கைம்மண் அளவு



அவனவன் மண்ணில் விளைந்ததைத் தின்றான் மனிதன். அவனவன் காடுகளில் வேட்டையாடியதைத் தின்றான். பச்சை மாமிசம் தின்று, சுட்டுத் தின்று, இன்று தந்தூரி சிக்கனும், சிக்கன் மஞ்சூரியனும், கெண்டகி ஃப்ரைடு சிக்கனும் தின்னும் அளவுக்கு மாறி இருக்கிறான். அவனவன் மண்ணுக்குள்ளே மக்கி உரமாகியும் போனான்.

நாஞ்சில் நாட்டில் தென்னையும் நெல்லும் வாழையும் பயிர்கள். மானாவாரியாகப் பனைகள் நின்றன. விளைகளில் கடலையும் காணமும் காய்கறிகளும் பயிராயின. அங்கு கிடைத்தவற்றின் உள்ளேயே அவனது உணவுத் திட்டமும் இருந்தது. அவன் ஓட்ஸ் கஞ்சி குடித்திருக்க வாய்ப்பே இல்லை.

 அவன் பலகாரங்கள் அரிசி மாவு, தேங்காய், பனங் கருப்பட்டியில் செய்யப்பட்டவை. இன்று முந்நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை கிலோவுக்கு விற்கும் எந்த ஸ்வீட்ைடயும் அவன் கண்ணால் பார்த்ததில்லை. என் முதல் மைசூர்பாகினை எனது இருபத்திரண்டாவது வயதில், 1969ல் சென்னையில் தின்றேன். நீங்கள் ‘பாஸந்தி’ என்றால் அவன் ‘பாயசம்’ என்றான்.

நாஞ்சில் நாட்டில் ஏழை எளிய உழவன் வீட்டிலும் மாதம் முப்பது தேங்காய் செலவிருக்கும். நாக்பூர் விவசாயி மாதம் ஒரு தேங்காய்கூட பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அவன் மண்ணில் தென்னை மரம் கிடையாது. லசூன் சட்னிக்கு அவன் வாங்கும் கொப்ரா, கொங்கணத்திலிருந்து வருவது. தென்னை மரமே வளராத ஊரில் கொச்சங்காய், குரும்பை, கருக்கு, தேங்காய், நெற்று, சிரட்டை எனும் சொற்கள் இருக்குமா? சொற்களே இல்லாதபோது, ‘தோசைப் பருவத்து இளநீர் வழுக்கை’ என்றால் அவனுக்கு என்ன தெரியும்?

கன்னியாகுமரி மாவட்டத்துக்காரன் நெத்திலி, சாளை, அயிரை, வங்கடை, வாளை, குதிப்பு, குத்தா, பாரை, நெய்மீன், வெளமீன், நவரை, வாவல், கட்டா, இறால், திருக்கை, சுறா என்பன மீனின் வகைகள் என்றறிவான். போபால்காரன் பேய் அறைந்தது போல் விழிப்பான். மீன் தின்பவர்களில் பலர் கணவா தின்பதில்லை. அதை மீனே இல்லை என்பார்கள். இந்த வயது வரை நான் கடல் நண்டு தின்றதில்லை. எல்லாம் வளர்ப்பும், பழக்கமும், மனதளவிலான ஒவ்வாமையும்.

ஒட்டகம் திரிந்த நாட்டில் ஒட்டகம் தின்றான். பக்ரீத்துக்குப் பலி செய்யும்போது நமது சகோதரர்களும் ஒட்டகம் பலி கொடுக்கிறார்கள். அண்மையில் கனடாவிலிருந்து வெளியாகும் ‘காலம்’ இதழில் கீரனூர் ஜாகிர் ராஜா, ஒட்டகப் பலி பற்றி எழுதிய கதையின் தலைப்பு, ‘கசாப்பின் இதிகாசம்’! மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஓ.வி.விஜயனின் ‘கசாக்கின்ட இதிகாசம்’ எனும் நாவல் தலைப்பை ஜாகிர் ராஜா கலாட்டா செய்கிறார். பன்றி உறுமிய காட்டில் பன்றியை வேட்டையாடித் தின்றான். ஆடு மேய்த்தவன் ஆடு தின்றான். மாடு திரிந்த நாட்டில் மாடு தின்றான்.

நமது இதிகாச நாயகர்கள் பசுங்கன்றின் இறைச்சி தின்றதாகக் காவியங்கள் பேசுகின்றன. வால்மீகியின் ராமன் மீன் தின்றான். கம்பனின் ராமன் மீன் தின்னவில்லை.
ஆயிரம் நாவாய்க்கு நாயகன், தூய கங்கைத் துறையில் நெடுங்காலம் படகு விடுபவன், பகைவரைக் காயும் வில்லை உடையவன், மலை போல் திரண்ட தோள்களை உடையவன், போர்த்தொழில் வல்ல குகன் எனும் நாமத்தை உடையவன், சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குகிறவன், கூற்றமும் அஞ்சும் குரலை உடையவன், வனவாசம் வந்த ராமனை நண்ணி, ‘தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என் கொல் திருவுளம்?’ என்று கேட்கிறான். ‘தூய்மை செய்த மீனையும் தேனையும் உணவுக்காகக் கொண்டு வந்துள்ளேன். உன் திருவுளம் என்ன?’ என்கிறான் குகன்.

‘உள்ளத்து அன்பினால், உனது பக்தி புலப்படும் விதமாகக் கொணர்ந்த தேனும் மீனும் தேவர்க்கு உணவாகும் தகுதி உடையது. அமுதத்தை விடச் சிறந்தது. எம்மைப் போன்ற தவம் மேற்கொண்டோர்க்கும் உரியது. யாம் உண்டோம் என்று கொள்வாயாக’ என்கிறான் ராமன்.

சைவமாக இருந்தவன் அசைவனாகிறான். அசைவமாக இருந்தவன் சைவமும் ஆகிறான். வரலாறு பேசும் உண்மை இது. சில மதத்தினருக்கு, சில சமூகத்தினருக்கு சில விலங்குகளின் இறைச்சி விலக்கு. அதை அவர்கள் பேணிக் கொள்வார்கள். அதில் நமக்கென்ன வழக்கு? சைவம் உண்பவர் பலர் இன்றும் காளான் உண்பதில்லை. வங்காளத்து பிராமணர்கள் தம் வீட்டருகேயுள்ள தடாகத்தில் மீன் வளர்க்கிறார்கள். மீன் அவர்களுக்கு விரும்பிய உணவு. சைவ உணவு.
இதில் உயர்வென்ன, தாழ்வென்ன?

இந்தியாவில் மான் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. மான் கறி தின்ன வேண்டுமானால், இங்கு சட்டம் ஒழுங்கைக் காற்றுப் புகாமல் கைக்கிடையில் வைத்து நடமாடும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது சினிமா பிரபலமாக இருக்க வேண்டும். எனது அமெரிக்கப் பயணத்தின்போது, சாலையில் அடிபட்டுக் கிடக்கும் மான்களைப் பலமுறை பார்த்தேன். வாஷிங்டன் டி.சியில் வாழும் நிர்மல் பிச்சையா சொன்னார், ‘‘உங்க கார்லே மான் அடிபட்டு இறந்தா, அந்த மானை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு போகலாம்’’ என்று. ஏனெனில் நெடுஞ்சாலையில் கார்களில் அடிபட்டுச் சாகும் அளவுக்கு அங்கு மான்களின் பெருக்கம். நம்மூர் தெரு நாய்கள் போல!

நண்பர் ஜெயமோகனுடன் மலேசியச் சுற்றுப்பயணம் செய்தபோது, மலேசிய தமிழ்ச் சங்கத்து நண்பர் ராசேந்திரன் எங்களுக்கு மான்கறி வாங்கிக் கொடுத்தார். அவர்கள் நாட்டில் மான் வேட்டை தடையில்லை.மானின் விழியைப் பெண்ணின் கண்களுக்கு உவமை சொல்லிக் கவிதை செய்கிறவனும் மான்கறி தின்னாமல் இல்லை. மீனை உவமை சொல்பவனும் மீன் கறி தின்னாமல் இல்லை. திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்று, மச்சாவதாரம் எனும் மீன் அவதாரம். இன்னொன்று, கூர்ம அவதாரம் எனும் ஆமை அவதாரம். பிறிதொன்று, வராக அவதாரம் எனும் பன்றி அவதாரம். மச்ச, கூர்ம, வராகத்தை மனிதன் தின்கிறான். அவர்கள் எல்லோரும் திருமாலின் ஹிட் லிஸ்ட்டில் இல்லை. ‘தெய்வ அவதாரங்களைத் தின்னலாமா’ என்றெவரும் கேட்பதில்லை.

நல்லவேளையாக மனிதன், மாலின் பிற அவதாரங்களைப் புசிப்பதில்லை. எல்லோருக்குமா, ‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ உண்ணும் பாக்கியம் கிடைக்கிறது?‘ஏழைகளுக்கு இறைவன் உணவு வடிவத்தில் வருகிறான்’ என்கிறது திருவிவிலியம். நாம் ‘இறைவனைத் தின்னாதே, இறை வடிவத்தைத் தின்னாதே’ எனலாமா?பாம்பு தின்றார்கள் பல நாடுகளில். ‘பாம்பு என்றால் எமக்கு ஆதிசேடனாகும்’ என்றால் யார் கேட்பார்கள்? ‘வாசுகி, கார்க்கோடகன், தக்‌ஷன், அனந்தன், குளிகன், சங்கன், பதுமன் என்பவை எல்லாம் இறைத்தன்மையுடைய பெரும் பாம்புகளாகும்’ என்றால் சீனர்கள் கேட்பார்களா? ‘‘இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்கு உள்ளே, பாம்பு தின்பதை நிறுத்தாவிடின் ICBM ஏவிப் போர் தொடுப்போம்’’ என்று இறுதி எச்சரிக்கை விடுக்க இயலுமா?

இந்தோ - சீன யுத்தத்தில் நாம் தோற்றுப் பின்வாங்கிய பிறகு, பாம்பு தின்னும் சீனனைப் பற்றித் தமிழில் எத்தனை நூறு கவிதைகள் எழுதப்பட்டிருக்கும்? இப்போது நினைத்தால் சிரிப்பாணி வருகிறது. நாய், பல்லி, தவளை, பாச்சா, வண்டு, ஈசல், புழு என ரசித்துத் தின்பதைக் காண்கிறோம் சேனல்களில்! நமக்கு அது அருவருப்பாக இருக்கலாம். ஆனால் தின்பவர் விரும்பித்தானே உண்கிறார்கள்?

முட்டையிடும் நாட்டுப் பெட்டைக் கோழியையோ, முட்டை என்ற பிறப்பறியா பிராய்லர் பெடைகளையோ தின்னலாம். சேவல் என்பது குன்றேறி நிற்கும் குமரனின் கொடி. ஆகவே சேவலைக் கொன்று தின்னாதே என்று சட்டம் இயற்றுவோமா? அணிலின் முதுகில் இருக்கும் மூன்று வரைகள், சேது பந்தனம் செய்தபோது அணில் செய்த உதவிக்காக நன்றி பாராட்டி, தசரத ராமன் தனது மூன்று விரல்களால் தடவிக் கொடுத்ததால் ஏற்பட்டவை என்கிறார்கள். கம்பன் எழுதிய யுத்த காண்டத்தில், சேது பந்தனப் படலத்தில் அதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. பௌராணீகக் கற்பனையாக இருக்கும். ஆனால், பல நாடுகளில் முதுகில் வரை இல்லாத அணில்களைப் பார்த்திருக்கிறேன்.

பாஸ்டன் நகரில் பூங்கா ஒன்றைத் தாண்டி, அருங்காட்சியகம் கூட்டிப் போனார் நண்பர் பாஸ்டன் பாலாஜி. போம் வழியில் சில முரட்டு அணில்கள் குஞ்சல வாலைத் தூக்கி நின்றன. ‘‘பக்கத்தில் போகாதீங்க... அவை சாது அல்ல!’’ என்றார் நண்பர். அவற்றின் முதுகிலும் கோடுகள் இல்லை. ஒருவேளை ராமனின் தட்டகம் இந்தியாவின் சில பகுதிகள்தாம் போலும்! எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், ராமனின் கைவிரல்கள் பட்ட அணில்களைச் சுட்டுத் தின்கிறார்கள், புனிதமானவை என்றும் பாராமல்.

‘பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா’ என்பார் பாரதி. பசு மிக நல்ல விலங்கு. மிக மிக நல்ல விலங்கு. பிறந்த குழந்தைக்கும், நோயாளிகளுக்கும், சாவுக்குக் காத்திருக்கும் முதியோருக்கும் அதன் பால் நல்ல உணவு. எவருக்கும் அதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. பால் தருவது மட்டுமல்ல... வண்டி இழுக்க, ஏரோட்ட, கமலை இறைக்க, செக்கு ஆட்ட காளையங் கன்று களும் தரும்.

ஆனால் பால் என்பது தாவரத்து ஊறும் நீரா? தென்னை இளநீரா? கரும்பனைமரத்துப் பதநீரா? அல்லது கரும்பு பிழிந்தெடுத்த சாறா? பசு மாட்டு ரத்தத்தின் மாற்றப்பட்ட வடிவம்தானே! மேலும் மனிதன் பருக என்றா பசுக்கள் பால் சுரக்கின்றன? அவற்றின் கன்று குடிக்கத்தானே!‘கன்று குடித்து மிஞ்சியதைக் கறந்து கொண்டு வந்திடலாம் காப்பியில் விட்டுக் குடித்திடலாம்’ என்கிறார் கவிமணி. கன்று குடித்து மிஞ்சியதைத்தான் கறக்கிறோமா? நமக்கு திக்காகக் காபி போடவும், கெட்டித் தயிராக்கவும், மணல் மணலாகப் புத்துருக்கு நெய் தரவும்தான் பசுக்கள் பால் சுரக்கின்றனவா?

‘பசு பெற்ற தாய் போன்றது’ என்பதெல்லாம் கேட்க நன்றாகவே இருக்கிறது. எனில் எருமை, ஆடு, ஒட்டகம் எல்லாம் மாற்றாந்தாய்களா? எருமை இறைச்சியும் ஆட்டிறைச்சியும் உண்பது மட்டும் அறமா? பசுவை ‘வீட்டின் லட்சுமி’ என்றோம். விவசாயி முன்பெல்லாம் பசுவோ, காளையோ, எருமையோ, கடாவோ வயதாகிப் போனாலும் அவை தொழுவத்தில் கிடந்து சாகட்டும் என்று நினைத்தான். வறுமையின், கடனின் நெருக்கலில் விவசாயியே சாகும்போது அவன் கன்று காலிகள் என்னவாகும்?

பால் குடிப்பதும் மாட்டைக் கொன்று தின்பதும் ஒன்றா என்று எவரும் கேட்கக்கூடும்! எனில் கலைஞர்களை, அறிஞர்களை, எழுத்தாளர்களைக் கொல்வது அறமா? கால் மாட்டில் கிடக்கும் இலங்கை வாழ் தமிழர்கள் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் பேரைக் கொல்லக் கூட்டு நின்றோமே, அது அறமா? இன்றும் அவர்களுக்காக இந்திய அரசாங்கம் வடிப்பது நீலிக் கண்ணீரா? ரத்தக் கண்ணீரா?

காளை உண்ணலாம் எனில் காளை சிவனின் வாகனம். இடப வாகனம். எருமைக் கடாவை ‘போத்து’ என்கிறது மலையாளம். ‘கரும் போத்துப் போல இருக்கான்’ என்பது வசவு. கரும் போத்து எமனின் வாகனம். சிங்கத்தைத் தின்பது, புலியைத் தின்பது, யானையைத் தின்பது எளிதான காரியம் அல்ல என்பதினால்தானே தவிர, அவை அம்மன் வாகனம், ஐயப்பன் வாகனம், விநாயகன் வடிவம் என்பதனால் அல்ல.

எல்லா விலங்கும் பறவையும் சகல ஜீவராசிகளும் உயிர்கள் தாம். கருணையோடு பார்க்கப்பட வேண்டியவைதான். ‘தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்’ என்கிறார் திருவள்ளுவர். ‘தன் உடலின் தசையை வளர்த்துக்கொள்ள, பிறதோர் உயிரைக் கொன்று அதன் உடலை உண்பவன் எப்படி அருளாளன் ஆக முடியும்’ என்பது பொருள். ‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும்’ என்பதும் திருக்குறள்தான். இதற்குப் பொருள் சொல்லத் தேவையில்லை. ‘அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் ெசகுத்து உண்ணாமை நன்று’ என்பதும் திருக்குறளே! ‘உயிரினங்களைப் பலியிட்டு ஆயிரம் ேவள்விகள் செய்வதை விட ஒரேயொரு உயிரைக் கூட உணவுக்காகக் கொல்ல மறுப்பது நன்று’ என்பது பொருள்.

வள்ளுவத்தைத் தமிழ் மறை என்றோர் எத்தனை பேர் புலால் மறுத்தார்கள்? சொற்பொழிவுக்கும் பிரசாரத்துக்கும் ஒன்று, சொந்த வாழ்க்கைக்கு மற்றொன்றா? வள்ளுவர் அருளாளர்களுக்குச் சொல்கிறார் என்றும், சாமான்யன் வாழ்க்கைப் போராட்டமே உணவுக்காக எனும்போது அவனுக்கு இது பொருந்தாது என்றும் எடுத்துக்கொள்கிறேன்.

ஊரில் சொல்வார்கள், ‘கொன்றால் பாவம், தின்றால் போகும்’ என்று. அது அத்தனை எளிமையான வாசகம் அன்று. தோலுக்காக, பல்லுக்காக, தந்தத்துக்காக, கொம்புக்காக, கொழுப்புக்காக, விடத்துக்காக, இறகுக்காக... விலங்கை, பாம்பை, பறவையைக் கொல்வது பாவம். ஆனால், தின்பதற்காகக் கொல்வது பாவம் இல்லை. தின்பதற்காகக் கொல்வது பற்றிக் குற்ற உணர்வு அவசியம் இல்லை.

மேலும் இந்த பாவம்-புண்ணியம் என்பது என்ன? பாவ புண்ணியத்தின் அலகுகள் என்ன? பாவ புண்ணியம் என்பது மதத்துக்கு மதம், இனத்துக்கு இனம் மாறுபடுமா? பாவ புண்ணியம் என்பனவற்றுக்கும் அறத்துக்குமான தொடர்பு என்ன?வணங்கினால் மட்டும்தான் கடவுளா? எல்லா உயிர்களும் இறை என்பதும் எல்லா உயிர்களின் மீதும் அன்பு பூண வேண்டும் என்பதும் நமது தத்துவங்கள் போதிப்பன அல்லவா? ‘உயிர்கள் இடத்து அன்பு வேணும்’ என்கிறாரே பாரதி. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்கிறாரே வள்ளலார். நெல்மணி, கோதுமை மணி, பயிறு, கடலை, கடுகு, சீரகம், வெந்தயம் எல்லாமே விதைத்தால் முளைக்கும் உயிரல்லவா? பாதாமும் பிஸ்தாவும் முந்திரியும் கொட்டையினுள் கிடக்கும் உயிர்தானே!

எனவே, எவற்றையும் கொன்றால் பாவம், தின்றால் தீரும். அவரவர் உணவு, அவரவர் வாழும் பிரதேசம், வாழ்முறை சார்ந்தது. எவரது Penal Codeக்கும் அது கட்டுப்பட்டதல்ல. புலி மானைத் தின்னும், மான் புல்லைத் தின்னும். இது இயற்கையின் நியதி. மேகம் கறுத்தால் மழை பெய்யும், மழை பெய்தால் மண் குளிரும், மண் குளிர்ந்தால் புல் வளரும், புல் வளர்ந்தால் பசு மேயும்! பசு மட்டுமல்லாது ஆடு மேயும், எருமை மேயும், கழுதை, குதிரை மேயும், மான் மேயும், மிளா மேயும்.
ஒருவருடைய இறைத்தூதர் சொல்லும் ஒன்றை எல்லா இறைத்தூதர்களும் சொல்ல வேண்டும் என்று இல்லை. ஒரு மதத்தவருக்கு பன்றி மாமிசம் தடுக்கப்பட்ட உணவு. இன்னோர் மதத்தவருக்கு பசு மாமிசம் தடுக்கப்பட்ட உணவு. மற்றோர் மதத்தவருக்கு இரண்டுமே அனுமதிக்கப்பட்ட உணவு. பிறிதோர் மதத்தவருக்கு மாமிசமே தடுக்கப்பட்ட உணவு.

அவரவர் சீலம், அவரவர் ஒழுக்கம், அவரவர்க்குச் சிறப்பு. எதையும் எவர் மீதும் திணிக்காமல் இருத்தல் மானுடத்தின் சிறப்பு. உணவு பற்றிய இன்றைய வெற்று ஆரவாரங்களைத் தவிர்த்துவிட்டு ஆக்க வேலைகளைச் செய்ய முயல்வது அரசாங்கத்தின் அறம்.

நமது இதிகாச நாயகர்கள் பசுங்கன்றின்  இறைச்சி தின்றதாகக் காவியங்கள் பேசுகின்றன. வால்மீகியின் ராமன் மீன்  தின்றான். கம்பனின் ராமன் மீன் தின்னவில்லை.
வங்காளத்து பிராமணர்கள் தம் வீட்டருகேயுள்ள தடாகத்தில் மீன் வளர்க்கிறார்கள். மீன் அவர்களுக்கு விரும்பிய உணவு. சைவ உணவு.‘ஏழைகளுக்கு இறைவன் உணவு வடிவத்தில் வருகிறான்’ என்கிறது திருவிவிலியம். நாம் ‘இறைவனைத் தின்னாதே, இறை வடிவத்தைத் தின்னாதே’ எனலாமா?

(கற்போம்...)

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது