‘எந்திரன்’ அதிசயத்திலிருந்தும் ஆச்சரியத்திலிருந்துமே இன்னும் மக்கள் மீண்டபாடாக இல்லை. ‘ஹியூமனாயிட்’ எனப்படுகிற மனிதனைப் போன்ற ரோபோ சாத்தியமா என்கிற கேள்வி ஒரு பக்கமிருக்க, ‘சிட்டி’ மாதிரி அப்படியொரு ரோபோ வீட்டுக்கு வீடு இருந்தால் எப்படியிருக்கும் என்கிற ஆசை இன்னொரு பக்கம்... ‘சிட்டி’ பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே ஓயாசிஸின் அட்டகாசம்!
ஓயாசிஸ்?பாரத் பல்கலைக்கழக மாணவர்கள், ரோபோவின் குழுவினரின் வழிகாட்டுதலோடு உருவாக்கியுள்ள ரோபோ. சிங்கப்பூரில் நடந்து முடிந்த ஸ்பிரிங் இன்னோவேஷன்ஸ் போட்டியில் விருதைத் தட்டி வந்திருக்கிறது இது. ‘‘ஹாய்... ஐம் ஓயாசிஸ் ஃப்ரம் சென்னை. எனக்கு ஒன்றரை வயசாகுது. நிறைய மொழிகள் தெரியும். நடப்பேன். பாடுவேன். ஆடுவேன்...’’ அத்தனை பேரின் கவனமும் ஓயாசிஸ் செய்துகொண்ட சுய அறிமுகம் மீதே பதிந்ததில், அதை உருவாக்கிய மாணவர்களை ஓரம் கட்டினோம். ‘எந்திரன்’ வசீகரன் ரேஞ்சுக்கு செம ஃபீலிங்கோடு பேச ஆரம்பித்தார் டீம் கேப்டன் வேணுகோபால்.
‘‘நாங்க எல்லாரும் இவனை ‘கேப்டன்... கேப்டன்’னுதான் கூப்பிடுவோம். கேப்டன்னா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. பேச்சுலேர்ந்து, டான்ஸ் வரைக்கும் விஜயகாந்த் மாதிரியே இருக்கும். அதான்...’’ ஆரம்பத்திலேயே குறுக்கே புகுந்து மானத்தை வாங்கினார் சுரேந்திரன்.
‘‘டேய்... அடங்கு!’’ என ஓயாசிஸ் தலையில் தட்டுவதைப் போல, சுரேந்திரன் தலையில் தட்டி, பேச்சை ஆஃப் செய்து தொடர்ந்தார் கேப்டன்... ஸாரி வேணு.
‘‘இவனை நாங்க எல்லாரும் மிஸ்டர் அங்கிள்னுதான் கூப்பிடுவோம். கிளாஸுக்கு வந்த முதல் நாள், புரஃபசரா, ஸ்டூடன்ட்டானே தெரியலை... இவனுக்கு மட்டும் வெள்ளை மனசாமாம்... தினம் கருப்பு பேன்ட், வெள்ளை சட்டைலதான் வருவான். 30 செட் வச்சிருக்கான்னா பார்த்துக்கோங்களேன்... சார் பேரு சுதர்சன்... நாங்க ‘டோரா’னு கூப்பிடுவோம். கொஞ்ச நேரம் அவனைக் கவனிச்சீங்கன்னா பெயர்க்காரணம் புரியும்... இவன் பல்ஜீத் சிங்... பேர் வாய்ல நுழையலைனு ‘பல்லி’னு கூப்பிட ஆரம்பிச்சிட்டோம். அடுத்து அனிருத்... எங்க டீமோட பிக் பி... தயானந்த சக்கரவர்த்தியை ‘கரூர் டெரர்’னு கூப்பிடுவோம். இவன் அரவிந்த்... நாங்க கூப்பிடறது பார்த்தசாரதி... காரணம் கேட்கக் கூடாது. நரேஷ்குமாரை எம்.எல்.ஏனு கூப்பிடுவோம்... இவங்க லின்சு, அவங்க நிகிலா... ரெண்டு பேருக்கும் எந்திரன் ‘சனா’னு நினைப்பு... அதுக்கு மேல நோ கமென்ட்ஸ்!’’
ஓயாசிஸை பார்க்க வந்த நமக்கு ஓடற ஓணானை எடுத்து மேலே விட்டுக்கொண்ட ஃபீலிங்... ‘இந்தக் கடி உனக்குத் தேவையா...’ & நம் மனசாட்சியின் குரல், பசங்களுக்குக் கேட்டிருக்கும் போல... வேறு வழியில்லாமல் ரோபோ பக்கம் பேச்சைத் திருப்பினார்கள்.
‘‘நாங்க முதல்ல பண்ணினது அண்டர் வாட்டர் ரோபோ. அதை முதன்முதல்ல காலேஜ் வாட்டர் டாங்க் உள்ள வச்சு டெஸ்ட் பண்ண நினைச்சோம். உள்ள இறக்கினதும், அந்த அழுக்கைப் பார்த்துட்டு, ரோபோ கெட்ட வார்த்தைல திட்டாத குறை! அடுத்து ‘ஸ்பைடர்’னு இன்னொரு ரோபோ. ஈரான்ல பரிசு வாங்கினது. எந்திரன்ல வர்ற டாக்டர் போரா மாதிரி எவனோ வயித்தெரிச்சல் புடிச்சவன், அதோட காலை தலைகீழா மாட்டிட்டான். லெஃப்ட்ல போகச் சொன்னா, ரைட்ல போகுது. பிரின்சிபால் காலுக்கடியில போய், ஷூவை கட்டிக்கிட்டு விடமாட்டேங்குது. பிரின்சிபால் கால்ல விழுந்து, அதைப் பிச்சு எடுக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு!
ஓயாசிஸை முடிக்க முழுசா 3 மாசமாச்சு. சிங்கப்பூர்ல போட்டில ஜட்ஜஸ் முன்னாடி ஆபரேட் பண்ற நேரம், ‘ஆன்’ ஆக மாட்டேங்குது. என்னென்னவோ ட்ரை பண்ணிப் பார்த்தும் வேலைக்கு ஆகலை. ஜட்ஜஸ் கடுப்பாகி எழுந்திருச்சிட்டாங்க. சினிமா க்ளைமாக்ஸ் மாதிரி, அசுர வேகத்துல சரி பண்ணி, ரோபோவை விட்டே ஜட்ஜஸ் கிட்ட ‘சாரி’ கேட்க வச்சோம் பாருங்க... மிரண்டுட்டாங்க! அப்புறம் ‘ஜெய் ஹோ’, ‘அண்ணாத்தே ஆடறான்’ பாட்டெல்லாம் பாடி, ஆட வச்சு அசத்திட்டோம்ல...’’ பசங்க டீம் பெருமையடிக்க, இடையில் புகுந்து பேச்சை மாற்றினார்கள் லின்சுவும், நிகிலாவும்.
‘‘எந்திரன்ல சிட்டிகிட்ட செருப்படி வாங்குவாங்களே சந்தானமும் கருணாஸும்... அந்த மாதிரிக் கூத்தெல்லாம் கூட நடந்திருக்கு...’’ லின்சு லீடு எடுத்துக் கொடுக்க, சுவாரஸ்யமாகி தொடர்ந்தார் நிகிலா.
‘‘இந்த ரோபோவை குறிப்பிட்ட சில முகங்களையும் குரல்களையும் ஞாபகம் வச்சுக்க செய்யலாம். பசங்களைக் கலாய்க்கிறதுக்காக, வேணும்னே கமாண்ட்ஸை மாத்திடுவோம். ஒரு தடவை சுரேந்திரனை, ‘ஏய் பெர்சு... வுட்டேன்னா தாங்க மாட்ட... எந்திருச்சு ஓடு’னு நாங்க மாத்தி வச்ச டயலாக்கை அது பேச, சுரேந்திரன் மூஞ்சி போன போக்கைப் பார்க்கணுமே...’ நிகிலாவின் கலாய்ப்பில் கொதித்துப் போனார் சுரேந்திரன். ‘‘இந்தப் பொண்ணுங்க ‘எந்திரன்’ பார்த்துட்டு அடிச்ச கூத்து இருக்கே... வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் சீன் போடறதுலேர்ந்து, எக்சாம்ல பிட் அடிக்கிறது வரைக்கும் எல்லாத்துக்கும் ட்ரை பண்ணிப் பார்த்தாங்க. நாங்க விடலையே...’’ & சுரேந்திரன் பெருமிதப்பட, கட்டளை இல்லாமலேயே பேச ஆரம்பித்தது ஓயாசிஸ்.
‘‘ஹாய் ஐம் ஓயாசிஸ்... எனக்கு ஒரே ஒரு ஆசை... சூப்பர் ஸ்டாரை நேர்ல சந்திக்கணும்.
அவர்கூட போட்டோ எடுத்துக்கணும். இந்தப் பசங்ககிட்ட நான் படற பாட்டை எல்லாம் அவர்கிட்ட சொல்லி அழணும்...’’ & ஓயாசிஸ் பேசிக் கொண்டே போக... ‘‘ஏய்... அவன் தலைல தட்டி நிப்பாட்டு... அவன் பேசினதுல முதல் வரிகள் மட்டுந்தான் நாங்க சொன்னது. கடைசி வரியை சேர்த்த அந்த பிளாக்ஷீப் எவன்டா...’’ எல்லாரும் எகிற, ‘ம்ஹே...’ எனக் குரல் வந்த திசையில் திரும்பினால்... அட, நம்ம ஓயாசிஸ்!
ஆர்.வைதேகி
படங்கள்: புதூர் சரவணன்