அஜித் ரீசார்ஜ் பண்ணி விட்டாரா?



‘வதந்தி மாதம்’ என்றே அறிவிக்கலாம் நவம்பர் மாதத்தை. புயல், மழை, வெள்ளம் ஒரு பக்கம் என்றால்... புரளி, வதந்தி, பீதி இன்னொரு பக்கம். ஏற்கனவே அவனவன் ‘வருங்கால அண்ணா நகர்’ என்று வாங்கிய வீடுகள், நிகழ்கால தனுஷ்கோடி ஆகிக் கிடக்கின்றன.

இதில் ‘மதுராந்தகம் ஏரி உடைச்சுக்கிச்சு...’, ‘சென்னை நாசமாயிடும்னு நாசாவே சொல்லிடுச்சு’ என பெட்ரோமாக்ஸ் லைட் மீது பெட்ரோல் ஊற்றின வாட்ஸ்அப் வதந்திகள். இந்த வதந்திக் குவியலுக்கு இடையே, ‘நாளை பள்ளி விடுமுறை’ என்று வந்தவை நிஜமா? இல்லையா? என ஒவ்வொரு நாளும் மக்கள் பரிதவித்தது பரிதாபக் கதை!

‘‘மழை வெள்ளம் பாதிப்புன்னா, வந்து உதவி செய்யாட்டியும் பேசாம இருக்கணும். அதை விட்டுட்டு இப்படி டைப் டைப்பா யோசிச்சு டைப் அடிச்சு அனுப்புறவங்கல்லாம் என்ன மனுஷங்க? சென்னையில 114 செ.மீ மழை பெய்திருக்கு. அதுவே வரலாறு காணாத மழைங்கறாங்க. ஆனா, பஞ்சாங்கம் சொல்லிச்சு, நாசா சொல்லிச்சு... 250 செ.மீ மழை பெய்யும்னு வாட்ஸ்அப்ல வந்தது பாருங்க... படிச்சதுல இருந்து எங்க உயிர் எங்க கையில இல்ல!’’ என்கிறார் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சென்னைவாசி ஒருவர்.

திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜிலேபி தருவதாக சொல்லும் சினிமா பொய்யை மிஞ்சி விட்டது இன்னொரு வதந்தி. திருப்பதியில் பலத்த மழை பெய்ததும், ‘கோயிலுக்குள் வெள்ளம் வந்து வரலாற்றில் முதல் முறையாக வெங்கடாஜலபதி கோயிலையே மூடி விட்டார்கள்’ என்று ஒரே போடு போட்டது அந்த செய்தி. திருமலை தேவஸ்தானமே அது பொய் என்று அறிக்கை விடும் அளவுக்கு அந்தச் செய்தி பரவிய விதம் வைரல்.

சென்னை மட்டுமா? தூத்துக்குடியிலும் வெள்ளம்தானே... அங்கு ஆதிபராசக்தி நகரில் மழை நீருடன் முதலை ஒன்று வந்ததாக விட்டார்கள் கப்சா. இந்தச் செய்தியோடு இணைக்கப்பட்டிருந்தது பாவம்... ஆப்ரிக்கா பக்கம் வாழும் ஒரு அப்பாவி முதலை. தூத்துக்குடிக்கெல்லாம் அதற்கு ரூட் தெரியாது. ‘சரி, லாஜிக்கலாய் யோசிப்போம்’ என அடுத்த வதந்தியை வேறு மாதிரி கிளப்பினார்கள்.

‘சென்னை முதலைப் பண்ணையில் வெள்ளம் வந்தபோது சில முதலைகள் தப்பித்துவிட்டன. அவை எந்த நேரமும் உங்கள் வீட்டுக்கதவைப் பிறாண்டலாம்’ என்றது அந்த ஃபார்வேர்டு. இதையும் முதலைப் பண்ணை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து முடித்து வைத்தார்கள்.இந்த கொலை குத்துக்கு இடையே இன்னொரு கிச்சுகிச்சு. ‘வேதாளம்’ படத்தின் 100 கோடி வசூலைக் கொண்டாடும் விதமாக நடிகர் அஜித் வேலை மெனக்கெட்டு ரசிகர்களுக்கு 100 எம்.பி டேட்டா, 100 ரூபாய் டாக்டைமுக்கு ரீ சார்ஜ் பண்ணி விடுகிறார் என்று அறிவித்தது அந்த வதந்தி.

இது தவிர, ‘சந்தானம் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டார்’, ‘ரத்தப் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது’, ‘புதிய வாட்ஸ்அப்பில் கிரீன் டிக் வருகிறது’ என வதந்திகளுக்கு இந்த மாதம் பஞ்சமே இல்லை. இவற்றில் எதுவுமே உண்மை இல்லை.‘‘இப்படியெல்லாம் ரூம் போட்டு ரூமர் கிளப்புவதில் யாருக்கு என்ன லாபம்?’’

‘‘பெரும்பாலும் இந்த மெசேஜ்கள் முடியும்போது கூடுமானவரை அதிகம் பேருக்கு இந்தச் செய்தியை அனுப்புங்கள் என்றுதான் வரும். லட்சக்கணக்கானவர்களுக்கு பகிரப்படும்போது, அவர்களின் மொபைல் நம்பர்களை எல்லாம் எடுத்து மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விற்க முடியும். இது லாபம்தானே!’’ என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

 ஆக, முடிந்தவரை இவர்களின் நோக்கத்துக்கு பலியாகாமல் நமது ஃபார்வேர்டு வியாதியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வதந்திகளோடு வதந்தியாக ‘வரும் ஜனவரி 28ம் தேதியுடன் வாட்ஸ்அப்பையே இழுத்து மூடப் போகிறார்கள்’ என்றும் ஒரு வதந்தி வந்தது. அது மட்டும் உண்மையாகி விடாதா என மனம் ஏங்குகிறது!

- நவநீதன்