கிரகங்கள் தரும் யோகங்கள் 15



ரிஷப லக்னத்துக்கு சுக்கிரனும் சந்திரனும் தரும் யோககங்கள்

சுக்கிரனும் சந்திரனும் பொதுவாகவே புவி ஈர்ப்பு சக்திமிக்க கிரகங்களாகும். அதிலும், குறிப்பாக சந்திரனிலிருந்து வெளியாகும் காந்த அலைகள் பூமியிலுள்ள மரம், செடி, கொடிகள் முதல் மனிதர்கள் வரை எல்லா உயிர்களையும் மாற்றிப் போட வல்லது.

குறிப்பாக பௌர்ணமி தினத்தன்று சந்திரனின் முழு ஆற்றலும் வெளிப்படுவதால், அன்றைய தினத்தில் பூ மலர்தல் முதல் கடலின் சீற்றம் வரை எல்லாவற்றிலும் மாற்றம் இருக்கும். மனிதர்களின் மனோநிலையில் உணர்ச்சியின் வேகம் கூடுதலாகவே ஏற்படும்.

பூமியின் மீதுள்ள உயர்திணை, அஃறிணை பொருட்களின் செயல்பாடுகளில்கூட இவை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலை நாட்டு மருத்துவர்கள் பௌர்ணமி தினத்தன்று அதிக நேரம் நீடிக்கும் அறுவை சிகிச்சைகளை நோயாளிகளுக்குச் செய்வதில்லை. ஏனெனில், சந்திரனை தண்ணீருக்குரிய கிரகமாக ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.

எனவே, மனித உடலில் திரவ நிலையிலுள்ள ரத்த ஓட்டம் முழுமதி நாளன்று வழக்கத்தை விட வேறுபட்டிருக்கும். அதனால், அறுவை சிகிச்சையின்போது ரத்தப் பெருக்கை சிரமப்படுத்தி கட்டுப்படுத்த வேண்டியிருப்பதாலும் நோயாளிகளுக்கு ரத்த இழப்பு அதிகரிப்பதாலும் சந்திரனின் ஆதிக்கமிக்க பௌர்ணமி நாளில் சவாலான அறுவை சிகிச்சைகளைச் செய்வதில்லை.

பேரியக்க கிரகமான சுக்கிரனோடு, இப்படிப்பட்ட அதி இயக்க கிரகமான சந்திரன் சேரும்போது முற்றிலும் வித்தியாசமான மாற்றங்கள் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட சேர்க்கையால், ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு உடலிலும், மனதிலும் ஏற்படும் ரசாயன மாற்றங்களையும் அதனால், மனித வர்க்கம் சந்திக்கும் நல்லது மற்றும் அல்லாததையும் பார்ப்போம்.

லக்னத்திலேயே சுக்கிரனோடு சந்திரன் இருந்தால், அவர்கள் கற்பனை மிதப்பிலேயே இருப்பார்கள். மிகுந்த தன்னம்பிக்கையோடு இருப்பார்கள். தன்னை மீறி எதுவும் நடக்காது என்று நினைப்பார்கள். எதுவாக இருந்தாலும் கடைசி நேரத்தில்தான் செய்வார்கள். ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றுவார்கள். டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகமாக இருக்கும். படுக்கை அறையையும், குளியல் அறையையும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். ரிஷபத்தில் சந்திரன் உச்சமாவதால் எல்லாவற்றிலும் ஒரு அதீத கவனத்தோடு இருப்பார்கள். எதற்காகவும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமலும், டென்ஷன் ஆகாமலும் இருப்பார்கள். தன்னை ஆதரிப்பவர்கள், ற்சாகப்படுத்துபவர்களிடம் மட்டுமே உற்சாகமாகப் பேசுவார்கள். வெளிப்பார்வைக்கு எல்லோரிடமும் சகஜமாக பழகுவதுபோலத் தோன்றும். ஆனால், அப்படியெல்லாம் இருக்க மாட்டார்கள். 

மிதுனத்தில் சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், பேசுவதே கவிதைபோல் இருக்கும். சொல்லில் காந்தத்தின் ஈர்ப்பிருக்கும். பேச்சாலும், எழுத்தாலும் காயப்படுத்தாது அணைத்துப் பேசும் ஆறுதல் இருக்கும். இவர்களைச் சுற்றிலும் எப்போதும் பெண்கள் கூட்டம் இருந்தபடி இருக்கும். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுடைய நட்பு கிட்டும். சிலர் சங்குகளைக் கொண்டு செய்த பொருட்களை சேமித்து வைத்திருப்பார்கள். முத்து பதித்த மோதிரத்தை விருப்பத்தோடு அணிவார்கள்.

வசீகரமான கண்களைப் பெற்றிருப்பார்கள். அதிகம் கேள்வி கேட்பவர்களாக இருப்பார்கள். சுகபோகமான வாழ்க்கைக்கு நிறைய செலவு செய்வார்கள். வாசனைத் திரவியங்களில் குளிப்பார்கள். தாய் சொல்லைத் தட்டாதவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சொகுசாகச் செல்லும். இவர்களின் வாழ்க்கைத்துணை கலை, சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். ஆண்களாக இருப்பினும் காதில் கடுக்கண் அணியும் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.

கடக ராசியில் சந்திரன் ஆட்சி பெறுகிறார். மேலும், லக்னாதிபதி சுக்கிரனோடு சேருவதால் மிகுந்த ஆளுமைத் திறனோடு விளங்குவார்கள். வசீகர முகமும், ஜனவசியமும் பெற்றிருப்பார்கள். சாதுர்யமான பேச்சுத்திறன் இருக்கும். முடிவுகளை உடனே எடுக்கும் திறமையோடு இருப்பார்கள். இவர்களின் இளைய சகோதரர்கள் சமூகத்தில் மதிப்பும், மரியாதையோடும் வலம் வருவார்கள். மூன்று என்பது முயற்சி ஸ்தானத்தைக் குறிப்பதால், எடுத்த காரியத்தைத் தொடர்ந்து போராடி முடிக்கும் வல்லமை இருக்கும்.

படர்ந்த செவியிருக்கும். அலை அலையாய் புரளும் கூந்தல் இருக்கும். ஒரு பாரம்பரிய முகத்தோற்றத்தோடு விளங்குவார்கள். அனைத்து தரப்பினரின் நட்பையும் தக்க வைத்துக் கொள்வார்கள். அதிக போகத்தில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகச் சிறப்பான உள்ளுணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள். புகழ்பெற்ற ஆர்க்கிடெக்ட்டுகள் இந்த அமைப்பில் நிறைய பேர் உண்டு.

மாதுர்காரகன் என்றழைக்கப்படும் தாய்க்குரியவனான சந்திரன், ரிஷப லக்னத்திற்கு மாதுர் ஸ்தானமாகிய நான்காம் வீட்டில் - அதாவது சிம்ம ராசியில் அமரும்போது தாயாருக்கு சங்கடங்கள் நேரலாம். இந்த வீடு சந்திரனுக்குப் பகை வீடாக இருப்பதால் தாயார் அதிகம் கோபப்படுபவராக இருப்பார். அவ்வப்போது நோய்வாய்ப்படுபவராகவும் இருப்பார். எனவே, தாயார் குறித்த விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியமாகும். இவர்கள் வாகனப் பிரியர்கள். அடிக்கடி வாகனத்தை மாற்றிக் கொண்டிருப்பவர்களாகவும் இருப்பார்கள். புளிப்பு சேர்ந்த இனிப்பை விரும்பிச் சாப்பிடுவார்கள். நீர்நிலை அருகில் வசிப்பதை மிகவும் விரும்புவார்கள். ஆனால், தனித்து நின்று காரியம் சாதிப்பார்கள்.

கன்னி ராசியில் சந்திரனும், சுக்கிரனும் அமர்ந்தால் அலைபாயும் குணம் இருக்கும். அடிக்கடி தான் எடுத்த முடிவுகளை மாற்றியபடியே இருப்பார்கள். கன்னியில் சுக்கிரன் நீசமானாலும் சந்திரன் முழுத் திறனோடு செயலாற்றும். இவர்களில் சிலர் வெளித் தோற்றத்திற்கு பெரும் பணக்காரர்களைப் போல தென்படுவார்கள். ஆனால், நாம் நினைத்ததற்கு மாறாக அடிப்படை வாழ்விற்கே சிரமப்படுபவர்களாக இருப்பார்கள். சதுரங்க விளையாட்டில் மிகவும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். தாய்மாமன், அத்தை உறவுகள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள்.

பூர்வீகச் சொத்துகளை விரிவுபடுத்துவார்கள். இவர்களுக்கு பெண் குழந்தைகள் அதிகமாகப் பிறக்கும். நல்ல ஆசிரியர்களை வழிகாட்டிகளாக வைத்துக்கொண்டு முன்னேறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் இருந்தாலும், வைராக்கியம் குறைந்து இருக்கும். அதனால், சிற்றின்ப விஷயங்களில் எல்லைகளை வைத்துக்கொள்வது நல்லது. திரைத்துறையில் ஈடுபட்டு கதை, வசனம் என்று அசத்துவார்கள். பட்டு நூல் உற்பத்தி மற்றும் விற்பனையில் நன்கு சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.

ரிஷப லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்து மறைகின்றன. இதனால் டான்ஸில், சிறிய வயதிலேயே சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் வரும். தாயாருக்கு ஏதேனும் உடம்பு படுத்தியபடி இருக்கும். எப்போதுமே நோய்வாய்ப்பட்டவர் போலவே காணப்படுவார். இவர்களின் சுபாவமே எதையும் எதிர்ப்
பதுதான். எப்போதும் வி.ஐ.பி.களை எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். சமூகத்தோடு இயைந்து செல்ல முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். சகோதர வகையில் ஏதேனும் பிரச்னைகள் வந்தபடி இருக்கும்; வரும் வேகத்திலேயே அவை தீர்ந்தும் போகும்.

விருச்சிக ராசியில் நீச சந்திரனோடு சுக்கிரன் சேருகிறது. இந்த அமைப்பு பெண்களைத்தான் பாதிக்கும். கர்ப்பப்பையில் நீர்க்கட்டி ஏற்பட்டு நீங்கும். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் கலைகளில் மிகவும் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள். மிகுந்த ரசனை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் ராசியை சந்திரனும் சுக்கிரனும் பார்த்தபடி இருப்பதால் எப்போதுமே தோற்றப் பொலிவோடு இருப்பார்கள். இவர்கள் வீடு கட்டும்போது பில்டர்களோடு சில பிரச்னைகள் வரும். எனவே, எச்சரிக்கையாக எல்லாவித ஒப்பந்தங்களும் சரியான முறையில் போடப்பட வேண்டும்.

தனுசு ராசிக்குள் சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து அமரும்போது, மூன்றுக்குரிய சந்திரன் எட்டில் சென்று மறைகிறார். இதனால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல் அதிகரிக்கும். அடிக்கடி இவர்கள் பயணப்பட்டபடியே இருப்பார்கள். வேலையே பயணம் செய்வதாக அமையும். இவர்களுக்கு நெஞ்சு சளி பிரச்னை வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிலுமே துணிந்து இறங்க மாட்டார்கள். பல நேரங்களில் தாயார் அல்லது சகோதரியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். பந்தாவாக வளைய வரவே விரும்புவார்கள். வாகனத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஆடம்பரச் செலவுகள் செய்வார்கள். திரைத் துறையில் ஈடுபடுவார்கள். இவர்களில் பெரும்பாலோர் டெக்ஸ்டைல் தொழில் மற்றும் காஸ்ட்யூம் டிசைனராக வரும் வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்வார்கள். நீர் நிலைப்பகுதிகளில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

மகர ராசியில் ஒன்பதாம் இடமாக இவ்விரு கிரகங்களும் அமர்வது என்பது பெரும் யோகமாகும். சந்திரன் தன் வீட்டை தானே பார்க்கிறான். அடிப்படையான வசதி வாய்ப்புகளான சொந்த வீடு, வாகனம் என்றெல்லாம் எளிமையாக அமைந்து விடும். தந்தை வழியில் பெரும்சொத்து வந்து சேரும். ஜவுளி வியாபாரத்தில் பெரும் பொருளீட்டுவார்கள். இவர்கள் ஜீவகாருண்யத்தோடும் மனிதாபிமானத்தோடும் எல்லோருக்கும் உதவுபவர்களாக இருப்பார்கள்.

அடுத்து சனி வீடான கும்பத்தில் இவ்விரு கிரகங்களும் - அதாவது லக்னத்திற்குரியவரும், மூன்றுக்குரியவரும் பத்தாமிடத்தில் அமர்வதால் ஜுவல்லரி, பியூட்டி பார்லர், மினரல் வாட்டர் என்று தொழில் தொடங்கி பிரமாண்டமாக வருவார்கள். நவீன நாடகங்கள் இயற்றும் கலைஞர்களாகவும் மிளிர்வார்கள். இவர்கள் யாரையுமே சார்ந்திராமல் தனித்துவம் மிக்கவர்களாக இருப்பார்கள். சனியினுடைய வீட்டில் இவர்கள் இருப்பதால் சேவை மனப்பான்மை எப்போதுமே இருக்கும்.

மீனத்தில் சுக்கிரனும் சந்திரனும் சேருவது யோகமாகும். தன்னைவிட அழகும், அந்தஸ்தும் மிக்க சகோதரனால் ஆதரவு அதிகரிக்கும். எதிலுமே தெளிவும் திடமும் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் வெள்ளித் தட்டில் உணவு உண்பார்கள். மாபெரும் செல்வந்தர்களுக்கு உரிய வாழ்க்கையை வாழ்வார்கள். அதை நோக்கியே திட்டமிட்டு உழைத்து முன்னேறியும் விடுவார்கள்.

அடுத்ததாக மேஷத்தில் - அதாவது பன்னிரெண்டாம் இடத்தில் சுக்கிரனும் சந்திரனும் இருந்தால் வித்தியாசமான மத சிந்தனைகளை உடையவர்களாக இருப்பார்கள். ஆரம்பத்தில் ஓஷோவை பின்பற்றுபவர்களாகவும் பின்னர் சக்தி பீடங்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு சக்தி உபாசகராகவும் விளங்குவார்கள். பெயர், புகழுக்காக அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள். இவர்களும் ஆடம்பரப் பிரியர்களாகவே இருப்பார்கள்.   

பொதுவாகவே சுக்கிரனும் சந்திரனும் ஒன்று சேரும்போது மாபெரும் எதிர்மறைப் பலன்களைத் தரமாட்டார்கள். இவை இரண்டுமே மன நலன் மற்றும் கலைக்குரிய கிரகங்களாகும். எனவே இவர்கள் ரசனை உணர்வோடும், கலைகளை அவதானித்து கற்றுத் தெளியும் திறனோடும் விளங்குவார்கள். ஆனாலும், சில இடங்களில் மனதை அலைக்கழித்து, அலைச்சலைத் தருவதும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான தீயபலன்களை குறைத்துக் கொள்வதற்கு இருக்கன்குடி மாரியம்மனை தரிசித்து வாருங்கள்.

சுமார் 450 வருடங்களுக்கு முன் சிவயோக ஞானசித்தர் எனும் முனிவர் தவம் செய்து யோக சித்தியடைந்த தலம் இது. தான் அவ்வாறு சித்தியாகும் இடத்தில் மாரியம்மன் கோயில் கொண்டு அருளவேண்டும் என்ற அவரது வேண்டுகோளின்படியே இங்கே அன்னை அருள்கிறாள். வைப்பாறு, அர்ஜுனா ஆறு  என்ற இரு நதிகள் இங்கே கூடுவதால் இத்தலம் இருக்கங்(ன்)குடி என்று போற்றப்படுகிறது.

நீருக்கும் நீர்நிலைக்கும் உரிய கிரகங்களாக சந்திரனும், சுக்கிரனும் இருப்பதால், இந்தத் தலம் இவர்களுக்கு ஏற்றதாகும். இந்த ஆறுகள் கங்கைக்கு ஒப்பானவை என்பார்கள். இத்தல தீர்த்தங்களாகப் போற்றப்படும் இந்த ஆறுகளில் புனித நீராடினால் ராமேஸ்வரம், காசி போன்ற தலங்களில் நீராடிய புண்ணியம் கிட்டும். மதுரை, கோவில்பட்டி, சாத்தூர் போன்ற ஊர்களிலிருந்து இத்தலத்தை எளிதாக அடையலாம். 

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்:
மணியம் செல்வன்