அன்பும் நட்பும் உள்ள இனிய இல்லத்தில்தான்இதயம் ஓய்வெடுக்க முடியும் ஹென்றி வேன் டைக்(அமெரிக்க எழுத்தாளர்) வீட்டுவசதிக்கடன் வாங்குவது என முடிவெடுத்த உடனே செய்ய வேண்டியது அதற்கான ஆவணங்களைத் திரட்டுவதுதான்.
நம்மைப் பற்றியவை, மனை/வீடு சம்பந்தப்பட்டவை, விற்பனை செய்பவர் விவரங்கள் என 3 வித ஆவணங்களை நாம் வங்கிக்கு அளிக்க வேண்டும்.
இதோ உங்களுக்கான செக் லிஸ்ட்...
* வங்கிக்கடன் விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, புகைப்படங்கள் ஒட்ட வேண்டும்.
* அடையாளச் சான்று (புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பேன் கார்டு, பாஸ்போர்ட் & இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்)
* முகவரிச் சான்று (ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், டெலிபோன் பில், கேஸ் ரசீது இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்)
* வருமானச் சான்றிதழ் (லேட்டஸ்ட் சம்பளப் பட்டியல் அல்லது சம்பளச் சான்றிதழ், படிவம் 16 (சம்பளதாரர்களுக்கு), கடந்த 3 ஆண்டுகளுக்கான இன்கம்டாக்ஸ் ரிட்டன், பேலன்ஸ் ஷீட் (சுயதொழில் புரிவோருக்கு)
* வங்கிச் சான்று (6 மாத கால வங்கி ஸ்டேட்மென்ட் / பாஸ்புக் நகல்)
* பிராசசிங் கட்டணத்துக்கான காசோலை
* வங்கிக்கு அளிக்க வேண்டிய சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பட்டியல் இதோ...
* பட்டா நகல்
* மூலப்பத்திரங்கள் (தாய் பத்திரங்கள்)
* கடந்த 15 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி.)
* சி.எம்.டி.ஏ. (சென்னை) அல்லது டிடிசிபி சார்பில் ஊராட்சி / பேரூராட்சி / நகராட்சி அளித்துள்ள திட்ட வரைபட அனுமதி, கட்டிட அனுமதி
* சொத்து வரி ரசீது நகல்
* சொத்தை விற்க சம்மதம் என விற்பனையாளரிடமிருந்து கடிதம்
* கட்டுமானப்பணி மேற்கொள்வதாக இருந்தால் பில்டருடனான ஒப்பந்தம் மற்றும் எஸ்டிமேட்
வெளிநாட்டுவாழ் இந்தியர் இந்தியாவில் வீட்டுவசதிக்கடன் வாங்குவதற்கு இன்னும் சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவை...* எம்பிளாய்மென்ட் அல்லது லேபர் கான்ட்ராக்ட் நகல்
* பாஸ்போர்ட் எண், பணியில் சேர்ந்த தேதி ஆகிய விவரங்களுடன் சம்பளச் சான்றிதழ்
* அடையாள அட்டை அல்லது லேபர் கார்டு நகல்
* ஒர்க் பர்மிட் நகல்
* பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்
* ஓவர்சீஸ் வங்கிக்கணக்கின் (என்.ஆர்.ஈ. அல்லது என்.ஆர்.ஓ.) 6 மாத ஸ்டேட்மென்ட்.
* அப்பப்பா... இவ்வளவு ஆவணங்களா என மலைக்க வேண்டாம். எந்த அளவு முறையாக ஆவணங்கள் அளித்து கடன் பெறுகிறோமோ, அந்த அளவு நமக்கு நல்லது. சொத்து ஆவணங்கள் வங்கியில் சரிபார்க்கப்படுவதால் நமக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. எந்த விதத்திலும் நாம் ஏமாறாமல் இருக்க வங்கியும் ஒருவிதத்தில் உதவுகிறது. வருமானச் சான்றுகள் சரிபார்க்கப்படுவதால், வரவுக்கு மிஞ்சி கடன் வாங்கி பிற்காலத்தில் தவிப்பதிலிருந்தும் தப்பித்து விடலாம்!
* ‘இரண்டே நாளில் ஹோம் லோன் தருகிறோம்’ என இனிய குரலில் கடன் விற்பனையாளர்கள் நம்மை அழைப்பார்கள். நம்மிடமிருந்து விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் வாங்கி வங்கியில் சேர்ப்பதோடு முடிந்தது அவர்களின் வேலை. அதன் பிறகுதான் முக்கிய ஆய்வு ஆரம்பம். வங்கியில் வீட்டுக்கடன் பிரிவில் ஒரு பெரிய குழுவே இயங்குகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள்?
* சொத்து ஆவணங்களின் நம்பகத்தன்மை சட்ட வல்லுனர்களின் உதவியுடன் பரிசோதிக்கப்படும். அங்கீகாரம் பெறாத சொத்தாக இருந்தாலோ, ஆவணங்களில் பிரச்னைகள் இருந்தாலோ கடன் வழங்க முடியாதே!
கடன் வாங்குபவரின் பொருளாதார மதிப்பு எவ்வளவு என ஒவ்வொரு விஷயத்துக்கும் மதிப்பெண் அளித்து கூட்டிக்கழித்துப் பார்க்கப்படும்.கடன் வாங்குபவரின் சம்பளத்தைப் பொறுத்து மட்டுமல்ல... அவர் பணிபுரியும் நிறுவனத்தின் தரத்தைப் பொறுத்தும் மதிப்பெண்கள் மாறுபடும். எத்தனை ஆண்டுகளாக அந்நிறுவனம் செயல்படுகிறது, எத்தனை நபர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதுபோன்ற நமக்குச் சம்பந்தமில்லை என நினைக்கக்கூடிய விஷயங்கள்கூட ஆராயப்படும். சில துறைகளில் அல்லது சில நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு கடன் வழங்கப்படுவதில்லை என்ற புகாரையும் அறிந்திருப்பீர்கள்.
நீங்கள் இப்போது வசிக்கும் வீடு, பகுதி, வைத்திருக்கும் வாகனம், குடும்பச் செலவுகள், மற்ற கடன்கள் ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மதிப்பெண் அளிக்கப்படும்.
இப்படி நீங்கள் எழுதாமலே பங்கேற்ற தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் கிடைத்தன? இதில் தேர்ச்சி பெற்றால்தான் கடனுக்கான அடுத்த வாசலுக்குள் நுழைய முடியும். அதுவும் ஒரு பரீட்சைதான்... சிபில் அறிக்கை எனும் கிரெடிட் ரிப்போர்ட்!
அது அடுத்த வாரம்...
(கட்டுவோம்!)
தாஸ்