நினைவோ ஒரு பறவை 5
தோழியின் கணவன் எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்? - எழுத்தாளர் மெளனி
ரயிலை ரசிக்காதவர்கள் உண்டா? ரயில் பயணங்கள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவை. ரயில் ஒரு யானைக் கூட்டமாக இருக்கிறது; நெளியும் பாம்பாக இருக்கிறது; கனைக்கும் குதிரையாக இருக்கிறது; இப்போதுதான் பிறந்து மெல்லச் சிணுங்கும் குழந்தையாக இருக்கிறது;
அழகான பெண்கள் ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரி இருப்பது போல, ரயிலும் ஒவ்வொரு பார்வைக்கும் ஒவ்வொரு வடிவம் கொள்கிறது. சிவபெருமானுக்கு அடுத்ததாக நெற்றிக்கண்ணுடன் அலைவது ரயில் வண்டிகள் மட்டுமே. ரயில் வண்டி, நகர்ந்து செல்லும் ‘ஆயிரம் ஜன்னல் வீடு’.
ஒரு தாயைப் போல ரயில் நம்மை மடியில் அமர வைத்துத் தாலாட்டுகிறது. எதிரொலி போல், நாம் மனதுக்குள் எந்தப் பெயரை நினைக்கிறோமோ அதே பெயரைத் தன் நெடிய நாக்கால் உச்சரித்து நம் தோழனாகிறது.எல்லா ரயில் நிலையங்களுக்கும் ஒரே விதமான தோற்றம் தருவது சிமென்ட் பெஞ்சுகளே. எலும்பைப் போல் காரை பெயர்ந்து கம்பிகள் வெளித் தெரிய, சிமென்ட் பெஞ்சுகள் ரயில் நிலையங்களின் சூழலை ரம்மியமாக்குகின்றன. பூவரச மரங்களிலிருந்து உதிரும் பூக்களுக்கு இடம் கொடுத்தபடி, கொய்யாப்பழ வியாபாரிகளின் கூடை வாசனைக்காகவும், எப்போதாவது வந்தமரும் பயணிகளின் புளியோதரை பொட்டல வாசனைக்காகவும், அவை காக்கைகளுடன் காத்திருக்கின்றன.
ரயில் நிலைய பிச்சைக்காரர்கள், வழிப்போக்கர்கள், சந்நியாசிகள், பவுடரில் குளித்த பாலியல் தொழிலாளர்கள், இருட்டை எதிர்நோக்கும் பெருந்திணைக் காதலர்கள் என சிமென்ட் பெஞ்சுகளின் உலகம் நேரத்திற்கேற்ற மாதிரி வடிவம் மாறும். சிமென்ட் பெஞ்சுகளின் பார்வையில், ரயில் என்பது வெவ்வேறு ஆட்களின் ஒற்றைக்குரல். பின்னோக்கி ஓடும் காட்சிப் படிமங்கள் வழியாக ரயிலின் ஜன்னல்கள் நம்மைக் கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. ரயிலின் ஜன்னல் கம்பிகளில் உறைந்து போயிருக்கும் கண்ணீர்த் துளிகளில் பிரிவின் வலி பொதிந்திருக்கும். முட்டைக்குள்ளிலிருந்து கண் விழித்து வெளிவரும் குஞ்சுகள் ஈரப் பிசுபிசுப்போடு வருவதைப் போல, அதிகாலையில் விழித்து அடுத்த நிலையத்தில் இறங்குபவரை தன் கருவறையின் இரும்பு வாசனையோடு வழியனுப்புகிறது ரயில்.
சில வாரங்களுக்கு முன்பு ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். எப்போதும் பொது வெளிகளில் பயணிக்கையில் நான் சாயல்களின் வெளிச்சத்தில் வழி தப்பிய வண்ணத்துப் பூச்சியாகி விடுவேன். ஒரு சிலர் முதல் பார்வையிலேயே என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஒரு மென் புன்னகை, சிறு கைகுலுக்கல். என் பாடல் அல்லது படைப்புகள் குறித்து உரையாடிக் கலைவார்கள்... இது முதல் வகை.
இரண்டாவது வகை அடையாளக் குழப்பங்கள் நிறைந்தது. செல்போனைக் கையில் எடுத்து, என்னை முறைத்தபடியே, ‘‘டேய், சார்றா... ரயில்ல எனக்கு எதிர்லதான் உக்காந்துருக்காரு’’ என்றதும் எதிர்முனையிலிருந்து ‘‘யார்றா?’’ என்று ஸ்பீக்கர் குரல் ஒலிக்கும். ‘‘அதான்டா! ‘பொல்லாதவன்’ படத்துல வில்லனா நடிச்சாரே! ஆங்... கிஷோருடா’’ என்று சொன்னவுடன் நான் ‘பொல்லாதவன்’ கிஷோராகி ைகயிலிருக்கும் புத்தகத்துக்குள் மூழ்கி விடுவேன்.
இப்படித்தான் ஹைதராபாத்தில் ஒரு நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அங்கிருந்த லோக்கல் ஒயின் ஷாப்பில் குழுமியிருந்தோம். என் கையிலிருந்த கண்ணாடிக் குவளையின் நுரைகளை விலக்கி முதல் மிடறு பீரை நான் தொண்டைக்குள் நனைத்தபோது எதிரில் நின்ற கடைப் பையன் கேட்டான். ‘‘சார்... நீங்க வெற்றிமாறன்தானே சார்? நான் உங்க ஃபேன் சார்.
‘ஆடுகள’த்துக்குப் பிறகு அடுத்த படம் ஏன் சார் ரிலீஸே ஆகல? புதுக்கோட்டதான் என் சொந்த ஊரு’’ என்றதும் நான், ‘‘பேசிக்கிட்டு இருக்கோம் தம்பி. சீக்கிரம் அனவுன்ஸ் பண்ணுவேன்’’ என்றேன். ‘‘சார்... உங்க ஆட்டோகிராஃப் போட்டுக் குடுங்க சார்’’ என்று ஒரு துண்டுக் காகிதத்தை நீட்ட... ‘அன்புடன், வெற்றிமாறன்’ என்று கம்பீரமாகக் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.
வெற்றிமாறனும் நானும் எங்கள் ஆசான் பாலுமகேந்திராவிடம் ஒன்றாகப் பாடம் கற்றவர்கள். கையெழுத்திட்டவுடன் வெற்றியை செல்போனில் அழைத்து, ‘‘வெற்றி... இப்பதான் ஆந்திராவுல உன் பேரை ரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்’’ என்று நடந்ததை விவரித்ததும், எதிர்முனையில் வெற்றி வெடித்துச் சிரிக்கும் ஒலி கேட்டது.
எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பாடல் பதிவுக்காக மும்பையில் தங்கியிருந்த போது, அந்த ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் கேட்டாள்... ‘‘நீங்க பார்த்தா இந்தி நடிகர் ‘நானா படேகர்’ மாதிரி இருக்கீங்க. ஏன் நீங்க இந்தி சினிமாவுல நடிக்க முயற்சிக்கக் கூடாது?’’ நான் அமைதியாகச் சொன்னேன்... ‘‘அம்மணி! எனக்குத் தொழில் உர வியாபாரம். சினிமா நமக்கு சரிப்படாது.’’ ‘‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது சார். சினிமாவுலதான் கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க!’’ நான் மீண்டும் புன்னகையுடன், ‘‘என் தட்டுல இன்னிக்கு விழுற சாப்பாடே எனக்குப் போதும்’’ என்றேன்.
நல்லவேளையாக பாண்டியன் எக்ஸ்பிரஸில் எந்த இடையூறுகளும் இல்லை. நான்கு பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய ஃபர்ஸ்ட் கிளாஸ் கூபேயில் எதிரில் அமர்ந்திருந்த இரண்டு பேரும் வண்டி புறப்பட்டதுமே மேல் பர்த்துகளில் உறங்கப் போய் விட்டார்கள். தாம்பரத்தில் மிலிட்டரி மீசையுடன் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் ஒருவர் ஏறி என் எதிரில் அமர்ந்தார். மேலும் கீழும் பார்வையால் அவர் என்னை அளந்தபோது, சி.பி.ஐ. ஆபீசரோ என்று சந்தேகம் எழுந்தது. பத்தாம் வகுப்பில் என் அப்பாவின் பர்ஸிலிருந்து ஐம்பது ரூபாய் திருடியதைத் தவிர வாழ்க்கையில் இதுவரை நான் எந்தத் தவறும் செய்ததில்லை. ‘அதற்காக காலம் கடந்து இப்படி ஒரு பார்வை தண்டனையா?’ என்று மனசு அடித்துக் கொண்டது.
‘‘நீங்க நா.முத்துக்குமார்தானே?’’ என்று அவர் கை நீட்டியபோது நான் பயத்தின் பிடியிலிருந்து வெளியே வந்து, ‘‘ஆமாம்’’ என்றேன். ‘‘உங்களத்தான் இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருந்தேன்’’ என்று அவர் சொன்னதும், மீண்டும் பழைய பயம் ஆயிரம் பாம்புகளாய் என் அடிவயிற்றில் படம் விரித்தாடியது. ‘‘சார், என் பேரு கோவிந்தராஜன். ரயில்வேயிலதான் வேலை செய்றேன். என் ஒய்ஃப் அடிக்கடி உங்களப் பத்தி சொல்லுவா. அவளும் நீங்களும் ஆறாவதுல இருந்து பிளஸ் 2 வரைக்கும் ஒண்ணாப் படிச்சீங்களாமே?’’ என்று அவர் சொன்னதும் நான், ‘‘ஓ... அப்படிங்களா?’’ என்றேன்.
‘‘ஆமா சார்! டெய்லி வீட்ல உங்களப் பத்திதான் பேச்சு. அவளும் நீங்களும்தான் கவிதைப் போட்டியில கலந்துக்குவீங்களாமே? அவதான் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குவாளாம். என்னிக்கும் நீங்க அவள ஜெயிச்சதே இல்லையாம். எங்க மாமனார் இறந்ததும் பிளஸ் 2வோட படிப்ப நிறுத்திட்டா. இல்லன்னா உங்கள மாதிரி உலகம் முழுக்க ஃபேமஸ் ஆயிருப்பா’’ என்ற அவர் குரலில், ஒரு கவிதாயினி காணாமல் போனதற்கான நிஜ தொனி ஒலித்தது. நான் சில நிமிடங்கள் யோசித்து, என்ன சொல்வதென்று தெரியாமல் ‘‘ஸாரி சார்’’ என்றேன்.
‘‘அதெல்லாம் விடுங்க சார். உங்க மேல அவளுக்கு எவ்வளவு அன்பு தெரியுமா? டென்த் படிக்கும்போது அவ ஜாமெட்ரி பாக்ஸ்ல இருந்து நெல்லிக்காயையும் நாவல் பழத்தையும் நீங்க திருடி சாப்பிட்டீங்கன்னு உங்க கையில காம்பஸால குத்திட்டாளாமே? டி.வி.யில நீங்க வரும்போதெல்லாம் உங்க கையில இருக்க தழும்பை என்கிட்ட காட்டி ‘நான்தான் தெரியாம அந்தத் தப்பை செஞ்ச பாவி’ன்னு சொல்லி அழுவா சார்!’’
இப்ேபாது எனக்கும் அழுகை வருவது போல் இருந்தது. எங்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் ஈச்சம்பாயை விரித்து அதில் நெல்லிக்காய், நாவல்பழம், எப்போது எடுத்தாலும் கடைசியாய் கசப்புடன் பல்லில்படும் சொத்தை வேர்க்கடலை, புளிப்பேறிய மாங்காய் துண்டுகள், புழுக்கள் எட்டிப் பார்க்கும் இலந்தைப் பழங்கள் என கடை பரப்பி விற்கும் வெண்கூந்தல் விரித்த பாட்டியும், அவளெதிரே நின்று கூவிக் கூவி சேமியா ஐஸ் விற்கும் காசி அண்ணனும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
‘‘சார், உங்க ஒய்ஃப் பேர் என்ன சார்?’’ என்றேன் பரவசத்துடன். ‘‘காயத்ரி சார். கே.எஸ்.காயத்ரி. இன்னுமா உங்களுக்கு ஞாபகம் வரல?’’ என்று அவர் கேட்டதும், என் கண்ணெதிரே கண்ணாடி போட்ட காயத்ரி, சிலுவை போட்ட காயத்ரி, தெற்றுப்பல் காயத்ரி என எல்லா காயத்ரிகளும் வந்து போனார்கள்.‘‘சார்... திருச்சில நான் இறங்கிடுவேன். எப்ப திருச்சி பக்கம் வந்தாலும் எங்க வீட்டுக்கு நீங்க அவசியம் வரணும். என் ஒய்ஃப் உங்களப் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவா. இதான் என்னோட விசிட்டிங் கார்ட்’’ என்று கையில் கொடுத்துவிட்டு அவர் உறங்கிப் போனார்.
அதிகாலையில் திருச்சி ஸ்டேஷனில் ரயில் நின்று என்னிடமிருந்து விடைபெற்று பிளாட்பாரத்திலிருந்து அவரது உருவம் மறைந்த கடைசி கணம் வரை நான் அவரிடம் சொல்லவே இல்லை... ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை நான் படித்தது ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்னுடன் எந்தப் பெண்ணும் படிக்கவே இல்லை என்பதை!
ரயில் ஒரு யானைக் கூட்டமாக இருக்கிறது; நெளியும் பாம்பாக இருக்கிறது; கனைக்கும் குதிரையாக இருக்கிறது; இப்போதுதான் பிறந்து மெல்லச் சிணுங்கும் குழந்தையாக இருக்கிறது!
‘‘காயத்ரி சார். கே.எஸ்.காயத்ரி. இன்னுமா உங்களுக்கு ஞாபகம் வரல?’’ என்று அவர் கேட்டதும், என் கண்ணெதிரே கண்ணாடி போட்ட காயத்ரி, சிலுவை போட்ட காயத்ரி, தெற்றுப்பல் காயத்ரி என எல்லா காயத்ரிகளும் வந்து போனார்கள்.
கடந்த வாரம் நா.முத்துக்குமார் எழுதிய ‘ரோஜாப்பூ மிஸ்’ படித்துவிட்டு நூற்றுக்கணக்கான வாசகர்கள் கடிதங்களிலும் தொலைபேசியிலும் தங்கள் உணர்வுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்கள். தங்கள் பால்யத்தின் ஆசிரியைகள் பற்றிய நினைவுகளை நா.முத்துக்குமாரின் எழுத்துகள் கிளறிவிட்டதாகக் கூறிய பலரும் கேட்டது, ‘திலகவதி மிஸ் இதைப் படித்துவிட்டு என்ன சொன்னார்?’அது, 122ம் பக்கத்தில்!
(பறக்கலாம்...)
நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்
|