நான் உங்கள் ரசிகன் 10
மனோபாலா
‘ஊர்க்காவலன்’ பட டிஸ்கஷன் அப்போ சத்யா மூவீஸ்ல ஒரு ரூம்ல மியூசிக் கேக்குது. உள்ளே போய் பார்த்தா சங்கர் - கணேஷ் உட்கார்ந்து வாசிச்சிட்டு இருக்காங்க. ‘‘என்னங்க.. சிற்பிக்குதானே வாக்குறுதி குடுத்தீங்க?
இப்போ ஆளை மாத்திட்டீங்களே..?’’னு ஆர்.எம்.வீ.கிட்ட கேட்டா, ‘‘அவன் புதுப்பையனா இருக்கான். ரஜினி படத்துக்கெல்லாம் தாங்குவானானு தெரியலை. எதுக்கு ரிஸ்க்னு மாத்திட்டேன்’’னு சொல்றார். அந்த நேரம் வடபழனி முருகன் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு பிரசாதத்தோடு உள்ளே நுழைஞ்ச சிற்பி, இதைக் கேள்விப்பட்டு அந்த இடத்துலேயே மயக்கம் போட்டு விழுந்துட்டார்.
‘‘என்னிக்கு இருந்தாலும் நீ பெரிய ஆளா வருவே...’’னு அவனைத் தேத்தி அனுப்பினேன். ‘ஊர்க்காவலன்’ படத்துக்கு சங்கர் - கணேஷ் போட்ட எட்டு பாடல்களும் சூப்பர் ஹிட். சத்யஜோதி தியாகராஜன் சாரும், நானும் ரஜினி சார்கிட்ட கதை சொல்லப் போனோம். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நான் ‘பிலிமாலயா’ சினிமா பத்திரிகைல போட்டோகிராபரா இருந்திருக்கேன்.
அப்போ ஃபிலிம் சேம்பர்ல நடிப்பு கத்துக்கிட்டிருந்த ரஜினியை போட்டோ எடுத்த அறிமுகம் இருந்தது. அப்புறம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்ல ‘அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங் நடந்தப்போ, பக்கத்துல சோலையப்ப முதலி தெருவில் இருந்த என் ரூமில் இருந்துதான், ரஜினி நடிக்கப் போனார். கதை சொல்றதுக்கு முன்னாடி அவர்கிட்ட இதையெல்லாம் சொல்லி, ‘‘நினைவிருக்கா?’’னு கேட்டேன். ‘‘நினைவு வைக்கிற மாதிரி உருவம் இருந்தா, பரவாயில்ல... நீங்க அப்போ பென்சில் மாதிரி இருந்தீங்களே..!’’னு சொல்லி கிண்டல் பண்ணினார். முதல் பாதிக் கதை சொல்லி முடிச்சதும், ‘‘இதுக்கு மேல எதுவும் கேட்கத் தேவையில்லை. படப்பிடிப்புக்கே போயிடலாம்’’னு ரஜினி சொல்லிட்டார்.
உடனே, ஷூட்டிங்குக்காக 250 நாடக நடிகர்களைக் கூட்டிக்கிட்டு மைசூர் கிளம்பிட்டோம். ‘‘இவ்வளவு நாடக நடிகர்களா? இதுவரை வந்த என் படங்கள்ல நான் இவ்வளவு பேரைப் பார்த்ததில்லையே?’’னு ரஜினியே அதிசயப்பட்டுட்டார். ஷூட்டிங் பிரேக்ல அவங்களோட பேசிக்கிட்டு இருப்பார். சிவாஜி, எம்.ஜி.ஆர் எல்லாரும் நாடகங்களுக்காக பண்ணின தியாகங்களை நாடக நடிகர்கள் சொல்லக் கேட்டு ரஜினி பிரமிச்சிட்டார். சிவாஜி, எம்.ஜி.ஆர் பட ஷூட்டிங்கில் எல்லாம் மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர் இருந்தால் ‘‘அவங்க நாடகத்துக்கு போகணும். முதல்ல அவங்க போர்ஷனை ஷூட் பண்ணிட்டு அனுப்பி வைங்க...’னு சொல்வாங்களாம். அதைப் போல சிவாஜி சார் ஷூட்டிங் முடிஞ்சதும், பக்கத்துல நாடகம் எங்கே நடக்குதுனு கேட்டு, அந்தக் கொட்டகைக்குப் போய் நாடகத்தைப் பார்த்துட்டு, அப்படியே அந்த மேடையிலேயே கொஞ்ச நேரம் தூங்கிடுவாராம்.
‘‘நீங்களும் ஒரு டிராமாவுல நடிங்களேன்’’னு நான் ரஜினிகிட்ட கேட்டுவைக்க, பதறிட்டார் மனிதர். ‘‘நானாவது டிராமாவுல நடிக்கிறதாவது... சினிமாவுக்கே ஒவ்வொரு ஷாட்டும் உதறுது. ஒவ்வொரு படமும் நித்திய கண்டம் பூரண ஆயுசு மாதிரி இருக்கு. டிராமா ஒரு தனிக்கலை. அதுக்குனு தனித்திறமை வேணும். அதுல போய் சின்னப்புள்ளையாட்டம்... டெஸ்ட் பண்ணிப் பார்க்கக்கூட அந்தப் பக்கம் போயிடக் கூடாது. எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருந்திருக்காங்க. நாம அங்கே போகாம இருக்கிறதே அந்த ஜாம்பவான்களுக்கு மரியாதை குடுக்கற மாதிரி!’’னு பணிவா அவர் சொன்னது இன்னமும் ஞாபகத்துல இருக்கு.
ரஜினியின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ல ஒரு காட்சி... ஒரு சின்னப் பொண்ணுகிட்ட ரஜினி சார் லெட்டர் குடுத்து விடுவார். அந்தப் பொண்ணு, அதை வித்யாகிட்ட கொண்டு போய்க் குடுக்கும். அந்த சின்னப் பொண்ணுதான் பின்னாளில் ‘ஊர்க்காவலன்’ல ரெண்டாவது கதாநாயகியா நடிச்ச ‘இதயம் நல்லெண்ணெய்’ சித்ரா. ராதிகா ஹீரோயின்.
மைசூர்ல தொடர்ந்து படப்பிடிப்பு. கொஞ்சம் கூட பிரேக்கே விடாமல் ஷூட்டிங் போகுது. ரஜினி சார்ல இருந்து நாங்க எல்லாருமே ‘கொஞ்சம் பிரேக் கிடைச்சா நல்லாயிருக்குமே’னு ஃபீல் பண்ற நிலைமைக்கு வந்துட்டோம். சும்மா பிரேக் விட முடியுமா? புரொடியூசர் தியாகராஜன் கேள்வி கேப்பாரே! ‘என்ன பண்ணலாம்?’னு நானும் ரஜினி சாரும் யோசிச்சோம்.
ராதிகாவுக்கு லோ பிரஷர் இருக்கறது எல்லாருக்கும் தெரியும். ஸோ, ராதிகா ஷூட் டிங்ல மயக்கம் போட்டு விழுந்துட்டா, அதையே காரணமா வச்சு ஷூட்டிங்கை நிறுத்திடலாம்னு திட்டம் போட்டு அதை ராதிகாகிட்டயும் சொல்லிட் டோம். மறுநாள் ஒரு மலை மேல ஷூட் டிங். கீழே ராதிகா, ரஜினி எல்லாரும் இருக்காங்க. நான் ஏற்கனவே ராதிகாகிட்ட சொல்லி வச்சிருந்த பிளான்படி, இங்கிருந்து ஒரு வெள்ளை கர்ச்சீப்பை அசைச்சேன். உடனே ராதிகா மயக்கம் போட்டு கீழே விழ, ‘பேக்கப்’னு சொல்லிட்டு, ஒரே மூச்சுல நான், ராதிகா, ரஜினி எல்லாரும் அடிச்சுப் பிடிச்சு அந்த ஸ்பாட்ல இருந்து எஸ்கேப் ஆகி, பத்து கிலோமீட்டர் தள்ளிப் போய் வண்டியை நிறுத்தினோம். கீழே இறங்கினதும் ரஜினியில இருந்து எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம். இந்தத் தகவல் இப்போ வரை சத்யஜோதி தியாகராஜனுக்குத் தெரியாது.
‘ஊர்க்காவலன்’ வெற்றி விழாவுல எம்.ஜி.ஆர் கையால விருது வாங்கணும்னு ஆசைப்பட்டேன். அது நிறைவேறல. ஆனா, ஜானகி அம்மா கை யால விருது வாங்கினேன். ‘தில்லு முல்லு’வுக்கு அப்புறம் ரஜினி பண்ணின முழுநீள காமெடிப் படம் ‘ஊர்க்காவலன்’. ‘கதாநாயகனே படத்துல காமெடி பண்ணும்போது அந்தப் படத்தோட ரீச்சும் வீச்சும் வேகமா இருக்கும்’ங்கற ரகசியத்தை எனக்குச் சொன்னவர் பஞ்சு அருணாசலம்தான்.
‘‘ஹீரோ ஒரு போலீஸ் அதிகாரினு படத்தோட ஸ்டார்ட்டிங்லேயே சொல்லிடக் கூடாது. அதைக் கடைசி யில சொல்லலாம். அப்படி இருந்தாதான், ஹீரோ ஆடலாம்... பாடலாம்... என்ன வேணா பண்ணலாம். அப்புறம் நமக்குத் தேவையானப்போ, அவர் ஒரு போலீஸ்னு போட்டு உடைக்கலாம். கதைக்குத் தேவையான ஆக்ஷன் வர்றதுக்கும் சௌகரியமா இருக்கும்!’’னு அவர் சொன்னார். இந்த பாணிக்கு சிறந்த உதாரணம், எம்.ஜி.ஆர் நடிச்ச ‘காவல்காரன்’ படம். விஜய், ‘போக்கிரி’யில கூட இந்த ஃபார்முலாவைத்தான் பண்ணியிருப்பார்.
‘ஊர்க்காவலன்’ படத்துக்கு அப்புறம், விஜயகாந்த் கூட இணையும் சந்தர்ப்பம் வந்தது. ‘சிறைப்பறவை’ டைம்லேயே விஜயகாந்தை மையமா வச்சு இன்னொரு படம் பண்றேன்னு அவர்கிட்ட வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதுக்காகவே தயாரிப்பாளர் அருணும் நானும் பண்ணின படம்தான் ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’. அப்போ விஜயகாந்த் ஒரு நிபந்தனை விதிச்சார்.
‘‘மனோபாலா சார்! நீங்க எதுக்கெடுத்தாலும் ராதிகா... ராதிகானு சொல்வீங்க... இந்தப் படத்துக்கு புது ஹீரோயினைக் கொண்டு வாங்க. புது காம்பினேஷனா இருக்கும்’னார். அதனாலதான் விஜயகாந்த், சுஹாசினி, ரேகானு வித்தியாசமான காம்பினேஷன் அமைஞ்சது. அந்தப் படத்தோட என்.எஸ்.சி விநியோக உரிமையை வாங்கினது ராதிகாதான். அந்தப் படத்துக்கு அப்புறம் சத்யஜோதி தியாகராஜன் என்னை அவங்களோட அடுத்த படத்துக்கு புக் பண்ணுறார்.
அந்தப் படத்துக்கான கதையை ரெடி பண்ணிட்டிருக்கும்போது, ‘என் புருசன்தான் எனக்கு மட்டும்தான்’ படத்தை இந்தியில பண்ணும் வாய்ப்பு வருது. மும்பை போயிட்டு அதை ஏத்துக்கிட்டு சென்னை திரும்பும்போது, ‘அவன் இந்திக்கு போயிட்டான், இனிமே திரும்பி வரமாட்டான்’ங்கற எண்ணத்துல சத்யஜோதி கம்பெனியில இருந்து என்னைத் தூக்கிட்டாங்க. நான் இயக்க வேண்டிய படம்தான் ‘கிழக்கு வாசல்’. ஆர்.வி.உதயகுமார் இந்தப் படத்தோட பாடல் கம்போஸிங்கிற்காக உட்காரும்போது, உதயகுமார்கிட்ட இளையராஜா சொன்ன ஒரு விஷயம் இன்னும் சுவாரஸ்யம்.
‘‘எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருந்திருக்காங்க. நாம அங்கே போகாம இருக்கிறதே அந்த ஜாம்ப வான்களுக்கு மரியாதை குடுக்கற மாதிரி!’’னு பணிவா ரஜினி சொன்னது இன்னமும் ஞாபகத்துல இருக்கு.
‘கதாநாயகனே படத்துல காமெடி பண்ணும்போது அந்தப் படத்தோட ரீச்சும் வீச்சும் வேகமா இருக்கும்’ங்கற ரகசியத்தை எனக்குச் சொன்னவர் பஞ்சு அருணாசலம்தான்.
(ரசிப்போம்...)
தொகுப்பு: மை.பாரதிராஜா படங்கள் உதவி: ஞானம்
|