காலை நேரம்... வரப்பை வெட்டிக் கொண்டிருந்தான் கணேசன். விடியற்காலையின் ஊதுகாற்று அவன் உடம்பிலிருந்த வியர்வையை ஆற்ற முயன்று கொண்டிருந்தது. இவன் வரப்பை வெட்டும் சத்தத்துக்கு, பக்கத்து மரத்தில் அடைந்திருந்த பறவைகள் எல்லாம் நாலா திக்கும் பறந்து மறைந்தன. இரண்டு முயல்கள் வரப்பிலிருந்த ஆவாரஞ்செடியின் மறைவிலிருந்து விருட்டென வெளியேறி உழவுப்புழுதியை நோக்கி ஓடின. மற்ற நேரமாயிருந்தால் அவனும் அந்த முயல்களை விரட்டிக்கொண்டு ஓடுவான். இப்போது அவனால் ஓட முடியவில்லை.
அவன் கைகள்தான் வரப்பை வெட்டிக் கொண்டிருந்தனவே ஒழிய, அவன் நினைவெல்லாம் பூமாரியின் காலடிச் சத்தத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. வழக்கமாக ஆட்களோடு ஆளாக காட்டு வேலைக்கு வரும் பூமாரி, இப்போதெல்லாம் இவனைப் பார்ப்பதற்கென்றே சீக்கிரமாக தனித்தே வந்து விடுகிறாள். உடனே இவன் கைவேலையைப் போட்டுவிட்டு அவளை நோக்கிச்செல்ல, இருவரும் அடர்ந்த சோளக்காட்டின் ஓரத்திலோ, பூவும் காயுமாக சவண்டு கிடக்கும் துவரங்காட்டின் ஓரத்திலோ பார்வையை நாலுபக்கமும் சுழல விட்டவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
அந்நேரத்து அவசர வேலையாக காடுகளுக்குப்போகும் பெரிய ஆட்கள் இவர்களைப் பார்த்ததும், ‘‘என்ன கணேசா! எத்தனை நாளைக்குத்தான் ரெண்டு பேரும் இப்படியே பேசிக்கிட்டு இருக்கப்போறீக? காலாகாலத்தில் கல்யாணத்த முடிச்சிட்டு எங்களுக்கெல்லாம் விருந்து சாப்பாடு போடுறத விட்டுட்டு...’’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.
ஆனால், முகம் தெரிந்த நாளிலிருந்து இவனுடன் ஆசையாகப் பேசவும் பழகவுமாக இருக்கும் பூமாரி, தன் மீது அவன் சுண்டுவிரல் படுவதற்குக்கூட விடமாட்டாள்!
நேற்று தண்ணீர் பாய்ச்சுவதற்காகப் போனவன் எதிரே பூமாரி வருவதைப் பார்த்து அவளை மேலே போக விடாமல் வழிமறித்தபோது, அவள் முகம் சிணுங்கிக்கொண்டே சொன்னாள்.
‘‘பொழுது அடஞ்ச நேரம் எதுக்காவ வழிய மறிச்சிக்கிட்டு இருக்கீக?’’
அவன் கெஞ்சலோடு, ‘‘பூவு! கொஞ்சநேரம் உக்காரு... உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்’’ என்றதும் அவள் ‘உக்கும்’ என்று நொடித்தாள்.
‘‘என்னத்தப் பேசப் போறீரு? எங்கம்மாளும் எங்கய்யாவும் எனக்கு கல்யாணத்த முடிச்சிரணுமின்னு தவிச்சிக்கிட்டு இருக்காக. நேத்துகூட எங்கய்யா கடைத்தெருவுல நின்ன உங்கய்யாவ & அதான் என் மாமாவ & ஒதுக்கமா கூட்டிட்டுப் போயி, ‘என்ன மச்சான்... எப்ப நம்ம புள்ளைக கல்யாணத்த வச்சிக்கிடுவோம்’னு கேட்டாராம்’’ என்றதும் கணேசன் ஆவலோடு, ‘‘அதுக்கு எங்கய்யா என்ன சொன்னாராம்’’ என்று கேட்க, பூமாரி வருத்தத்தோடு சொன்னாள்...
‘‘ஏதாச்சிலும் சொல்லியிருந்தாத்தான் எங்கய்யா கொஞ்சம் துளுத்திருப்பாருல்ல... மாமா ஒண்ணுமே பேசலையாம். ‘பாப்போம் பாப்போம்’னு சொல்லிக்கிட்டே போயிட்டாராம்’’ என்றதும் கணேசன் பெருமூச்சு விட்டான்.
‘‘என்னமோ மச்சான், எங்கல்யாணத்துக்காவ எங்கம்மாவும் அய்யாவும் அவசரப்படுறதும், உங்க வீட்டுல இந்தப் பேச்சையே எடுக்காம இருக்கிறதும் எனக்கென்னமோ பயமா இருக்கு...’’
‘‘என்ன செய்றது பூவு? என் தங்கச்சிக்காவதான் பாத்துக்கிட்டு இருக்காக!’’
‘‘பாக்கட்டும்... நானு வேண்டாங்கல. ஆனா, நமக்கு ஒரு பரிசத்தப் போட்டுட்டு இவுக ஒரு வருஷமில்ல... ரெண்டு வருஷம்கூட கழிச்சி கல்யாணத்த முடிக்கட்டும். நம்ம என்ன வேண்டான்னா சொல்லப்போறோம்’’ என்று பூமாரி கேட்டபோது அதுவும் அவனுக்கு நல்ல யோசனையாகத்தான் பட்டது.
‘இன்னைக்கு கண்டிப்பா இதப்பத்தி அம்மாகிட்ட பேசிடணும்’ என்று நினைத்தவாறு பூமாரியின் முகத்தைப் பார்த்தான்.
கருத்த மேகத்துக்குள் நிலவைப் பதித்தது போல் அவள் முகம் பளிச்சென்று இருந்தது. அடர்ந்த புருவக்கட்டின் கீழ் இருந்த அவள் கறுத்த விழிகள் குறும்போடு துறுதுறுத்துக் கொண்டிருந்தன. மூக்கில் அவள் போட்டிருந்த ‘ஆடும் மயில்’ மூக்குத்தி அவள் முகத்தையே வசீகரித்துக் கொண்டிருந்தது. மெல்லிய சின்ன உதடும் சிறுகுழிவிழுந்த நாடியுமாக, அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆசையாக இருந்தது. அந்த ஆசையில் அவள் கைகளைப் பிடிக்க, வெடுக்கென்று தன் கைகளை இழுத்துக் கொண்ட பூமாரி பயத்தோடு சுற்றிலும் பார்த்தாள்.
‘‘ஆத்தாடி இதென்ன அதங்கொதமான (அசிங்கமான) வேலை செய்தீரு?’’
‘‘உன்ன என்ன கட்டியா புடிச்சிட்டேன்?!’’
‘‘இனி இது வேற செய்யணுமாக்கும்? நல்லவேள வீரணத் தாத்தா பாத்தாராங் காட்டி குத்தமில்லாமப் போச்சி. இந்நேரத்துக்கு வேற யாரும் பாத்துருக்கட்டும்...’’
‘‘என்ன நடந்துடும்? நம்ம ரெண்டு பேரும் கட்டிக்கப் போறவகன்னு ஊரெல்லாம் தெரிஞ்சதுதான?’’
‘‘இருந்தாலும் தாலி கழுத்துல விழுந்தாத்தான் நீரு என் கையப் புடிக்கலாம். அதுக்கு முன்ன இப்படியெல்லாம் செஞ்சீரு... நானு பொல்லாதவளா இருப்பேன்’’ என்றவள், அவனிடம் சொல்லிக் கொள்ளாமலே விறுவிறுவென்று நடந்தாள்.
கணேசனுக்கு ஏமாற்றமாக இருந்தது. விவரம் தெரிந்த நாளிலிருந்து அவன் பூமாரியோடு பழகிக் கொண்டுதான் இருக்கிறான். இவன் வீட்டிலும் சரி, அவர்கள் வீட்டிலும் சரி... இவர்களைப் பழக விட்டு வேடிக்கை பார்த்தார்கள். ஆனால், இப்போதெல்லாம் அவனால் முன்புபோல பூமாரியிடம் களங்கமில்லாமல் பழக முடியவில்லை. அவளின் நினைப்பே அவனைத் தீயாகத் தகிக்க வைத்தது. ஒரு வருஷம் வரையில் பொறுத்துப் பார்த்தவன், அவனாகவே தன் கல்யாணத்தைப் பற்றி பெற்றவளிடம் சொன்னபோது, அவன் ஆத்தா எரிச்சலும் கண்டிப்புமாகச் சொன்னாள்.
‘‘ஏலேய்! உன் அவசரத்துக்கு நடக்க எங்களால முடியாது. முதல்ல தங்கச்சிய கட்டிக்கொடுக்கணும். பெறவு அவளுக்குண்டான சீரு, வருச, புள்ளப்பெறப்பு, முடியெடுப்பு அம்புட்டயும் செஞ்சி முடிச்சிட்டுத்தான் உன் கல்யாணத்தைப் பத்தி பேசணும். உனக்கு முதல்ல கல்யாணத்த முடிச்சிட்டு காசுக்கும் பணத்துக்கும் உன்ன தொணாந்துக்கிட்டு (கெஞ்சுதல்) அலய எங்களால முடியாது’’ என்று சொல்ல கணேசன் நொந்து போனான்.
‘‘என்னம்மா இப்படி சொல்லுதே? எம்மேல நம்பிக்கை இல்லையா? தங்கச்சி கல்யாணத்த நானு முடிச்சி வைக்கமாட்டனா?’’
‘‘நீ முடிச்சி வைப்படா... உனக்கு தங்கச்சி மேல பாசமிருக்கு. ஆனா உன் பொண்டாட்டியும் உன் தங்கச்சி மேல பாசமா இருப்பான்னு எப்படி நம்பறது? அதுலயும் உன் தங்கச்சிக்கு ஒரு காலு ஒச்சம் (ஊனம்). அவ ஆளாயி நாலு வருசம் ஆச்சி. இன்னும் ஒருத்தங்கூட பொண்ணுன்னு கேட்டு நம்ம வீட்டுப்படி ஏறிவரல. நாங்க கல்லுக்குத்தியா இருக்கேலேயே இப்படி இருக்கின்னா, நாள என்ன நடக்குமின்னு யாரு கண்டா? தங்கச்சிய ஒருத்தன் கையிலப் புடிச்சிக் கொடுத்த பெறவுதான் உன் கல்யாணத்தப் பத்தி பேசணும்.’’
‘‘அம்மா, பூமாரிதான் எனக்குப் பொண்டாட்டியா வரப்போறா. அவ நல்ல குணமின்னு உனக்கு நானு சொல்லித்தர வேண்டியதில்ல. அதோட அவளுக்கும் தங்கச்சிமேல ரொம்ப பிரியம் மட்டுமில்ல, அக்கறையும் இருக்கு...’’
‘‘நீ சொல்றதயெல்லாம் கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னு யாரு கண்டா? பூமாரி நல்லவதான். உனக்குப் பொண்டாட்டியா வந்த பெறவு அவகுணம் மாறாதுன்னு என்னத்தக்கண்டேன்? அதனால உன் தங்கச்சிக்கு ஒரு கல்யாணத்த முடிச்சிட்டுத்தான் உனக்கு கல்யாணம். இத மனசுல போட்டுக்கிட்டு சீக்கிரம் அவளுக்கொரு மாப்பிள்ளையைப் பாரு’’ என்று சொன்னதிலிருந்து அவனால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரமாக இருந்தான்.
நேற்றுக்கூட அவன் உயிர் நண்பனான ராசாவிடம், ‘‘நீ எந்தங்கச்சியக் கட்டிக்கிட்டேன்னு வச்சிக்கோ. நானு உனக்கு வேணுங்கிற சீரு செய்றதோட, நம்ம என்னைக்கும் இப்படியே பிரியாத சேத்திக்காரகளா இருக்கலாம்’’ என்றதும் ராசா அவசரமாக, ‘‘வேண்டாம்ப்பா... சில நேரத்தில மச்சினன், மாமன் உறவு வெட்டுக்குத்துல கொண்டு போயிவிட்டுடும்’’ என்றவன், இவன் பதிலை எதிர்பார்க்காமலே நடந்தான்.
கெடைக்கு காவல் இருந்த கணேசனுக்கு ராசா நடந்த வேகநடைதான் திரும்பத் திரும்ப நினைவுக்குள் வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தது. அந்த நினைப்பிலேயே இருந்தவன் வரப்பில் நெருங்கிவிட்ட சிட்டுவைக்கூட கவனிக்கவில்லை. பூமாரியின் சேத்திக்காரி ஆயிற்றே இவள். எதற்கு அரக்கப்பரக்க போகிறாள்! கேள்விகள் தவிக்க, புல்லுக்கட்டு சுமையோடு வேக வேகமாய் நடந்த சிட்டுவைத் தடுத்து நிறுத்தினான்.
‘‘ஏத்தா எதுக்கு இப்படி ஓடுதே’’ என்று கேட்டவனை கேலியாகப் பார்த்தாள் சிட்டு.
‘‘என்னத்தா... நானு கேக்கிற கேள்விக்கு பதிலு சொல்லாம என்ன எடக்குப்பார்வ பாத்துக்கிட்டு இருக்கே?’’
‘‘இல்ல, தெரிஞ்சுதான் கேக்கிறயா? தெரியாமத்தான் கேக்குறியான்னு புரியல...’’
‘‘என்ன விஷயம் சொல்லு?’’
‘‘பூமாரிக்கு இன்னைக்கு பரிசம் போடப்போறாகல்ல. உனக்கு விவரம் தெரிஞ்ச நாளையிலிருந்து அவமேல உசுரா இருந்துட்டு இப்ப அவள அடுத்தவனுக்குக் கட்டிக் கொடுத்துட்டயே? நீயெல்லாம் என்ன மனுசன்?’’ என்று கேட்டவாறே முன்னிலும் விரைவாக நடந்தாள் சிட்டு.
(தொடரும்)