காசு கொடுங்க...காதலைப் பிரிக்கிறோம்!
விநோத ரஸ மஞ்சரி
இன்ட்ரஸ்டிங் இணையதளம்
‘அவள் வருவாளா’ என்ற ஏக்கம் பழசு. ‘இவள் என்னை விட்டுப் போக மாட்டாளா’ என்ற ஏக்கம்தான் புதுசு. இதை அறிந்துதான் துவங்கியிருக்கிறார்கள் www.breakupshop.com எனும் இணையதளத்தை.
காதலர்களைப் பிரித்து விடுவதற்கென்றே தனித்துவம் பெற்ற ஆன்லைன் கடை இது!கத்தியின்றி ரத்தமின்றி பழைய காதலன் / காதலியை கட் பண்ணிவிட்டு, ஆல் நியூ அத்தியாயத்துக்கு நகர வேண்டுமா? உங்களுக்கென ஒரு கேட்டலாக்கே வைத்திருக்கிறது இந்தத் தளம். பத்து டாலர் - அதாவது, 662 ரூபாய் செலுத்தினால் போதும்... உங்கள் சார்பாக உங்கள் பார்ட்னருக்கு ஒரு பிரேக் அப் செய்தியை இந்தத் தளமே அனுப்பும்.
‘அழகு ராஜா ரொம்ப நல்லவரு... பெண்டு எடுக்குறதுல வல்லவரு... ஆனா, பாருங்க. உங்க காதலை விட உங்க ஃப்ரெண்ட்ஷிப்பைத்தான் அவர் அதிகமா விரும்புறார்’ என்ற ரீதியில் அந்தச் செய்தி வலிக்காமல் ஊசி ஏற்றும். இதுவே 2000 ரூபாய் கொடுத்தால், ஒரு பிரேக்கப் நிபுணரே போனில் பேசுவார். கோபத்தில் உங்களவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் கூட பொறுமையாக பதில் சொல்லி, பிரச்னை இல்லாமல் பிரித்து வைப்பார்.
இது தவிர, பிரேக் அப் கடிதம், பிரேக் அப் பொக்கே, பிரேக் அப் பரிசுப் பொருட்கள் என காதல் கட்டிங் அயிட்டங்கள் இந்தத் தளம் முழுக்க குவிந்திருக்கின்றன, விற்பனைக்கு!கனடாவைச் சேர்ந்த மெக்கன்ஸி என்ற இளைஞர் தன் காதலியிடமிருந்து லவ் டைவர்ஸ் பெற முயன்றிருக்கிறார். வாக்குவாதம், அடிதடி, கண்ணீர், காயம் என இந்தச் சின்ன விஷயத்துக்கு ஒரு சென்டிமென்ட் படமே ஓடியதில் கடுப்பாகிவிட்டார்.
‘சே, காதலை சேர்த்து வைக்க மட்டும் வேலை மெனக்கெட்டு வேலன்டைன் சர்வீஸ்கள் ஆயிரம் வைத்திருக்கிறார்கள். செட்டாகாத காதலை வெட்டி விட ஒரு நாதியில்லையா?’ என வெகுண்டவர், தன் தம்பி இவானுடன் இணைந்து இந்த இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். பிரிச்சு மேயுங்க பாய்ஸ்!
- ரெமோ
|