மழை வாசம்



காலக்கிரமத்தில் பெய்யாமல்
பருவமழை பொய்த்துப் போக 
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால்
உண்டானது இந்த இடைக்கால மழை!

பால்முற்றிப் பழுத்து
அறுவடைக்குத் தயாராயிருந்த நெற்கதிர்கள்
இடையறாது பெய்த மழையில் மிதக்க
காலநேரம் தெரியாமல் பெய்த மழையை
விவசாயப் பெருங்குடிகள் சபிக்கத் தொடங்க
தன் கண்ணெதிரில்

வறண்டு கிடந்த அருஞ்சுனை
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு
கரை ததும்ப நிரம்பிக் கிடப்பதையும்
கரையோர கருவ மரங்களில்
இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கின்ற

கூழைக்கடா பறவைகளின்
கிறீச்சிடல்களையும்
முன்தின கருக்கலில்
மழை நிற்பதற்காக பிசான சாகுபடிக்காரர்கள்
தன் பூடத்தின் முன் விரித்திருந்த
படையலில் மிச்சமிருந்த
கருஞ்சுருட்டை அழுத்தமாய் உள்ளிழுத்து
புகைத்தபடி ரசிக்கத் தொடங்குகிறார்
அருஞ்சுனை காத்த அய்யனார்!

வே.முத்துக்குமார்