மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரோடு பிடிபட்ட ஒரே குற்றவாளியான பாகிஸ்தானின் அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்திருக்கிறது மும்பை உயர் நீதிமன்றம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சிறையில் இருக்கும் அவன், மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் சேர்ந்துவிட்டான். கையும் களவுமாக பிடிபட்ட 6 மாதங்களிலேயே அவனை தூக்கிலிட்டிருக்க வேண்டும் என்று தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சொல்கிறார்கள்.
ஏற்கனவே நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனு பல மாதங்களாக பரிசீலனையில் இருக்கிறது. மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் கால வரையறை நிர்ணயிக்க வேண்டும் என்பது இந்த வாரம் நாடாளுமன்றத்தில்கூட பேசப்பட்ட விஷயம். ‘குற்றவாளிகளை விரைந்து தூக்கிலிடுங்கள்’ என்பது ஒரு சாராரின் வாதம். மரண தண்டனையை ரத்து செய்யுங்கள் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை. இப்படி மீண்டும் மரண தண்டனை தொடர்பாக விவாதங்கள் உருவாகியிருக்கும் நிலையில், தங்களின் வாதங்களை முன் வைக்கிறார்கள் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனும், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவருமான வழக்கறிஞர் சுரேஷும்.
இல.கணேசன்
அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை 2004ல் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 160க்கும் மேற்பட்ட அப்பாவிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதி அப்துல் கசாப்புக்கு இப்போது தூக்கு தண்டனை உறுதியாகி இருக்கிறது. தண்டனைகளை நிறைவேற்றி தீவிரவாதிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்போம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்கத் தவறிவிட்டது அரசு. அப்சலை, கசாப்பை தூக்கில் போட்டால் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறது காங்கிரஸ் அரசு. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அப்சல்குருவையும், கசாப்பையும் ஆதரிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்கிறது காங்கிரஸ் கட்சி.
இந்து ஆலயம் தாக்கப்பட்டால் இந்துக்களும், கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டால் அந்த சமூக மக்களும் கொதிப்படைவது இயல்பு. நாடாளுமன்றம் என்பது இந்திய மக்கள் அனைவருக்குமான ஆலயம். அந்த ஆலயத்தைத் தாக்கியவர்களை விருந்தாளிகளைப் போல உபசரிப்பது ஏற்படையதல்ல. நாளையே நமது விமானம் ஒன்றை கடத்திச்சென்று அப்சலையும் கசாப்பையும் விடுதலை செய்யுங்கள் என்று காந்தஹார் சம்பவம் போல மிரட்டினால்?
நாடாளுமன்றத் தாக்குதலில் பலியான சமலேஷ்குமாரி என்ற பெண் போலீஸ் அதிகாரியின் பெற்றோர், அப்சல் குருவுக்கு தண்டனை தாமதமாவதில் வெறுத்துப் போய், மத்திய அரசு தங்கள் மகளுக்கு வழங்கிய விருதை திருப்பி அளித்து இந்திய மக்களின் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குற்றவாளிகள் தப்பிக்க கால தாமதங்கள் ஒரு காரணமாகி விடக்கூடாது.
சுரேஷ்
மரண தண்டனையை நீண்ட காலமாக நாங்கள் எதிர்க்கிறோம். நாகரிக நாடு என்று சொல்லிக்கொள்ளும் நாட்டில், அரசே ஒரு உயிரைப் பறிக்கிற இந்த தண்டனை முறை அநாகரிகமானது. உலகம் முழுக்க 120 நாடுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரண தண்டனையை ஒழித்துவிட்டார்கள். இன்னும் 30 நாடுகளில் மட்டுமே இம்மாதிரி தண்டனை முறைகள் இருக்கிறது. உலகிலேயே அதிக மரண தண்டனையை நிறைவேற்றும் நாடு சீனா. வருடத்துக்கு சுமார் 200. சுட்டு, மின்சார நாற்காலியில் அமர்த்தி, விஷ ஊசி போட்டு என்று பலவித வடிவங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அரபு நாடுகளில் மக்களின் முன்னிலையில் தலையை வெட்டுகிறார்கள். எந்த வடிவத்தில் நிறைவேற்றப்பட்டாலும், இது மனித உரிமைக்கு எதிரானது.
1950களிலிருந்து 2006 வரை இந்தியாவில் வழங்கப்பட்ட மரண தண்டனைகள் தொடர்பாக ஆய்வு ஒன்றைத் தயாரித்தோம். எங்கள் ஆய்வுகளின்படி, தீர்ப்பு வழங்கும் நீதிபதியின் சமூக சிந்தனை மற்றும் தனிப்பட்ட குணநலன்கள் தொடர்பாகவும் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஒரு வழக்கில் தொடர்புடைய ஒருவர் விடுதலையாவதும், இன்னொருவர் தூக்குக் கைதியாவதும் நடக்கிறது. கீழ்நீதிமன்றம் வழங்குகிற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை செல்லும் உரிமை, தண்டனை பெற்றவருக்கு உண்டு. அது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் சட்டப்பூர்வ நடவடிக்கைதான். அதன் பின்னர் சீராய்வுக் குழுவிலும், அதன் பிறகு ஜனாதிபதிக்கும் கருணை மனு தாக்கல் செய்யலாம். இந்த கருணை மனுக்கள் அப்படியே இருக்கின்றன. தூக்கு தண்டனை பெற்றவர் தினம் தினம் தூக்குமர நிழலில் செத்துக் கொண்டிருப்பார். ஒவ்வொரு இரவும் அவர் மரணத்தின் இருட்டில் வாழ வேண்டியிருக்கிறது. தூக்கிலிடப்படுவதை விட மிக மோசமான சித்ரவதை இது. ‘அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால் எது அரிதான வழக்கு என்று தீர்மானிப்பதற்கு நம்மிடம் வரையறைகள் எதுவும் இல்லை என்னும் நிலையில், மரண தண்டனையை ஒழிப்பது ஒன்றுதான் சிறந்த வழி.
தொகுப்பு: டி.அருள் எழிலன்