இயற்கை விவசாயி கிஷோர்!



STAR ஹாபி

‘பொல்லாதவன்’ படத்தில் ஆரம்பித்து, ‘தூங்காவனம்’ வரை கிடைத்த கேரக்டரில் பெரிதாய் ஸ்கோர் செய்பவர் கிஷோர். நடிப்பிற்கு இடையே பிறந்த மண் கர்நாடகாவில் இயற்கை விவசாயத்தை ஒரு ஹாபியாக, இல்லை... இல்லை... ஒரு தவமாக செய்துவருகிறார் மனிதர். மலேசியாவில் ‘கபாலி’யை முடித்துவிட்டு, பெங்களூரு திரும்பிய கிஷோரிடம் விவசாயம் பற்றிப் பேச ஆரம்பித்தால், நான் ஸ்டாப் சந்தோஷம் பொங்குகிறது. 

‘‘காலேஜ்ல படிச்சு முடிச்ச சமயத்துலயே எனக்கு இயற்கை விவசாயத்தின் மேல தனி ஆர்வம். இன்னிக்கு நாம சாப்பிடுற சாப்பாடு, சுவாசிக்கற காத்து, குடிக்கிற தண்ணி எல்லாத்திலும் ரசாயனக் கலப்படம் இருக்கு. ‘காய்கறியில பூச்சி இருந்தாதான் நல்லது. அது இயற்கை முறையில பயிரிடப்பட்ட காய்கறி’னு படிச்சவங்க கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.

காய்கறியில இருக்கும் பூச்சியை நாம ரசாயனம் தெளிச்சி கொன்னுட்டா, அந்தப் பூச்சியைத் தின்னு வாழும் இன்னொரு பூச்சியை நாம பட்டினி போடுறோமே? இப்படி இயற்கைக்கு எதிரா நாம செயல்படும்போதுதான் இயற்கை நமக்கு எதிரா திரும்புது. இயற்கையோடு இணைந்து வாழணும். அதான் இங்கே இப்போ ரொம்ப அவசியத் தேவை.

என்னைச் சுத்தி இருக்கறவங்களாவது இனிமே ரசாயனம் கலக்காத உணவுகள், காய்கறி, பழங்கள் சாப்பிடணும்னு நான் விரும்பினேன். அழகான மலையடிவாரம்... சலசலக்கும் அருவி... அடர்ந்த காடு... அதன் அருகே பசுமை போர்த்திய வயல்வெளினு ரம்மியமான ஒரு இடத்தில் நிலம் வாங்கி விவசாயம் பண்ணணும்ங்கறது என்னோட பெருங்கனவு.

படிச்சு முடிச்சதும், கன்னடப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இடையில விவசாய ஆசை அதிகமாகிடுச்சு. வங்கியில போய் ‘நிலம் வாங்க விரும்புறேன்’னு லோன் கேட்டேன். ‘விவசாயத்துக்கு நிலம் வாங்க லோன் தர முடியாது. வீடு கட்டுறதுக்குத்தான் லோன் கொடுப்போம்’னு சொல்லிட்டாங்க. சரின்னு வாங்கினேன். அந்த சமயம் பார்த்து, நான் நினைச்ச மாதிரியே இந்த இடம் கிடைச்சது.

பெங்களூருவில் இருந்து 30 கி.மீ தூரத்தில் பன்னர்ஹட்டா உயிரியல் பூங்கா பக்கத்துல இருந்தது அந்த இடம். அழகான மலையடிவாரத்துல மொத்தம் 8 ஏக்கர். ஒரு நொடி கூட யோசிக்காம வாங்கிட்டேன். இங்கே நிலத்தடி பாசனம்தான். 150 அடியில தண்ணீர் இருக்கு. முதல்ல கம்பு, தினை, ராகி, சாமைனு சிறு தானியங்கள் பயிரிட ஆரம்பிச்சேன். இப்போ 3 ஏக்கரை தனியா ஒதுக்கி காய்கறி, பழங்கள் பயிரிடறேன். அடிக்கடி நான் வெளியூர், வெளிநாடுனு ஷூட்டிங் போய்டுறதால, என்னோட மனைவிதான் விவசாயத்தை கவனிக்கிறாங்க. அவங்களுக்கும் இதுல ஆர்வம் அதிகம்.

செயற்கையான ருசிகளுக்கு நாக்கு அடிமையாகிட்டதால, நம்ம மக்களில் பலருக்கு இயற்கையின் மகத்துவம் புரியறதில்லை. ஒரு தடவை எங்க தோட்டத்துல பப்பாளிப் பழம் வாங்கினவங்க, ‘இந்த பப்பாளி டேஸ்ட்டே இல்ல’னு சொன்னாங்க. பணம் கொடுத்துட்டா, அவங்க விரும்பின டேஸ்ட்ல பப்பாளியை விளைவிச்சிக் கொடுக்கறதுக்கு இயற்கை என்ன கிச்சனா? மண் தர்ற உணவு என்ன ருசியோ அதை சாப்பிடுவதுதானே இயற்கையோடு இணைந்த வாழ்க்கை? ‘காலையில துளசிச் செடியை சுத்தி வரணும்...

அரச மரத்தை சுத்தினா நல்லது’னு நம் முன்னோர்கள் சொல்லியிருக்கறது எல்லாம் அதுல இயற்கையான ஆக்‌சிஜன் கிடைக்கிறதாலதானே!
நவீன கருவிகளை வச்சி இப்படித்தான் விவசாயம் பண்ணணும்னு இப்ப சொல்றாங்க. ஆனா, நம்ம பூமியே விவசாய பூமிதான். காலம் காலமா அதை நாம வெற்றிகரமா பண்ணிட்டு வர்றோம்.

இப்ப பத்து பதினைஞ்சு வருஷமா ஆராய்ச்சி பண்ணினவங்க ‘இப்படித்தான் விவசாயம் பண்ணணும்’னு நம்மகிட்ட சொல்றதை ஏத்துக்க முடியலை. எல்லாமே ஈஸியா இருக்கணும்னு நினைக்கிற யாரும் உடல் ஆரோக்கியம் பத்தி கவலைப்படுறதில்லை. நான் ஸ்டிக்ல சமைக்கிறது நல்லதில்லைன்னு சொன்னா யாரும் கவனத்தில் எடுத்துக்கறதில்ல. குழந்தைகளுக்குக் கூட புதுப்புது நோய்கள் இதுனாலதான் வருது.

முருங்கை மரம், கறிவேப்பிலை, வாழை மரம்னு எல்லாத்தையும் அந்தக் காலங்கள்ல நம்ம வீட்டு கொல்லைப்புறங்கள்ல பார்க்க முடியும். பூசணிக்கொடி, கத்தரிச் செடின்னு நம்ம வீட்டிற்குத் தேவையான அளவு காய்கறிகளை கொல்லைப்புறத்தில் இருந்தே எடுத்துட்டு இருந்தோம். நோய் நொடியில்லாம வாழ்ந்தோம். இப்ப விவசாய நிலங்களை எல்லாம் அழிச்சிட்டு வீடுகளும், கடைகளுமா கட்டுறோம்...

நம்ம எதிர்கால சந்ததிக்கு நாம பணத்தை மட்டும் சம்பாதிச்சுக் கொடுத்தா போதுமா? அவங்க சத்தான, ஆரோக்கியமான சாப்பாட்டுக்கு எங்கே போவாங்க? எல்லார்கிட்டேயும் பணம் இருக்கும். ஆனா, நல்ல சாப்பாடு கிடைக்குமா? எதிர்கால சந்ததிக்கு நல்ல மண்ணையும், நல்ல காத்தையும், நல்ல தண்ணீரையும் சம்பாதிச்சு வச்சுட்டுப் போகவேண்டிய கடமை நமக்கு இருக்கு.

அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் குடுக்கணும்னா, இந்த தலைமுறையில அதை எல்லாம் பாதுகாத்தால்தான் முடியும்!’’ - வில்லத்தனம் இல்லாத அக்கறையோடு வந்து விழுகின்றன கிஷோரின் வார்த்தைகள். விவசாய நிலங்களை எல்லாம் அழிச்சிட்டு  வீடுகளும், கடைகளுமா கட்டுறோம்... நம்ம எதிர்கால சந்ததிக்கு நாம பணத்தை  மட்டும் சம்பாதிச்சுக் கொடுத்தா போதுமா?

- மை.பாரதிராஜா