திமிர்
ஸ்ட்ரிக்ட் ஆபீசர் என ஒரே வாரத்தில் பெயர் வாங்கியிருந்த புது மேனேஜர் சாந்தினி உள்ளே நுழைந்ததும், சட்டென ஸ்டெனோ ஆனந்தனும் சக ஊழியர்களும் அவளைப் பின்தொடர்ந்து சென்றனர்.‘‘விஷ் யூ ஹேப்பி பர்த்டே மேடம்!’’ என்று பரிசுப் பொருளை ஆனந்தன் நீட்ட, சட்டென எரிமலையாய் ெவடித்தாள் சாந்தினி.
‘‘என்ன முட்டாள்தனம் இது? யாரைக் கேட்டு இதையெல்லாம் வாங்கினீங்க? பிறந்த நாள் பரிசு, வாழ்த்தெல்லாம் யாருக்கு வேணும்? போய் வேலையைப் பாருங்க!’’ என்று அதிர்ந்து கூறினாள்.
மாலையில்...‘திமிர் பிடித்தவள்’, ‘அன்பை மதிக்கத் தெரியாதவள்’ எனப் பலரும் பலவிதமாய் மனதுக்குள் சாந்தினியை திட்டியபடி இருக்க, திடீரென அனைவரையும் அட்டெண்டர் மூலமாக அழைத்தாள். குழப்பமாக எல்லோரும் உள்ளே சென்றனர். சாந்தினியின் கண்கள் சிவந்திருந்தன.
‘‘காலையில் நடந்த சம்பவத்துக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். எனக்குத் திருமணமாகி மூணு வருஷம் ஆச்சு. திடீர்னு கணவர் விபத்தில் இறந்துட்டார். என் பிறந்த நாளும், என் கணவரின் இறந்த நாளும் ஒரே நாள். அப்படி இருக்கும்போது, நான் எனக்காக சந்தோஷப்படுறதா... இல்ல, என் கணவருக்காக துக்கப்படுறதானு புரியலை. அந்த வேதனையாலும் வெறுப்பாலும்தான் உங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்!’’ என்று அனைவரையும் நோக்கி கரம் குவிக்க, இப்போது ஊழியர்கள் அனைவரின் கண்களிலும் நீர்.
வெ.தமிழழகன்
|