தாமிரபரணி எங்கள் தாய்!



நதியைக் காக்க போராடும் பள்ளி

‘உண்ணலும் உனதே! உயிர்த்தலும் உனதே! 
உடல் மனம் உயிர் எல்லாம் உனதே!
எண்ணலும் உனதே! இச்சையும் உனதே!
என் செயல் பயனெல்லாம் உனதே!
தாமிரபரணியே எங்கள் தாமிரபரணியே...’

- கவிஞர் நெல்லை ெஜயந்தாவின் இந்தப் பாடல் வரிகளை அசெம்பிளியில் உணர்ச்சி பொங்க பாடுகிறார்கள் அந்தப் பள்ளி மாணவ-மாணவிகள்! தாமிரபரணியை உறிஞ்சிப் பிழைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்தியில், அந்த ஜீவநதியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது ‘மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி’! திருநெல்வேலி சாந்தி நகரில் இயங்கும் இந்தப் பள்ளியின் வளாகமே தாமிரபரணியின் ஆதியும் அந்தமும் கொண்ட ஓவியங்களால் நிரம்பிக் கிடக்கிறது. ஓவியம் தவிர்த்து, சிலர் தாமிர பரணி பற்றி உருக்கமாகக் கவிதை வாசிக்கிறார்கள். 

‘‘இன்னைக்கு, தமிழகத்துல ஓடுற ஒரே ஜீவநதி தாமிரபரணிதான் சார்... எங்களுக்கு நீர் ஆதாரமே அதுதான். அதைப் பாதுகாக்கணும்... பாதுகாக்குற வருங்கால இளைஞர்களை உருவாக்கணும். அதுதான் எங்க நோக்கம்!’’ என்றபடி வரவேற்றார் பள்ளியின் தாளாளர் செல்வராஜ். இவர்தான், ‘தாமிரபரணி பாசத்தை’ அனுதினமும் மாணவர்களுக்கு அறிவுறுத்தும் மனிதர்! ‘‘1985ல இந்தப் பள்ளியை ஆரம்பிச்சேன். அப்போதெல்லாம் திருநெல்வேலியில தண்ணீர் பிரச்னையே கிடையாது. ஆனா, கடந்த பத்து வருஷமா குடிநீர் தட்டுப்பாடு அதிகரிச்சுப் போச்சு. நிறைய வீடுகள்ல 400 அடிக்கும் கீழ போர் போட்டும் தண்ணி இல்லங்கிறாங்க. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க... எனக்குள்ள ஏதாவது பண்ணணும்னு ஒரு தாகம்!

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை அரசு நடத்தின சமயம், எங்க மாணவர்களையும் அழைச்சிட்டுப் போய் ஒரு பேரணி நடத்தினோம். அப்புறம் ஒவ்வொரு ஸ்கூலா போய் ஆசிரியர், மாணவர்களுக்கு ‘பவர் பாயின்ட்’ வழியா விழிப்புணர்வு கொடுத்தோம். மழை நீர் பற்றிப் பேசப் பேசத்தான் தாமிரபரணியோட முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்குப் புரிய வைக்கணும்னு தோணிச்சு. காரணம், தென் மாவட்டங்களின் நீர் ஆதாரமே தாமிரபரணிதான். மாணவர்களுக்கு அதைச் சொல்லும்போது அவங்க வழியா பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தாமிரபரணி ரீச்சாகுமே! அதான், பள்ளியோட பிரார்த்தனை பாடலைக் கூட தாமிரபரணி வாழ்த்தா மாத்திட்டோம்’’ என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் செல்வராஜ்.

இவருக்கு உறுதுணையாக மனைவியும் பள்ளியின் முதல்வருமான மார்கரெட்டும் கைகோர்த்து நடக்கிறார். ‘‘அவங்க, மழலையர் கல்வியில பிஹெச்.டி முடிச்சிருக்காங்க. ஆனா, நீரின் முக்கியத்துவம் உணர்ந்த பின்னாடி ‘Post Doctoral Fellowship (PDF) படிப்புல நீர் மேலாண்மையை செலக்ட் பண்ணினாங்க.

அதுக்கு அப்புறம்தான் தாமிரபரணியைப் பாதுகாக்குற எண்ணம் அதிகமாச்சு. ஒரு கட்டத்துல எங்க பள்ளி மாணவ-மாணவிகளை தாமிரபரணி நதிக்கரையோரத்துக்கே கூட்டிட்டுப் போய் கிளாஸ் எடுத்தோம். தாமிரபரணி எப்படிப்பட்ட நதி, அதனால என்னென்ன பயன்கள் இருக்கு, மனிதர்களுக்கு நீர் ஏன் அத்தியாவசியம்னு பல செய்திகளைச் சொன்னோம். இப்போ, அவங்களே அத உணர்ந்து வீட்டுல பேசுறாங்க. சார்ட்ல கவிதை எழுதி ஒட்டுறாங்க. ஓவியம் வரையிறாங்க. பார்க்கவே ஆனந்தமா இருக்கு!’’ - உற்சாகம் பொங்கினார் மார்கரெட்! 

‘‘பி.டி.எஃப் படிப்புக்காக டென்மார்க் போகிற சான்ஸ் கிடைச்சது. அங்குள்ள நதிகள், ஏரிகள்னு எல்லாத்தையும் பார்த்தேன். நீர்நிலைகளை அவங்க ரொம்ப அழகா பராமரிக்கிறது வியப்பா இருந்துச்சு. ரொம்ப அருமையா பாதுகாக்குறாங்க. ஆற்றுப் படுகைகள் சுத்தமா இருக்குது. அங்குள்ள நீர்வழி போக்குவரத்து பத்தி பேசிட்டே இருக்கலாம். காரணம், மக்கள் எல்லோருமே ‘இது என்னோட நதி’னு நினைக்கிறதும், அதைப் பயன்பாட்டுல வச்சிருக்கிறதும்தான்.

அதை சுத்தமா வச்சிருக்கறதுல அவங்களுக்கு பெருமிதம் இருக்கு. சொந்த வீட்டை சுத்தமா வச்சிருக்கறது மாதிரி, நதிகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை சுத்தமா வச்சுக்கறதும் தங்களோட கடமைன்னு நினைக்கறாங்க. ஆனா, நாம நதிகளை மாசுபடுத்திட்டு வர்றோம். எல்லா கழிவுகளையும் ஆறுகள், ஏரிகள், குளங்களில்தான் கொட்டறோம். இது பற்றிய குற்ற உணர்வு முதல்ல ஏற்படணும்!’’ என்றவரிடம், பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தாமிரபரணியைத் தாரை வார்த்த சங்கதி பற்றியும் கேட்டோம்...

‘‘நீங்க சொல்றது சரிதான். ஆனா, இது அரசோட முடிவு. இதப் பத்தி கருத்து சொல்ல முடியாது. நான் டென்மார்க்ல ஒரு பள்ளி தலைமையாசிரியரைச் சந்திச்சேன். அவர்கிட்ட நம்மூர் கோக கோலா ஆலை பத்தி பேசிக்கிட்டு இருந்தப்போ, ‘என்னோட மாணவன்தான் கோக் ஆலையின் சி.இ.ஓ. நீங்க சொல்ற கோரிக்கையை அவனிடம் வைத்து ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்குறேன்’னு சொன்னார்.

 ‘அவங்க தண்ணீர் எடுக்கறதை நிறுத்த முடியாதுன்னாலும், மோசமா இருக்குற ஏரிகள், குளங்களைத் தூர்வாரிக் கொடுக்கலாம். அப்புறம், நீர் நிலைகள் உயர வழிகள் செய்து தரலாம்’னு சொல்லிட்டு வந்திருக்கேன். நல்லது நடக்குமானு தெரியலை. ஆனா, நான் மக்கள்கிட்ட தாமிரபரணி நதி பத்தியும் நீர் மேலாண்மை பத்தியும் தொடர்ந்து பேசப் போறேன்!’’ என வார்த்தைகளில் உறுதி காட்டினார் செல்வராஜ்.

‘‘இப்போ, மாணவர்களுக்கு தாமிரபரணி தொடர்பான போட்டிகள் நடத்தப் போறோம். அப்புறம், ‘தாய் தாமிரபரணி’ பத்தி ஒரு கண்காட்சிக்கும் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம். தாமிரபரணியைப் பாதுகாக்க எங்களால என்ன முடியுமோ அந்த விஷயங்களை நிச்சயம் பண்ணுவோம்!’’ - நம்பிக்கையோடு முடித்தார்கள் செல்வராஜும் மார்கரெட்டும்! சொந்த வீட்டை சுத்தமா வச்சிருக்கறது  மாதிரி, நதிகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை சுத்தமா வச்சுக்கறதும் தங்களோட  கடமைன்னு டென்மார்க்ல நினைக்கறாங்க. ஆனா, நாம நதிகளை மாசுபடுத்திட்டு வர்றோம்.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: பரமகுமார்