கண்ணியம்



‘‘மகேஷ்,  நான் கண்ணன் பேசறேன்டா... என்னால இன்னிக்கு சினிமாவுக்கு வர முடியாது.  திடீர்னு அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. அவரோட சலூன் கடைய நான்தான் திறந்து கஸ்டமர்களை கவனிக்கணும். 

இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைங்கறதால கூட்டம் அதிகமா இருக்கும்! ஸாரிடா மச்சான்’’ என்றான் கண்ணன்.‘‘என்னடா சொல்றே? எம்.பி.ஏ படிச்சிருக்கிற நீ, சலூன் கடையில போய் வேலை செஞ்சா மத்தவங்க கேவலமா பார்க்க மாட்டாங்களா?’’ - மகேஷ் ஏளனமான தொனியில் கேட்டான்.

‘‘இதுல  என்னடா கேவலம்? கடன் வாங்கி ஊதாரித்தனமா செலவு பண்றதும், கை நீட்டி பிச்சை  எடுக்கிறதும்தான் கேவலமானது. அந்த சலூன் கடைதான் என்னை எம்.பி.ஏ பட்டதாரி  ஆக்கியிருக்கு. சரி மச்சான்... நீ சினிமாவுக்குப் போயிட்டு வா. நாம நாளைக்குப் பார்க்கலாம்!’’ - கண்ணன் போனை கட் பண்ணியதும் கண நேரம் கண் மூடி யோசித்தான் மகேஷ்.

‘‘அம்மா!  நம்ம காயலாங்கடை சாவியைக் கொடுங்க. அப்பா ஊரிலிருந்து வர்ற வரை நான் கடையைப் பார்த்துக்கறேன்!’’ என்றான் சத்தமாக.
‘நான் எம்.பி.ஏ படிச்சவன். காயலாங்கடைக்கெல்லாம் போகமாட்டேன்’ என நேற்று வரை இழிவாகப் பேசிய மகனா இது என வியப்போடு பார்த்தாள் மகேஷின் அம்மா!  

ஜெய தமிழண்ணா