பியூட்டி சமந்தா... க்யூட்டி நித்யா...



வில்லன் சூர்யா!

24 இயக்குநர் விக்ரம்குமார் சொல்லும் சீக்ரெட்ஸ்


ஐதராபாத்தில் ஒரு பரபரப்பான மார்க்கெட். பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு, சிரித்த முகமாக ஒரு திசையில் திரும்பிப் பார்க்கிறார் சூர்யா. பூ போட்ட பிங்க் கலர் புடவையில் பளிச் புன்னகையோடு வரும் சமந்தா பைக்கில் தாவி ஏறிக்கொள்ள... ‘‘கட்’’ சொல்லிவிட்டு ப்ரேக் விடுகிறார் இயக்குநர் விக்ரம்குமார். மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ மூலம் பேய் டிரெண்டை தமிழில் துவக்கி வைத்த இயக்குநர். தெலுங்கில் சக்சஸ்ஃபுல் டைரக்டர்.

‘‘எப்பவுமே ஹாரர் படங்கள் ஒரு கிரியேட்டருக்கு பெஸ்ட். நம்ம கற்பனைக்கு அதுல கட்டுப்பாடே கிடையாது. எப்படி வேணாலும் யோசிக்கலாம். எந்த நடிகரையும் அதில் பொருத்தமா கொண்டு வந்துட முடியும். ஒரு ஹாரர் சப்ஜெக்ட்ல கொஞ்சம் காமெடி மிக்ஸ் பண்ணினா அது ‘யாமிருக்க பயமேன்’, ‘டார்லிங்’... அதிலேயே சென்டிமென்ட் கலந்தா ‘மாயா’...

இப்படி பேய்க்கதையை ஒரு இயக்குநர் எப்படி வேணா கொண்டு போகக் கூடிய சுதந்திரம் உண்டு. ‘யாவரும் நலம்’ சமயத்துல பேய்க்கதைன்னாலே புரொடியூஸர் கிடைக்க மாட்டாங்க. நடிகர்கள் கூட கமிட் ஆக யோசிப்பாங்க. இப்போ எல்லாருமே ‘பேய்’னு சொன்னாலே அள்ளிக்கிறாங்க. இளம் இயக்குநர்களின் ஹாரர் படங்களையும் கவனிச்சிட்டுதான் இருக்கேன்!’’ - நீண்ட நாள் பழகிய நண்பரைப் போல பேசுகிறார் விக்ரம்குமார்.

‘‘ ‘யாவரும் நலம்’ படத்துக்கு அப்புறம் டோலிவுட் பக்கம் ஒதுங்கிட்டீங்களே..?’’‘‘எங்கே பட வாய்ப்புகள் கிடைக்குதோ அங்கே வொர்க் பண்ண வேண்டியதுதானே பாஸ்! தெலுங்குல பிஸியா இருந்தாலும், ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையாவது சென்னைக்கு வந்துட்டு போயிடுவேன். ஏன்னா, நான் சென்னையில காலேஜ் படிச்சவன். இந்த முறை சூர்யா சாரோட வர்றதால பிரைட்ஃபுல் என்ட்ரி!’’‘‘அதென்ன ‘24’?’’

‘‘டைட்டில் பத்தி சொல்ல ஆரம்பிச்சா, கதைக்குள்ள இழுத்துட்டுப் போயிடும். ஏப்ரல்லதான் ரிலீஸ். படத்தை பார்க்கும்போது, ‘இந்தத் தலைப்பை விட வேறெந்த டைட்டிலும் இதுக்குப் பொருத்தமா இருக்க முடியாது’னு நீங்களே சொல்வீங்க. தெலுங்கில் நாகேஸ்வர ராவ் சார், நாகார்ஜுனா சார்னு அவங்க குடும்பமே சேர்ந்து நடிச்சு நான் இயக்கின ‘மனம்’ படம் பெரிய ஹிட்.

அதைத்தான் சூர்யா சார் ரீமேக் பண்ண விரும்பினார். ‘என்கிட்ட ஒரு கதை இருக்கு. முதல்ல அதை சொல்லிடுறேன். அது உங்களுக்குப் பிடிக்காம போனால், நாம ‘மனம்’ படத்தை ரீமேக் பண்ணலாம்’னு சொல்லிட்டுத்தான் இந்தக் கதையை சொன்னேன். சூர்யா சாருக்கு இது பிடிச்சுப் போச்சு. ‘சூப்பர்! படத்துல நிறைய கெட்டப்கள் இருக்கு. கதைக்கும் அது ரொம்ப தேவையா இருக்கு. மேக்கப், கிராஃபிக்ஸ் எல்லாம் ஹாலிவுட் லெவலில் பண்ணினாதான் சரியா இருக்கும். வேற யாரும் இவ்வளவு செலவு செய்வாங்களானு தெரியல... ஸோ, நானே படத்தை தயாரிக்கறேன்’னு சொல்லிட்டார்!’’

‘‘ ‘ஜில்லுனு ஒரு காதல்’க்கு அப்புறம் சூர்யா - ஏ.ஆர்.ரஹ்மான் சூப்பர் ஹிட் காம்பினேஷன் இதில்...’’‘‘என்கிட்ட கதை கேட்டு கொஞ்ச நாள்ல ரஹ்மான் சாரை ஒரு ஃபங்ஷன்ல சூர்யா சார் மீட் பண்ணியிருக்கார். ‘நம்ம காம்பினேஷன் வந்து ரொம்ப நாளாகுதே’னு ரஹ்மான் சார் ஜாலியா கேட்டிருக்கார். நான் அவரைப் பார்த்து கதை சொல்லப் போனேன்.

முதல்ல அரை மணி நேரம் ஒதுக்கியிருந்த ரஹ்மான், அதுக்கப்புறம் கதையில ரொம்பவே இன்வால்வ் ஆகி மூன்றரை மணி நேரம் பொறுமையா உட்கார்ந்து கேட்டார். இதுல பாடல்கள் அருமையா வந்திருக்கு. ஒரு புது அனுபவத்துக்கு உங்களைக் கொண்டு போக வைக்கும்னு நிச்சயம் சொல்வேன். 2016 ரஹ்மான் சார் ஆண்டா அமையும். இனி என்னோட எல்லா படங்களுக்கும் ரஹ்மான் சாரே இசையமைச்சா சிறப்பா இருக்கும். அடுத்தடுத்து அவரோட இணைந்து வொர்க் பண்ண விரும்புறேன்!’’


‘‘ரெடிமேட் கதையில சூர்யா எப்படி செட் ஆனார்?’’‘‘அப்படியில்ல. நான் எப்போ கதை யோசிச்சாலும் யாரையும் மனசுல வைக்காம நல்ல கதையா யோசிப்பேன். முழுக்கதையும் ரெடியானதும்தான், அதுக்கு யார் பொருத்தமா இருப்பாங்கனு யோசிப்பேன். மல்டிபிள் கேரக்டர் கதை இது. அதுல ஒரு கேரக்டர் வில்லன். வில்லன்னா, நம்ம ஆழ்மனசைப் பிடிச்சி ஒரு ஆட்டு ஆட்டுற அளவுக்கு வில்லன்.

சூர்யா சாரோட ஒவ்வொரு கெட்டப்புக்கும் கிட்டத்தட்ட நாலு மணி நேரம் மேக்கப்புக்கே டைம் ஆகும். நாங்க ஷூட்டிங் தொடங்கின டைம்ல ஐதராபாத்ல வெயில் சுட்டெரிச்சுது. கடினமான மேக்கப், கோட் - சூட் காஸ்ட்யூம்னு அந்த சம்மரிலும் சூர்யா சார் முகம் சுளிக்காம நடிச்சார். லண்டன்ல இருந்து வந்திருந்த மேக்கப் டீமே சூர்யா சாரோட அந்த டெடிகேஷனைப் பார்த்து ஆச்சரியமானாங்க. இந்தப் படத்துக்கு அவர் தயாரிப்பாளராகவும் இருக்கறதால, நான் கேட்ட அத்தனையையும் பண்ணிக் கொடுத்தார். ஒரு தயாரிப்பாளரா, நடிகரா இந்தப் படத்தில் உழைச்ச அவர்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்கள் அதிகம்!’’
‘‘ஹீரோயின்கள் பத்தி..?’’

‘‘சமந்தா, நித்யா மேனன் ரெண்டு பேருமே பிரமாதமான நடிகைகள். சமந்தா பியூட்டினா, நித்யா க்யூட் கேர்ள். அழகா பர்ஃபார்ம் பண்ற ஆர்ட்டிஸ்ட் அமையும்போது இயக்குநரோட வேலை குறையும். இதுல சமந்தாவோட கேரக்டர் பெயர் சத்யா. பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி ஒரு பாந்தமான லுக். சமந்தா வர்ற சீன்கள்ல எல்லாம் நம்மளை அறியாமலே சிரிப்பு அள்ளும். அதுவும் சூர்யா - சமந்தா லவ் சீன்ஸ் எல்லாத்திலும் காமெடி கேரன்டி. நித்யா மேனன் என்னோட ஃப்ரெண்ட். தெலுங்கில் என் இயக்கத்தில் ஏற்கனவே நடிச்சிருக்காங்க. ‘ஓகே கண்மணி’ டைம்ல அவங்களை கமிட் பண்ணினோம். மறுப்பேதும் சொல்லாமல் சம்மதிச்சாங்க. தேங்க்யூ நித்யா!’’

‘‘படத்துல வேற என்ன ஸ்பெஷல்?’’‘‘சிம்பிளா சொல்றதா இருந்தா இந்தப் படம் கண்டிப்பா ஒரு விஷுவல் ட்ரீட். எப்பவுமே என் டெக்னீஷியன்ஸ் டீம்தான் என்னோட பலம். அப்படி ஒரு அருமையான டீம் இந்தப் படத்துலயும் அமைஞ்சிருக்கு. மேக்கப் எல்லாம் லண்டன்ல இருந்து பண்ற மாதிரி, கிராஃபிக்ஸ் பிரான்ஸ்ல இருந்து பண்றாங்க. ‘ஆளவந்தான்’, ‘ஹே ராம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணிட்டு பாலிவுட்ல பிஸியா இருக்கற கேமராமேன் திரு. நான் பிரியதர்ஷன் சார்கிட்ட அசிஸ்டென்டா இருக்கும்போதுல இருந்து அவரைத் தெரியும்.

அவர் ஒளிப்பதிவு மட்டும் பண்ணல... எனக்கொரு நல்ல கைடா இருந்து பெஸ்ட் விஷுவல்ஸ் கொடுத்திருக்கார். நிறைய செட்கள் போட்டிருக்கோம். ஆர்ட் டைரக்டர்கள் அமித் ரே, சுபத்ராவின் செட்டுகளை பார்த்து சூர்யா சாரே பாராட்டினார். ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களுக்கு ஸ்டன்ட் பண்ணின அன்பறிவோட ஃபைட் ஸ்டைல் எனக்கு பிடிச்சுப் போச்சு. இனிவரும் படங்கள்லயும் அவங்களோட வொர்க் பண்ண சந்தர்ப்பங்கள் வரும்னு நினைக்கறேன்!’’

‘‘சிம்புவை வைத்து ‘அலை’, மாதவனுக்கு ‘யாவரும் நலம்’ பண்ணுனீங்க. அவங்களோட தொடர்பில் இருக்கீங்களா?’’‘‘நடிகர் என்பதைத் தாண்டி மாதவன் எனக்கு நல்ல நண்பர். பர்சனலாவே நாங்க அடிக்கடி பேசிக்குவோம். மறுபடியும் அவரோட படம் பண்ணுவேன். இப்போ அவர் பாலிவுட்ல சில ப்ராஜெக்ட்ஸ்ல பிஸியா இருக்கார். அதை அவர் முடிச்சதும் தொடங்கலாம்னு ஐடியா இருக்கு. பார்க்கலாம்!’’

- மை.பாரதிராஜா