குட்டிச்சுவர் சிந்தனைகள்



பள்ளிக்கூடம் படிக்கிற குழந்தைகளுக்கு சமணர் பற்றி தெரியுதோ, இல்லையோ... நம்ம சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கு. கடந்த ரெண்டு வாரமா குழந்தைகளுக்கு சோட்டா பீமோ, ஸ்பைடர் மேனோ, மோட்டு பட்லுவோ ஹீரோ இல்ல...

நம்ம ரமணன் சார்தான் ஹீரோ.  இணையவாசிகள் மீம்ஸ் போட்டு முதல்முறையா சந்தோஷமா கிண்டல் செஞ்சது நம்ம ரமணனைத்தான். மழை பகவான் வருணனை ரமணன் சந்திச்சாருன்னா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை.

வருணன்: வணக்கம் ரமணன் சார், ஊருல மழைக்கெல்லாம் குறைச்சல் இல்லையே? இருந்தா சொல்லுங்க, ஒரிசா போற வழில கொஞ்சம் கொட்டிட்டுப் போறேன்.
ரமணன்: பகவானே, உங்க புண்ணியத்துல மழைக்குக் குறைச்சல் எல்லாம் இல்ல, கூடுதல்தான் இருக்கு. வருணன்: அப்புறம், தமிழ்நாட்டுல ஒரு காலத்துல குழந்தைங்க எல்லாம் ‘ரஜினி அங்கிள்’னு ஓடி வருவாங்களாம்;

இப்ப ‘ரமணன் அங்கிள்’னு ஓடி வர்றாங்களாமே? விஜய், சிவகார்த்திகேயனை விட இப்ப உங்களுக்குதான் குழந்தைகள்ல ரசிகர்கள் அதிகம்னு பேசிக்கிறாங்க! அப்படியா? இப்ப ஹார்லிக்ஸ், பூஸ்ட் கம்பெனிங்க கூட, உங்க படம் போட்ட டாட்டூவ தங்கள் பொருட்களோட இலவசமா தராங்களாம். இந்த மாசத்துல இருந்து உங்க போட்டோ போட்ட நோட் புக், ஸ்கூல் பேக்கெல்லாம் வருதாமே?

ரமணன்: எல்லாம் உங்க ஆசீர்வாதம். நீங்க மத்தவங்களுக்கு வேணா வருண பகவானா இருக்கலாம்; ஆனா எனக்கு நீங்க கருண பகவான். மழை வருதோ இல்லையோ, ‘மழை வந்திடும்’னு நான் சொல்லி சொல்லியே ஸ்கூல்ல லீவு விட வைக்கிறதுனால எனக்கு குழந்தைகளோட அன்பு முழுசா கிடைச்சிடுச்சு. என்ன... இந்த ஸ்கூல் பிரின்சிபாலுங்கதான் என்னை குழந்தைகளோட ஸ்லீப்பர் செல்லா பார்க்கிறாங்க.

கும்பகோணத்துல நாலாம் வகுப்பு மாணவர்கள் 40 பேர், வீட்டுல மிட்டாய் வாங்க கொடுத்த காசுல எனக்கு ஃப்ளெக்ஸ் பேனர் அடிச்சிருக்காங்க. கும்மிடிப்பூண்டில எட்டாம் வகுப்பு மாணவர்கள் 20 பேர், பென்சில் ரப்பர் வாங்குற பைசால எனக்கு ஊரு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்க. போதாக்குறைக்கு இந்த கல்லூரி மாணவர்கள், அவங்கவங்க பரீட்சை ஹால் முன்னால எனக்கு கட் அவுட் செஞ்சு வச்சிருக்காங்க. இந்த அன்புக்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியல. ரிட்டயர் ஆகறதுக்குள்ள, என்னால முடிஞ்சளவு பசங்களுக்கு லீவு வாங்கித் தர்றதுன்னு தீர்மானம் பண்ணி தீயா வேலை செய்யறேன்... அதுக்கு நீங்கதான் ஒத்துழைப்பு தரணும்.

வருணன்: அது என் கடமை! சில சமயம் மழையா விடலாமா, இல்ல வெயில தொடலாமான்னு நினைக்கிறப்ப, உங்க வானிலை அறிக்கைய வைகுண்டத்துல பார்த்துட்டுதான் முடிவே எடுப்பேன். எனக்கே சிவலோகத்துல இருக்கிற என் ஆபீஸ் போக பிடிக்கலைனா, உங்க வானிலை அறிக்கையை காரணம் காட்டிட்டு கட் அடிச்சுடுவேன்.

எனக்கு ஒரு டவுட், வானிலை அறிக்கை சொல்றப்ப ‘மெதுவான அல்லது வேகமான காற்றுடன், கனமான அல்லது மிதமான மழை இன்று பெய்யலாம், பெய்யாமலும் போகலாம்’னு எப்படி அக்யூரேட்டா கணிக்கறீங்க? அப்புறம் நீங்க வந்தப்புறம்தான் வானிலை அறிக்கை கூட வாழப்பாடியார் அறிக்கை மாதிரி சும்மா கலகலன்னு இருக்குன்னு சொல்றாங்க. அடை மழை, கோடை மழை, பனி மழை, இன்ப மழை... ஏன், இன்னிசை மழை கூட கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா நீங்க சொல்லித்தான், கன மழைன்னு ஒண்ணு இருக்கிறதே எனக்குத் தெரியும். ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’னு ஒண்ணு சொல்றீங்க பாருங்க, அதெல்லாம் பட்டாசு வார்த்தைகள்.

ரமணன்: என்ன பகவானே பண்றது? மாட்டுப் பால் குடிச்ச மக்கள் இப்ப மசாலா பால் கேட்கிறாங்க. மூக்குப் பொடி, பல் பொடின்னு வித்த ஊருல இப்ப மசாலா பொடிகள்தான் அதிகம் விற்குது. மனசை வருடுற மாதிரி படம் எடுத்த நாட்டுல இப்ப வர்றதெல்லாம் மசாலா படம்தான். மக்கள் எல்லாத்துலயும் மசாலா கேட்கிறாங்க. அதான் நாங்களும் புதுசு புதுசா வார்த்தைகளை விட்டு வாண வேடிக்கை காட்டுறோம்.

அடுத்த கட்டமா ‘முட்டிக்கால் அளவுக்கு மழை வரலாம்’, ‘முழங்கால் அளவுக்கு வெள்ளம் வரலாம்’னு சொல்ல பிளான் போட்டிருக்கோம். நான் ரிட்டயர் ஆனாலும் எனக்கு பின்னால வர்றவங்க புதுப்புது வார்த்தைகளை பயன்படுத்துவாங்க. ஆனா விதை, நான் போட்டது. என்ன இருந்தாலும் நம்ம கவனம் மக்களை மழை, புயல் வெள்ளத்தில் இருந்து காப்பாத்தறதுதானே! வருணன்: இந்த 15 நாளா மொத்த சென்னையே வெள்ளக்காடா கிடக்குதே, நீங்க மட்டும் எப்படி தினம் ஆபீஸ் போயிடுறீங்க?

ரமணன்: வீட்டுல இருந்து ஆபீஸ் போறவன்தான் மழை தண்ணிக்கு பயப்படுவான். நானெல்லாம் 15 நாளா ஆபீஸ்லயே வாழ்றவன். அதுசரி பகவானே, உங்க ஆபீஸ் டைமிங் எல்லாம் என்ன?வருணன்: நமக்கு வருஷம் பூரா வேலைதான். ஒரு நோம்பு, பண்டிகைகூட கொண்டாட முடியாது. காணியாளம்பட்டில மழை வேணும்னு கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சுக்கிட்டு காத்திருப்பாங்க...

அந்த நேரம் பார்த்து மழை வேணும்னு தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் பண்ணி வச்ச கலிபோர்னியாவுல மழை தர போயிடுவேன். என்ன வேலை? திருப்தி இல்லாத வேலை! மழை தராம விட்டாலும் திட்டுவாங்க, கொடுத்தாலும் திட்டுவாங்க.ரமணன்: உங்க கஷ்டம் புரியுது பகவானே! ஸ்கூல் லீவு கிடைச்ச குழந்தைகளோட அப்பாக்கள் தங்களுக்கு ஆபீஸ் லீவு கிடைக்கலையேன்னு என் மேல கோவப்படுறாங்க.  சரி, கிளம்பப் போறீங்க, இந்த மக்களுக்கு ஏதாவது மெஸேஜ் சொல்லிட்டுப் போகலாமே!

வருணன்:  நான் என்ன சொல்றது? மெட்ராஸோட முகத்தையும் மாநகராட்சியோட முகமூடியையும்தான் மழை கிழிச்சிடுச்சே. ஏரிக்குள்ள கொண்டு போயி வீட்டை கட்டிட்டு, ‘வீட்டுக்குள்ள ஏரித் தண்ணி வந்திடுச்சு’ன்னு புலம்பறவங்களுக்கும் சரி, பூக்கடையாட்டம் இருந்த வீதி முழுக்க இப்ப சாக்கடையா வச்சிருக்கிறவங்களுக்கும் சரி, நான் சொல்றது என்னன்னா, ‘‘மழைத் தண்ணி தேங்க விட்டு புழங்குறவன் மனிதன், ஆனா மழைத் தண்ணிய தேக்கி வச்சு பிழைக்கிறவன் புனிதன்.’’               
ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்