கருப்பட்டி கடலை மிட்டாய் விற்கும் எஞ்சினியர்!
‘‘சுக்கும் ஏலக்காயும் மணக்க, அரை மணி நேரத்துக்கு அப்படியே நாக்குல நிக்கும் கடலை மிட்டாய் சுவை. மேலே தேங்காய்ப்பூ போட்டு அலங்கரிச்சு பாட்டில்ல அழகா அடுக்கி வச்சிருப்பாங்க. சுத்தமும் சுவையுமா வந்த அந்த மாதிரி கடலை மிட்டாயை இன்னைக்கு பாக்கவே முடியலே.
குடும்பம் குடும்பமா சேந்து குடிசைத் தொழிலா பண்ணிக்கிட்டிருந்த கடலை மிட்டாய் தயாரிப்பு இன்னைக்கு பெரிய நிறுவனங்கள் கையில போயிடுச்சு. ரசாயனங்களையும் விலைமலிவான இனிப்புகளையும் கொட்டி தன்மையையே மாத்திட்டாங்க. நான் சாப்பிட்ட கடலை மிட்டாயோட சுவை இன்னைக்கு என் அண்ணன் பிள்ளைக்குக் கிடைக்கலே. அந்த ஆதங்கத்துலதான் கருப்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்புல இறங்குனேன்...’’
- உணர்வுபூர்வமாகப் பேசும் ஸ்டாலின், பி.இ. முடித்துவிட்டு பெரிய நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றியவர். இப்போது கருப்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர். இவரது ‘தாய்வழி கருப்பட்டி கடலை மிட்டாய்’க்கு தமிழகத்தில் ஏக ரசிகர்கள். ஆர்டர்கள் குவிகின்றன. சுக்கு, ஏலக்காய் மணம் வீச, கருப்பட்டியின் இயற்கைத் தித்திப்பு அனுபவத்தை இன்றைய குழந்தைகளுக்கு வாரி வழங்குகிறது இவரது தயாரிப்பு.
ஸ்டாலினுக்கு சொந்த ஊர், விருதுநகர் பக்கமுள்ள காரியாபட்டி. அப்பா வேலுச்சாமி அஞ்சல் துறையில் கிளார்க். அம்மா சாந்தி, இல்லத்தரசி. 2 சகோதரர்கள். ‘‘மூத்த அண்ணன் துணிக்கடை வச்சிருக்கார். ரெண்டாவது அண்ணன் வினோத், போட்டோகிராபர். படிப்பையும் வீட்டையுமே உலகமா நினைச்சிருந்த எனக்கு பரந்துபட்ட வெளியை அறிமுகப்படுத்தினவர் வினோத் அண்ணன்தான். ‘குக்கூ குழந்தைகள் வெளி’ன்னு ஒரு அமைப்பு... அந்த அமைப்பு நடத்துற முகாம்களுக்கு என்னை அழைச்சிட்டுப் போவார் அண்ணன். எனக்குள்ள புதைஞ்சு கிடந்த கனவுகளை வெளிக்கொண்டு வந்தவை, அந்த முகாம்கள்தான்.
கூட்டுப்புழு மாதிரி நான் வளர்ந்தேன். எந்நேரமும் படிப்பு... படிப்பு. பிளஸ் 2வில நல்ல மதிப்பெண். எஞ்சினியரிங் சேத்துவிட்டாங்க. ஆனா, அது என்னோட இயல்புக்குப் பொருந்திய படிப்பா இல்லே. ஒரு வழியா முடிச்சு வெளியே வந்தேன். எந்த நேர்காணலுக்குப் போனாலும் ஐந்நூறு பேர் நின்னாங்க. கூடுதலா சில விஷயங்களைப் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்னு சொன்னாங்க. ஏற்கனவே மூன்றரை லட்ச ரூபாய் செலவாச்சு. மேலும் 35 ஆயிரம் ரூபாய் கட்டி சில கோர்ஸ்கள் முடிச்சேன். ஒரு வழியா வேலை கிடைச்சுச்சு. நல்ல வேலை... கைநிறைய சம்பளம்... அஞ்சு வருஷம் நல்லாவே போச்சு.
‘குக்கூ’ அமைப்போட அறிமுகம் தான் என் வாழ்க்கையை மாத்துச்சு. சிவராஜ் அண்ணன், லோகேஸ்வரி அக்கான்னு தன்னைப் பத்தி சிந்திக்காம எல்லா நேரமும் மத்தவங்களைப் பத்தியே சிந்திக்கிற அவங்களை எல்லாம் பார்த்தபிறகு நான் வாழ்ந்துக்கிட்டிருக்கிற வாழ்க்கை பத்தி நிறைய கேள்விகள் எழும்புச்சு. மனசுக்குள்ள பெரிய குற்ற உணர்வு. அடிக்கடி ‘குக்கூ’ நிகழ்வுகளுக்குப் போகத் தொடங்கினேன். குழந்தைகளுக்கான நூலகம் அமைக்கிற வேலையையும், நர்சரிகள் உருவாக்குற வேலையையும் பிரதானமா செஞ்சுச்சு அந்த அமைப்பு. அப்போ ஊத்துக்குளியில ஒரு நூலகம் அமைக்கிற வேலை நடந்துச்சு. அதுல தீவிரமா என்னை இணைச்சுக்கிட்டேன்.
அடுத்து, ஜவ்வாது மலைப்பகுதியில குழந்தைகளுக்கான காட்டுப்பள்ளி ஒண்ணு உருவாக்கினோம். நான் ரொம்பவே அதுல ஐக்கியமாகிட்டேன். பார்த்த வேலையை ராஜினாமா செய்தேன். குழந்தைகளோட வேலை செய்யறது ரொம்ப குதூகலமான அனுபவமா இருந்துச்சு. ஆனா, வீட்டுல ரொம்பவே பயந்துட்டாங்க. ‘லட்சக்கணக்குல செலவு பண்ணி எஞ்சினியரிங் முடிச்சுட்டு இப்படி காட்டுக்குள்ள சுத்துறியே’ன்னு வருத்தப்பட்டாங்க. எனக்கு வேறுவிதமான கவலை. எல்லாருக்கும் ஒரு அடையாளம் இருக்கு... ஆனா எனக்குன்னு எந்த அடையாளமும் இல்லை. அதைத் தேடிக்கிட்டே இருந்தேன்.
காட்டுப்பள்ளிக்கு வர்ற நண்பர்கள், ‘குழந்தைகளுக்கு என்ன வாங்கிட்டு வரணும்’னு கேப்பாங்க. எல்லோருக்கும் கடலை மிட்டாய் பிடிக்கும். அதை வாங்கிட்டு வரச் சொல்வேன். ஆனா, அந்தக் கடலை மிட்டாய்களை பிள்ளைகள் சாப்பிடவே மாட்டாங்க. வடிவமும், வண்ணமுமே ஈர்க்கிற மாதிரி இல்லை. கடலை மிட்டாயை குடிசைத்தொழிலா தயாரிச்ச காலங்கள்ல ஒரு அக்கறை இருக்கும். கட் பண்ணும்போது உதிர்கிற மிச்சங்களை தங்களோட பிள்ளைகளுக்குக் கொடுப்பாங்க. சந்தேகமேயில்லாத தரமா இருக்கும். அப்போ குழந்தைகள் சாப்பிடுற தின்பண்டமா இருந்த கடலை மிட்டாய், இப்போ வணிகப் பொருளா மாறிடுச்சு. அதனால தரத்தை விட லாபத்துக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கிட்டாங்க.
இதுபத்தி ஒரு கட்டுரை எழுத விரும்புனேன். அதற்காக கடலை மிட்டாய் தயாரிக்கிற நிறுவனங்களைத் தேடிப் போனேன். ஆனா, ஒரு கம்பெனி யில கூட கேட்டைத் தாண்டி உள்ளே விடலே. பாரம்பரிய குடிசைத்தொழில் தயாரிப்பாளர்களைப் போய் பாத்தேன். எல்லாருமே ஆதங்கமாவும், கோபமாவும் பேசினாங்க. அவங்க பேச்சுல வாழ்வாதாரம் அழிஞ்ச கோபம் இருந்துச்சு.
சில தயாரிப்பாளர்கள் என்கிட்டே மனம் திறந்து பேசினாங்க. இனிப்புக்காக ஸ்வீட் மாஸ்டர், மொறுமொறுப்புக்காக லிக்விட் குளுக்கோஸ், வாசனைக்காக வெனிலா பவுடர், பளபளப்புக்காக ஒரு பவுடர்னு ஏகப்பட்ட ரசாயனங்கள் சேர்க்கிறதா சொன்னாங்க. அதிர்ந்து போயிட்டேன். பெரும்பாலானவங்க வெல்லம் பயன்படுத்துறதில்லை. ‘சீனிவெல்லம்’னு ஒரு ரசாயனம் வருது. அதைத்தான் பயன்படுத்துறாங்க. ‘எங்க பகுதியில கருப்பட்டி கடலை மிட்டாய் கிடைக்குமே... அதெல்லாம் இப்போ செய்யிறதில்லையா’ன்னு கேட்டேன். ‘அட போப்பா... அதெல்லாம் 30 வருஷம் முன்னாடியே முடிஞ்சு போச்சு’ன்னு சொன்னாங்க.
வருத்தமும் ஏமாற்றமுமா திரும்பினபோது மனசுல யோசனை உதிச்சுது! ‘நாமளே கடலை மிட்டாய் தயாரிக்கணும். அதுவும் கருப்பட்டி கடலை மிட்டாய்...’ அதுக்கான முயற்சியில இறங்கினேன். கூடலிங்கம் அய்யா மாதிரி அக்கறையுள்ள சில முன்னோடிகள், குக்கூ நண்பர்கள் உதவி செய்தாங்க. கருப்பட்டியில கலப்படம்... கடலையில கலப்படம்... எங்கே போனாலும் எது வாங்கினாலும் கலப்படம். நல்ல பொருளைத் தேடித் தேடி வாங்குனேன். நிறைய சோதனை முயற்சிகளுக்குப் பிறகு பக்குவம் கைவந்துச்சு. பெரு முதலாளிகளோட போட்டி போட்டு கடைகள்ல விற்க முடியாது. அதனால ஃபேஸ்புக்ல ‘கருப்பட்டி கடலை மிட்டாய்’ன்னு ஒரு பக்கம் ஆரம்பிச்சேன். ஏகப்பட்ட வரவேற்பு. ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுச்சு. ஜே.சி.குமரப்பா நினைவு இல்லத்துல அறிமுக நிகழ்வை நடத்தினேன்.
சுத்தமான கருப்பட்டி, கடலை, சுக்கு, ஏலக்காய் பொடி... அவ்வளவுதான். மற்ற கடலை மிட்டாய்களை விட பல மடங்கு சுவையா இருக்கு. ஏகப்பட்ட ஆர்டர்கள்... உற்பத்தி போதுமானதா இல்லை. அதிகப்படுத்தணும். பள்ளி கள்ல இருந்து நிறைய ஆர்டர் வருது. ஃபேஸ்புக்லயும் நிறைய பேர் வந்து கேட்கிறாங்க.
என் எதிர்காலத்தை நினைச்சு கவலைப்பட்ட குடும்பத்துக்கு இப்போதான் நம்பிக்கை வந்திருக்கு. வீட்டுலதான் தயாரிப்பெல்லாம் நடக்குது. அம்மா பாகு காய்ச்சினா, அப்பா மிட்டாயை கட் பண்ணி பேக் பண்ணுவார். சந்தோஷமா இருக்கு. வழக்கொழிஞ்சு போன மற்ற தின்பண்டங்களையும் மீட்டு பாரம்பரிய முறையில கொண்டு வரணும். அதுக்கான முயற்சியும் போய்க்கிட்டிருக்கு...’’ என்கிறார் ஸ்டாலின்.
ஸ்டாலின் மாதிரி ஆக்கபூர்வமான இளைஞர்களுக்காகவும், இதுபோன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளுக்காகவும்தான் நாடு காத்துக் கிடக்கிறது. கடலை மிட்டாய்ல பெரும்பாலானவங்க வெல்லம் பயன்படுத்திறதில்லை. ‘சீனிவெல்லம்’னு ஒரு ரசாயனம் வருது. அதைத்தான் இனிப்புச் சுவைக்கு பயன்படுத்துறாங்க.
- வெ.நீலகண்டன் படங்கள்: ஆர்.சந்திரசேகர்
|