ஐந்தும் மூன்றும் ஒன்பது
மர்மத் தொடர் 47
‘‘ஜோசப்போடு அந்த மலைத்தலத்தில் நடந்தபடி இருந்தேன். எங்கள் பேச்சும் தொடர்ந்தது. அந்த நாயும் எங்களுக்கு முன்னும் பின்னுமாக நடந்தபடியே இருந்தது. சமதளத்தில் மட்டுமே நடந்து பழகியிருந்த எனக்கு, அந்த மலையின் முண்டும் முடிச்சுமான சாலையில் நடப்பது மிகவே சிரமமாக இருந்தது.
இன்றுள்ள மனிதர்கள்தான் நடப்பதே இல்லையே!நம் வரையில் கால்கள் என்பதே வீட்டினுள் நடமாடித் திரிய மட்டும்தானே? நான் சிரமப்பட்டு நடப்பதைக் கண்ட ஜோசப் என்னிடம், ‘கணபதி சுப்ரமணியன், உங்களால் இந்த மலையில் தொடர்ந்து நடக்க முடியுமா?’ என்று கேட்டார். கேள்வியிலேயே ஒரு அவநம்பிக்கை!‘இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியிருக்கும்?’ என்று கேட்டேன்.
‘யாருக்குத் தெரியும்? அது நாம் சந்திக்க விரும்பும் சித்தர் கையில் உள்ள விஷயம்’ என்றார்.‘அவர் எங்கே இருப்பார்?’‘தெரியாதே...’‘என்றால், இலக்கில்லாத நடையா இந்த நடை?’‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படியேதான். ஆனால் உண்மையில் இதுவே இலக்குள்ள நடை.
ஆளைத் தெரியாது, பேரும் தெரியாது, இடம் தெரியாது, இப்படி எதுவுமே தெரியாது. ஆனால் இந்த தெரியாதுதான் நமக்குள் மிகப் பெரியது! அந்தப் பெரியதை நோக்கித்தான் இந்த நடை... இங்கே அந்தப் பெரியதைப் பார்த்து வரும் நம்பிக்கைதான் நமது ஒரே பலம்!’
‘ஜோசப்! நீங்கள் பேசுவதைப் பார்த்தால் உங்களையே ஒரு சித்தர் போல் எண்ணத் தோன்றுகிறது...’‘அப்படி எல்லாம் அவசரப்பட்டு என்னை சித்தராக்கி விடாதீர்கள். என்னால் பசி தாங்க முடியாது. தாகம் எடுக்கும்போது அதை அடக்கும் வலிமையும் கிடையாது. மசாலா வாசனையை நுகர நேரிடும்போது நாவில் எச்சில் ஊறுகிறது. இந்த வயதிலும் அழகான நிர்வாணப் படங்களைப் பார்க்க நேரிடுகையில் மனம் சலனப்படுகிறது. உடல் சார்ந்த ஒரு ஒடுக்கம் வரவேயில்லை.
ஆனால் மனதளவில் நான் மிகவே மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறேன். எதையும் நுட்பமாகப் பார்க்க இப்போது என்னால் முடிகிறது. சிக்கலான விஷயங்கள் புரியாவிட்டாலும், எப்படிச் சிந்தித்தால் அது புரிய வரும் என்று என்னால் யோசிக்க முடிகிறது.’‘என்றால், உங்களை அரைச்சித்தர் எனலாமா?’‘சித்தர்களில் அரை, கால், அரைக்கால் பதங்கள் எல்லாம் கிடையாது கணபதி சுப்ரமணியன். ஒருவன் சித்தனாகிவிட்டால் அவன் உடம்பு, மனது இரண்டையும் வெற்றி கொண்டவனாகவே இருப்பான். ஒரு சித்தனால் காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ முடியும். விஷத்தையே குடிக்க நேர்ந்தாலும், உடம்புக்குள் அது பரவுவதைக் கட்டுப்படுத்தி அதன் விஷத்தன்மையையே முறிக்கவும் முடியும். அவன் விரும்பினால் பறக்க முடியும். மிதக்க முடியும், கனக்க முடியும். இப்படி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்!’ ‘விஞ்ஞானபூர்வம் இதிலெல்லாம் உள்ளதா?’
‘மெய்யான எல்லாவற்றுக்குள்ளும் விஞ்ஞான சம்பந்தம் எப்போதும் உண்டு கணபதி! விஞ்ஞான சம்பந்தம் இல்லாதது பொய் மட்டுமே!’’‘என்றால், இந்த சித்த சக்திகளைக் கொண்டவர் ஒருவரைக்கூட நாம் பார்க்க இல்லையே... ஏன்?’‘நாம் பார்க்க அவர்கள் இல்லைதான்! ஆனால் அவர்கள் பார்க்க நாம் இருக்கவே செய்கிறோம்...’‘இது என்ன பதில் ஜோசப்..?’‘இதுதான் பதில்...’ - என்ற ஜோசப் சுற்றி ஒரு பார்வை பார்த்தார். கருநொச்சி, கணையெருமை, உதிரவேங்கை, செங்கடுக்காய், ரோமவிருட்சம் என்று பலவித அபூர்வ மரங்கள் கண்ணில் பட்டன. காற்றும் குளிரக் குளிர வீசியது.
‘இங்கே நம்மையும் அறியாமல் நாம் இழுத்து மூச்சு விடுவோம். எனவே நுரையீரல் விரிந்து கொடுத்து, ரத்தத்தில் ஆக்சிஜன் நிறையவே கலக்கும். தினமும் இதுபோல இந்த மலையில் நடக்க முடிந்தால் உலகிலேயே மிக ஆரோக்கியமான மனிதனாக நம்மால் வாழ முடியும்’ என்று ஒரு விளக்கம் கொடுத்தார்.எங்களுக்கு முன்னால் ஓடியபடி இருந்த நாய், அப்போது திடீரென்று பக்கவாட்டில் புதர் ஒன்றுக்குள் புகுந்து மறைந்து போனது.
இங்கே தேங்கிய ேஜாசப் சந்திரன், துணிந்து தானும் அந்தப் புதருக்குள் புகுந்தார். நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். பார்வைக்கு எதுவும் புலனாகவில்லை. எங்கும் ஒரே புதர்தான். நல்லவேளையாக நாய் குரைத்து, தான் முன்னே இருப்பதை உணர்த்தியது. சப்தம் வந்த திசை நோக்கி காலைத் தூக்கி வைத்து நடந்தோம். நடக்க நடக்க, அருவி ஒன்று கொட்டும் சப்தம் கேட்கத் தொடங்கியது!’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...
புதரின் சலசலப்பு ஈங்கோயை பரபரக்கச் செய்தது. தீப்பந்த வெளிச்சத்தில் அவ்வளவாய் பார்க்க முடியவில்லை. பாறை மேல் அமர்ந்திருந்தவன் எழுந்தான். ‘‘யாரது?’’ என்று ஓங்கிக் குரல் ெகாடுத்தான்.‘‘நான்தான்யா...’’ - என்றபடியே புதருக்குள் இருந்து வெளிப்பட்டாள் ஒரு பெண். அவள் இடுப்பில் ஒரு கூடையும் அதில் அவன் சாப்பிட கூழ் கலயத்தோடு குடுவை ஒன்றில் தண்ணீரும் இருந்தது.
அவள், அவனுடைய மனைவி பழஞ்சி.‘‘பழஞ்சீ..!’’ ‘‘நானேதான்... கீழ சாமிய பாத்துட்டுதான் வரேன். ‘இங்கே எங்க வந்தே’ன்னு ஆரம்பிச்சுடாதே...’’ ‘‘கூடைல என்னா... கூழா?’’
‘‘ஆமா... குடுவைல காச்சத் தண்ணி இருக்கு... ஆமா சாப்பிடுதியா?’’ ‘‘பசி இல்லையே. சாமி பசிக்காம இருக்க தழைய கொடுத்துருக்காரே... ’’ ‘‘பரவால்ல, சாப்பிடு!’’
‘‘சாப்ட்டா தூக்கம் வந்துடும். கண்ணு முழிக்க முடியாது...’’ ‘‘ஆமா... யார் வந்துடுவாங்கன்னு இங்க இப்படி காவல் காக்கறே?’’ ‘‘அதெல்லாம் எனக்கு என்ன தெரியும்? சாமி சொல்லிச்சு. வந்துட்டேன்.’’ ‘‘அப்ப யாராச்சும் வரப்போறாங்கன்னு அர்த்தமா?’’
‘‘பொறவு... மனசுக்குள்ள சாகை தட்டியிருக்கும். அதுமட்டுமா? சாயா வாகினிங்கற பட்சி வேற வந்துடிச்சி. நான்தான் பாத்துட்டு சொன்னேன்...’’ ‘‘அந்த பட்சி வந்தா என்ன?’’
‘‘அது வந்தாலே பெரிய மழை வரும். அழிவும் வரும். கூடவே லட்சக்கணக்கான பேர் சாகற மாதிரி வியாதியும் வரும். இத்தனை காலமா மனுஷக் கூட்டம் எவ்வளவு முன்னேறி இருக்கோ, அவ்வளவுக்கும் பின்னால போயிடும். குறிப்பா யாரெல்லாம் உசுரோட இருந்தா இந்த உலகம் பெருசா அழிவை சந்திக்குமோ அவங்க எல்லாம் செத்துப்போவாங்க...’’
‘‘இதை எல்லாம் உனக்கு யாருய்யா சொன்னா?’’‘‘சாமிதான். அவர்கிட்ட கேட்டேன். அவர்தான் இதையெல்லாம் சொன்னாரு.’’ - ஊதல் காற்று முகத்தில் அறைந்திட, தீப்பந்த வெளிச்சத்தின் கீழ் அப்படியே அமர்ந்த நிலையில் பழஞ்சியிடம் ஈங்கோய் பேசிக்கொண்டிருந்தான். அந்த நாயும் அவனருகில் வந்து படுத்துக்கொள்ள, பழஞ்சி அதன் கால் கட்டைப் பார்த்தாள். அவள் பார்க்கவும் அவனே சொன்னான். ‘‘மலையரவு இதை விழுங்கப் பார்த்துச்சு. இதுக்கு ஆயுசு கெட்டி. சாமி பாத்து அரவுகிட்ட இருந்து காப்பாத்திட்டாரு. ஆனாலும் காலை விழுங்கினதுல எலும்பெல்லாம் காயம்...’’
- அவன் கூற, பழஞ்சி நாயை நெருங்கி தடவிக் கொடுத்தாள். அதில் ‘நானிருக்கேன்’ என்னும் பரிவு. அப்படியே பேசினாள்.‘‘ஆமா... இங்க பட்டணத்தவங்க யாரும் வரக்கூடாதுன்னு சாமி ஏன் சொல்றாரு?’’‘‘அதுவா... வாரவுக சும்மா இருக்க மாட்டாங்க. போட்டோ படம் புடிப்பாங்க. அதை ஊர்ல போய் காட்டுவாங்க. அதைப் பாக்கறவங்க இங்க வர ஆசைப்படுவாங்க. அப்படியே ஒண்ணு, ரெண்டுன்னு ஆரம்பிச்சு, அது ஒரு கூட்டமாயிட்டா..?’’ ‘‘ஆனா என்ன? இந்த மலை தேஞ்சா போயிடும்?’’
‘‘இப்படி கேட்டால்லாம் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. நீ சாமிகிட்டயே கேட்டுக்க...’’‘‘சரி, நீ கூழைக் குடி! நான் சுனைல தண்ணி கெடந்தா முகம் கழுவிக்கிட்டு வரேன். மேல கூடையோட ஏறுனதுல ஒரே வேர்வை...’’அவள் எழுந்து, பழக்கப்பட்டவள் போல குறிப்பிட்ட திசைப்பக்கம் செல்ல... அவன் தடுத்தான். ‘‘ராத்திரி நேரத்துல சுனை பக்கம் போகாதே... வழுக்கி விழுந்தா காயப்படும்...’’
‘‘ஒண்ணும் ஆவாதுய்யா...’’ - அவள் பேசிக் கொண்டே சென்றாள். கோரைப் புதர்கள் காலை உரச தாண்டி நடந்தாள். இருளில் மாவு சலித்தது போல துளி வெளிச்சம். அது போதுமானதாக இருந்தது. அதன் பிறகு தட்டையான பாறைப்பகுதி... அதில் நடப்பது சிரமமாக இல்லை. அந்த தட்டைப் பாறையின் மையத்தில்தான் நீர் தேங்கி சுனை இருந்தது. சுனை நீரில் வானத்து நட்சத்திரங்கள் ஜொலித்தன. அவள் ரசித்தபடியே அந்த சுனை நீரின் விளிம்பருகே சென்று நீரைத் தொட்டாள். சில்லிப்பு அவள் காது மடல்களை விறைக்கச் செய்தது. அதில் முகம் கழுவிக் கொண்டு நிமிர்ந்தவள் எதிரில் திகைப்பூட்டும் ஒரு காட்சி...
புலிக்குட்டி ஒன்றைத் தோளில் சுமந்துகொண்டு, கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஒரு சித்தர் சென்றுகொண்டிருந்தார். பழஞ்சி, அவர் எங்கே போகிறார் என்று பார்த்தாள். அவர் மலைப்பாறைகள் ஊடாக நடந்து செல்ல, அவளையும் ஆர்வம் தொற்றியது. எழுந்தவள், அரவமில்லாமல் அவரைப் பின் தொடர்ந்தாள்.
அவர் சிறிது தூரத்தில் குகை போல் ஒரு பகுதிக்குள் நுழையவும், வெளிச்சம் மறைந்து போனது. பழஞ்சிக்கும் கண்ணைக் கரித்தது. தடுமாறிக்கொண்டு அந்த குகை வாசல் வரை சென்றவள், உள்ளே எட்டிப் பார்த்தாள். மிக நீண்ட ஒரு குகைப் பகுதி... உள்ளே பாறை இடுக்குகளில் தீப்பந்தங்கள் செருகப்பட்டு எரிந்தபடி இருக்க, ஒரு தாய்ப்புலி குகையின் தரையில் படுத்திருக்க, குட்டிகள் சில அதைச் சுற்றி... சித்தர் அப்பால் ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டிருந்தார்.
புலிக் கூட்டத்தோடு சித்தரைப் பார்த்தவள் சற்று வெலவெலத்துப் போனாள். உள்ளே குகைச்சுவற்றில் நிறைய கல்வெட்டு எழுத்துக்கள்... உருவக் குறியீடுகள். பாய்மரக் கப்பல் போல் ஒரு படம், விமானம் பறப்பது போல ஒரு படம், கார் வாகனம் போல ஒரு படம், ஹீப்ரு முறையில் எண்களின் வரிசை, கோபுரச் சரிவு போல சரிந்து ஒரு எண்ணில் முடிந்திருக்கும் எண் வரிசை என்று அந்த குகைச்சுவர் முழுக்க அவள் கண்களில் என்னென்னவோ பட்டது.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. உள்ளே செல்ல தைரியம் வரவில்லை. எதுவும் பேசாமல் திரும்பத் தொடங்கி ஈங்கோயிடம் வந்து சேர்ந்தாள். ‘‘ஏ புள்ள... எங்க போயிட்ட? உனக்கு என்னவோ, ஏதோன்னு பயந்துட்டேன்.’’‘‘நான் என்ன பாப்பாவாய்யா... அச்சப்பட!’’ ‘‘சுனைல முகம் கழுவவா இம்புட்டு நேரம்?’’ - அவன் கேட்க அவளும் தான் பார்த்த காட்சிகளைச் சொல்ல ஆரம்பித்தாள். முடிவாக அவன், ‘‘புலிச்சித்தர் பின்னால போயி அவர் இருப்பிடத்தையே நெருங்கிட்டியா நீ?’’ - என்று கேட்டான். ‘‘அவர்தான் புலி சாமியா?’’
‘‘ஆமாம்... நீ ஏன் புள்ள அங்க போனே?’’‘‘சாமிங்கல்லாம் எங்க எப்படி இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கதான். அதுலயும் புலிக்குட்டியோட போகவும் எனக்கு திக்குன்னுச்சு!’’‘‘அவங்க நம்பள மாதிரி கிடையாது. இந்தக் காட்டுல பறக்கற காக்கா, குருவி கூட அவங்கள மட்டும் அன்னியமா நினைக்காது. அவங்ககிட்ட பாசம் காட்டும்.’’‘‘அவங்ககிட்ட அப்படி என்ன இருக்குது?’’
‘‘ஏதோ இருக்குது... இல்லாட்டி நீ, நானுல்லாம் நந்தி சாமி சொல்றபடி நடப்போமா?’’‘‘உண்மைதான்...’’‘‘உள்ளார ஒரு தாய்ப்புலி குட்டி போட்டுருக்குது. சாமி அது கூடதான் இருக்காரு. புலிச்சாமி அபூர்வமாதான் வெளிய வருவாரு. நல்லவேளை, அவர் உன்னைப் பாக்கல...’’ ‘‘பாத்துருந்தா?’’‘‘என்னத்த சொல்ல... கொஞ்ச நாள் முந்தி ஒரு பட்டணத்துக்காரர் இங்க நந்திசாமி கூட இருந்தார், ஞாபகமிருக்குதா?’’ ‘‘அவருக்கென்ன?’’
‘‘என்னவா? அவர் உன்ன மாதிரி சாமிய பாத்துட்டு அவர் பின்னாடியேதான் போனாரு. திரும்பி அவர் வரும்போது பேச்சு மூச்சே இல்லை. ‘புலி சாமி ஊதி அனுப்பிட்டாரு’ன்னு நந்தி சாமி சொன்னாரு.’’‘‘ஊதி அனுப்பறதுன்னா?’’‘‘சாமிகிட்ட ஒரு பொடி இருக்கு. அதைக் கைல கசக்கி முகத்துக்கு நேரா ஊதினா மயக்கம் வரும். கண்ணு முழிச்சா பழசு எதுவுமே நினைப்புக்கு வராது... அவரும் பொம்ம மாதிரிதானே திரும்பிப் போனாரு?’’ ‘‘ஆத்தாடி... புலி சாமி அப்படியெல்லாமும் நடந்துக்குவாரா?’’
‘‘அவர் மட்டுமா? மயில் விசிறிச்சாமி, தண்டக்கோல் சாமி, முண்டகட்ட சாமின்னு இங்க நிறைய சாமிங்க. இவங்க ஒரு மனுஷனை என்ன வேணா செய்வாங்க. பறக்க வைப்பாங்க படுத்தே கிடக்கும்படி செஞ்சுடுவாங்க. நம்ப கூட்டத்துல சிரிச்சிக்கிட்டே இருப்பானே உளியன்...’’ ‘‘ஆமா...’’
‘‘உளியன இளியனா ஆக்குனதுல்லாமும் சாமிங்கதான்!’’ ‘‘ஏன் அப்படி?’’ ‘‘கேட்டா நம்ப நந்தி சாமி ‘அவன் கணக்கு அப்படி’ம்பார்...’’ ‘‘கணக்கா?’’ ‘‘கணக்கேதான்...’’
‘‘புரியலையே..?’’ ‘‘நமக்கெல்லாம் புரியாது. புரிஞ்சா நான் ஏன் இங்க காவல் காக்கணும். நீ ஏன் தலைய பிச்சுக்கணும். புரிஞ்சா நாமளும் சாமியாயிடுவோம்.’’ ‘‘யோவ்... எனக்கு பயமா இருக்குய்யா...’’‘‘போடி போ... பொச கெட்டவளே! நம்ப சோலிய நாம பாத்துகிட்டிருந்தா நமக்கு ஒரு குறையுமில்ல புள்ள. மலையரவு வாயுல சிக்கின இந்த நாயையே காப்பாத்துன நம்ப சாமி... நம்பளதான் விட்றுவாரா?’’ - பேச்சோடு பேச்சாக எழுந்து பாறை மேல் நின்று நாலாபுறமும் பார்த்துவிட்டு கீழ் இறங்கினான்.
‘‘ஆமா... விடிய விடிய இங்கதான் இருக்கப் போறியா?’’‘‘ஆமா... யாரோ வரப் போறாங்க, அதான் சாமி கவனிக்கச் சொல்லியிருக்காரு’’ என்றவனுக்கு கூழைக் கலக்கிக் கொடுக்கத் தொடங்கினாள் பழஞ்சி. அவனும் உற்சாகமாகக் குடித்தான். அப்படியே நாய்க்கும் கலயத்து மூடியில் கூழை ஊற்ற, அதுவும் நக்கிக் குடித்தது. அப்போது பத்து பதினைந்து மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள மில் ஒன்றின் எட்டு மணிச்சங்கு ஒலிச் சப்தம் மிகத் தேய்ந்து வந்து காதில் ஒலித்தது! எட்டு மணி.
திருச்சி காவிரி ஆற்றுப்பாலத்தின் மேல் வர்ஷனின் கார் விரைந்தபடி இருக்க, அவன் நண்பன் ரஞ்சித்திடம் இருந்து அழைப்பு. காரின் டச் ஸ்க்ரீனில் உள்ள ப்ளுடூத்தை ஆன் செய்யவும், காருக்குள் அவன் பேச்சை ஸ்பீக்கர்கள் அவ்வளவும் எதிரொலிக்கத் தொடங்கின.‘‘வர்ஷன், எங்க இருக்கே?’’‘‘அட் ப்ரசன்ட், திருச்சி காவிரி பாலம் மேல மூவிங்ல’’‘‘எக்ஸலன்ட்! நான் இப்பதான் திருச்சி ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்து டாக்சி பிடிச்சேன். கரெக்டா பிளான் பண்ணா நீயும் நானும் இன்னும் பத்து நிமிஷத்துல மீட் பண்ணிக்க முடியும்!’’
‘‘முடியும் இல்ல. முடியணும். நீ என்கிட்ட இருக்கற செல்போனை வாங்கி உள்ள பூந்து வெளிய வர்றே!’’ ‘‘ரைட்... நீ யார்கிட்டேயாவது வழி கேட்டு ஏர்போர்ட்ட நோக்கி வா... நான் காவிரி பாலத்த டார்கெட் பண்ணி வர்றேன். உன் கார் நம்பரைச் சொல்... என் கார் நம்பரை நோட் பண்ணிக்கோ.’’
ரஞ்சித் கூற, வர்ஷனும் கூறிட, அடுத்த ஒன்பதாவது நிமிடமே சாலையில் நேருக்கு நேர் ஒரு புள்ளியில் இருவரும் ஓரமாய் காரை கிரீச்சிட்டு நிறுத்தி இறங்கினர். பக்கமாய் ஒரு தூங்குமூஞ்சி மரம். காத்திருந்தது போல் அதன் கிளையில் வந்து அமர்ந்தது அந்த சாயா வாகினி என்கிற பட்சி!
‘‘மயக்கம் தெளிஞ்சி கண்விழிச்சுப் பார்க்கும்போது உங்களுக்கு ஆபரேஷன் முடிஞ்சிருக்கும்...’’ ‘‘ஒருவேளை மயக்கம் தெளியலைன்னா..?’’‘‘வேறென்ன... போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சிருக்கும்!’’
‘‘நான் சுமத்திய குற்றச்சாட்டுகளால் ஆளுங்கட்சிக்கு ஆயிரம் வாட்ஸ் ஷாக் அடிக்கப் போவது உறுதின்னு மேடையில பேசினீங்களா தலைவரே..?’’ ‘‘ஆமா... அதுக்கென்ன?’’‘‘அதுக்கு கரன்ட் பில் கட்டச் சொல்லிக் கேட்டு ஈ.பி.யில இருந்து வந்திருக்காங்க தலைவரே!’’
‘‘எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் உங்க மேல இருக்கிற கேஸ்களோட லிஸ்ட் வேணுமா? ஏன் தலைவரே..?’’ ‘‘சுயசரிதை எழுதலாம்னு இருக்கேன்யா..!’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.
- தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்
|