இவர்தான் ரோஜாப்பூ மிஸ்!
‘‘29 வருஷமாச்சு... இத்தனை வருஷம் கழிச்சும், இத்தனை உயரத்தை எட்டிப் பிடிச்சும், மறக்காம இவ்வளவு உருக்கமா எழுதியிருக்கிற முத்துக்குமரனை நினைக்கும்போது ரொம்பவே பெருமையா இருக்கு. மனப்பூர்வமா சொல்லப்போனா, ஒரு ஆசிரியையா நான் நிறைவடைகிறேன்...’’
- கவிஞர் முத்துக்குமார் தன்னைப் பற்றி எழுதிய 30.11.2015 ‘குங்குமம்’ இதழைக் கைகளில் பற்றியபடி கண்கள் உருகப் பேசுகிறார் திலகவதி. முத்துக்குமாரின் ஐந்தாம் வகுப்பு ரோஜாப்பூ மிஸ். தற்போது புதுச்சேரி, காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியை.
‘‘எனக்கு காஞ்சிபுரம்தான் சொந்த ஊர். பி.எட். படிச்ச நேரம்... பயிற்சி மாதிரி இருக்குமேன்னு வீட்டுக்குப் பக்கத்துல இருந்த, தெய்வா இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல டீச்சரா சேந்தேன். அஞ்சாம் வகுப்பு கிளாஸ் மிஸ். முத்துக்குமரன் அந்த வகுப்புலதான் படிச்சுச்சு. சின்ன வயசுல இருந்தே ஆசிரியை ஆகணும்னு கனவு கண்டவ நான். குழந்தைகளை எப்படி அணுகணும், எப்படி உற்சாகப்படுத்தணும்னு நிறைய கற்பனைகள் இருந்துச்சு.
அதையெல்லாம் வகுப்பறையில செஞ்சேன். மற்றபடி பெரிசா ஏதும் செஞ்சிடலே. முத்து அந்த வயசிலேயே நல்லா எழுதும். பள்ளி ஆண்டு விழாவுக்காக நாடகங்கள், பாடல்கள் எல்லாம் கத்துக் கொடுக்கிறதுண்டு. அந்த தருணத்துலதான் முத்துக்குமரன் ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்துச்சு. அந்த வயசுல அப்படியொரு திறமையை நான் எதிர்பார்க்கலே. வகுப்பறையில ஒட்டி வைக்கச் சொன்னேன். அதுக்குப் பிறகு நிறைய நாடகங்கள், பாடல்கள் எல்லாம் எழுதிக் கொண்டு வரும்.
ஒரு வருடம் அந்தப் பள்ளியில வேலை செஞ்சேன். பிறகு பாண்டிச்சேரி வந்துட்டேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி முத்துக்குமரன்கிட்ட இருந்து போன். எங்க சித்தப்பாகிட்ட நம்பர் வாங்கியிருக்கு. சர்வதேசப் புகழ், தேசிய விருதுன்னு உயர்ந்த இடத்துல இருக்கிற பிள்ளையை, ‘வா... போ...’ன்னு கூப்பிடுறதா, ‘வாங்க...
போங்க...’ன்னு கூப்பிடுறதான்னு திணறிட்டேன். அதுக்குப் பிறகு அடிக்கடி பேசுறதுண்டு. பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்து சொல்லிக்குவோம். ஜூலை 12 முத்துக்குமரனுக்கு பிறந்த நாள். சிங்கப்பூர்ல இருக்கிற என் சகோதரி, ‘இங்கே டிவியில சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துட்டிருக்கு. நீ வாழ்த்து சொல்லலயா’ன்னு கேட்டா. உடனடியா போன் பண்ணி வாழ்த்து சொன்னேன். ‘என் தாயே வாழ்த்தினது மாதிரி இருக்கு’ன்னு முத்து சொன்னதும் கலங்கிட்டேன்.
இன்னைக்கு படிப்பை முடிச்சுட்டுப் போற பிள்ளைங்க வெளியில பார்த்தா ‘வணக்கம்’ கூட சொல்ல மாட்டேங்குதுங்க. அந்த அளவுக்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடைவெளி ஆகிடுச்சு. புதுசு புதுசா பல பெரிய மனிதர்களைப் பார்க்கிற இடத்துல இருந்தாலும் ஒரு ஆசிரியையை நினைவு வச்சு, அதுவும் ஒரு தாய் ஸ்தானத்துல வச்சு இத்தனை நெகிழ்ச்சியா எழுதுற பண்பை எந்த வார்த்தையால கொண்டாடுறது?
அந்தக் கட்டுரையோட கடைசி வரிகளைப் படிச்சப்போ என்னையும் அறியாம கதறி அழுதேன். என் அக்கா, தங்கச்சிகளுக்கெல்லாம் பிள்ளைகள் இருக்காங்க. யாருமே சொல்லாத வார்த்தை அது... சீக்கிரமே சென்னைக்குப் போய், மகன், மருமகள், பேரனைப் பார்க்கணும்...’’ - நெகிழ்ந்து சொல்கிறார் திலகவதி.
- வெ.நீலகண்டன் படங்கள்: முபாரக்
|