கோடைக்கேற்ற குளுகுளு!
கோடை கொளுத்தத் தொடங்கிவிட்டது. வெயில் காலத்துக்கென உணவுமுறைகளில் மாற்றம் செய்தால் உடலை குளிர்ச்சியாக வைக்க முடியுமா?ஆர்.ஜோதி, வேலூர்.
பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஸ்டெல்லா கோடை காலத்தில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். அதிக அளவு திரவங்களை அருந்துங்கள். பழரசங்கள், காய்கறி ஜூஸ் ஆகியவை வெயிலை விரட்ட உதவுவதோடு, உடலுக்கு ஊட்டமும் அளிக்கும். சாதா டீ, காபிக்கு பதிலாக மூலிகை டீ அல்லது சூப் அருந்துவது நல்லது. கொத்தமல்லி, இஞ்சி, மிளகு ஆகியவற்றை உணவில் சேர்ப்பது குளிர்ச்சியைக் கூட்டும். சுக்கு, லவங்கம் ஆகியவை வெதுவெதுப்பைத் தரும். சமைக்காத மற்றும் ஆவியில் வெந்த உணவே கோடைக்கு உகந்தது. டீப் ஃப்ரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை வகைகள், இலைக்காய்கறிகள், முள்ளங்கி, வெள்ளரி, தக்காளி ஆகியவை கோடை உணவில் இடம் பிடிக்கட்டும். இரு உணவுகளுக்கு இடையே பழங்கள் அல்லது காய்கறி சாலட் சாப்பிடலாம். பாகற்காய்க்கு குளிர்ச்சி மற்றும் சுத்திகரிப்புத் தன்மை உண்டு. கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்கள் சத்தும் குளிர்ச்சியும் தரும். வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கீரை, பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்தி சூப் தயாரித்து அருந்துவது தாதுச்சத்தையும் குளிர்ச்சியையும் தரும். ராஜ்மா, லிமா பீன்ஸ், பாசிப்பருப்பு ஆகியவையும் கூலிங் தரும். இறைச்சி அதிக சூடு என்பதால் கோடையில் மீனுக்கும் காய்கறிகளுக்கும் மாறலாம்.நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்குத் தொடுப்பது எப்படி? என்னென்ன தகுதிகள் தேவை? யாரை அணுக வேண்டும்? நா.வெங்கடேசன், பேராவூரணி.
பதில் சொல்கிறார் வழக்கறிஞர் பழனிமுத்து.ஒரு பொருளை விற்பவர் - விற்பனையாளர். வாங்குபவர் -நுகர்வோர். நுகர்வோருக்கு சில அடிப்படை உரிமைகளும் கடமைகளும் உண்டு. பொருளை வாங்கும்போது அதன் விலை, பேக்கிங் செய்த தேதி, காலாவதி தேதி, அளவு ஆகியவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். இது நுகர்வோரின் கடமை. பொருளை வாங்கும்போது கண்டிப்பாக அதற்கான ரசீதை கேட்டுப்பெற வேண்டும். ரசீது பெறுவது நுகர்வோரின் உரிமை. அளவில் குறைவாக இருந்தாலோ, தரம் குறைந்தாலோ, பொருத்தமில்லாத விலைக்கு விற்கப்பட்டிருந்தாலோ, பொருளின் தன்மை மாறியிருந்தாலோ அதுபற்றி கேள்வி கேட்க நுகர்வோருக்கு உரிமை உண்டு. அந்தப் பொருள் வாங்கிய கடைக்கும், தயாரித்த நிறுவனத்துக்கும் கடிதம் எழுதி விளக்கம் கேட்கலாம். பதில் வராவிட்டாலோ, வந்த பதிலில் திருப்தி இல்லாவிட்டாலோ வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பலாம். அல்லது, நீங்களே நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகலாம். இந்த மன்றத்தைப் பொறுத்தவரை வழக்கறிஞர் மூலமாக வழக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பொருள் வாங்கிய ரசீது, நீங்கள் எழுதிய கடிதம் மற்றும் உங்களுக்கு வந்த பதில் கடிதத்தோடு மன உளைச்சல், நஷ்டஈடு ஆகியவற்றைக் குறிப்பிட்டு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளன. ஓய்வுபெற்ற ஒரு நீதிபதியின் தலைமையிலான இந்த மன்றத்தில் இரண்டு சமூக ஆர்வலர்கள் உறுப்பினராக இருந்து தீர்ப்பு வழங்குவார்கள். குறைந்தபட்ச நீதிமன்றக் கட்டணத்தைச் செலுத்தினாலே போதும். இயற்கை நீதிப்படி தங்கள் தரப்பை விளக்க ஒவ்வொருவருக்கும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். வழங்கப்படும் தீர்ப்பில் நுகர்வோருக்கு திருப்தி இல்லையெனில் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்யலாம். இந்த தீர்ப்பாயம் மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலையில் உள்ளது. அந்தத் தீர்ப்பிலும் திருப்தி இல்லாவிட்டால் டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்யலாம்.
|