடக்க முடியலை. அடுத்தநாள் அஞ்சலிக்கும் வந்திருந்து, ‘என் வாசு...’ன்னு அப்பாவைக் காட்டிப் பேசிக்கிட்டிருந்தார்.
அவரே எதிர்பார்க்காம நான் பாடகியானதில அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். சமீபத்தில ‘ஆடுகளம்’ படத்தில எஸ்.பி.பி சார் கூட பாடிய ‘ஐய்யய்யோ நெஞ்சே...’ பாடலைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். நிறைய மேடைக்கச்சேரிகள்ல அவரோட சேர்ந்து பாடியிருக்கேன். ‘பூங்காற்று திரும்புமா..?’ங்கிற அவரோட ஃபேவரிட் பாடலைப் பாடும்போது கடைசி வரியை ‘நீதானா அந்தக்குயில்... என் வீட்டு சொந்தக்குயில்...’ன்னு எனக்காக மாத்திப்பாடி என்னை அணைச்சுக்குவார். அவர் இப்ப இல்லைங்கிறது உடலளவில் மட்டும்தான். காற்றில அவரோட கம்பீரக்குரல் என்னைக்கும் கலந்திருக்கும்..!’’
தொகுப்பு: வேணுஜி
படங்கள்: ஜெகன்