தலைக்கு வைக்கிற பூவிலிருந்து, வீட்டில் ஏற்றி வைக்கிற ஊதுவத்தி, உடைக்கு உபயோகிக்கிற சென்ட், அறைக்கு அடிக்கிற ஸ்பிரே என எல்லாவற்றிலும் நறுமணம் எதிர்பார்ப்பது மனித இயல்பு. வாசனை சூழ வாழ்வது மகிழ்ச்சியானதுதான் என்றாலும், பலருக்கும் அது பட்ஜெட்டில் இடிக்கிற விஷயம்.
‘சென்ட்டும் ரூம் ஸ்பிரேயும் பணக்காரங்க யூஸ் பண்றது...’ என்ற எண்ணத்தை மாற்றுகிறது சென்னையைச் சேர்ந்த ரேவதி கணேஷ் தரும் தகவல்கள். ‘‘படிச்சது சைக்கோதெரபி. பொழுதுபோக்கா கைவினைப்பொருள்கள் செய்யக் கத்துக்கிட்டேன். சென்ட் தயாரிப்பு கத்துக்கிட்டு 5 வருஷங்கள் ஆகுது. ஆர்வத்துல செய்ய ஆரம்பிச்சு, தெரிஞ்சவங்களுக்கெல்லாம் இலவசமா சாம்பிள் பாட்டில் கொடுத்திட்டிருந்தேன். கடைகள்ல வாங்கறதைவிட நல்லாருக்கேனு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் அதை ஒரு பிசினஸா செய்யற எண்ணம் வந்தது’’ என்கிற ரேவதி, கற்றுக்கொண்டு, தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘ஆல்கஹால், டி.ஜி ஆயில், எசென்ஸ், ஸ்பிரிட், காலி பாட்டில்கள்... மூலப்பொருள்களுக்கு 250 ரூபாய் தேவை. காலி பாட்டில்கள் 25 ரூபாய்லேர்ந்து 225 ரூபாய் வரைக்கும் கிடைக்குது. அளவு, வடிவத்தைப் பொறுத்து வாங்கலாம். 500 ரூபாய் முதலீடு போதும்.’’
எத்தனை வெரைட்டி? என்ன ஸ்பெஷல்? ‘‘மல்லிகை, லேவண்டர், சந்தனம், கூல் வாட்டர், பிரைட், சன் ஃபிளவர், ஏலக்காய்னு நிறைய வாசனை இருக்கு. சிலருக்கு தெரு முனைல வரும்போதே வாசனை தூக்கலா இருக்கணும். சிலருக்கு சென்ட் போட்டதே தெரியக்கூடாது... ஆனா, வாசனையும் இருக்கணும். வீட்ல தயாரிக்கிறப்ப மட்டுந்தான் இதெல்லாம் சாத்தியம்.’’
ஒரு நாளைக்கு எத்தனை?‘‘சென்ட் தயாரிக்கிறதுன்னதும் பெரிய பெரிய பாத்திரங்கள், மிஷின் எல்லாம் வேணும்னு நினைக்க வேண்டாம். எந்த பாட்டில்ல நிரப்பப் போறோமோ, அதுலயே நேரடியா கலந்துடலாம். 1 மணி நேரத்துல 20 பாட்டில் சென்ட் பண்ணிடலாம். சென்ட் பண்றதுக்குத் தேவையான பொருள்கள்ல சிலதை நீக்கி, ரூம் ஸ்பிரேயும் செய்யலாம்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘வீட்டுக்குப் பக்கத்துல உள்ள கடைகளுக்கு சாம்பிள் கொடுக்கணும். வாடிக்கையாளர்கள் வரும்போது அடிச்சுப் பார்த்தாதான் அவங்களுக்கு வாசனை பிடிச்சு வாங்குவாங்க. அப்புறம் சின்னச் சின்ன பாட்டில்கள் சப்ளை பண்ணிப் பார்க்கலாம். அப்படியே பிசினஸ் வளர ஆரம்பிக்கும். 150 மி.லி தயாரிக்க 250 ரூபாய் செலவானா, அதை இரண்டு மடங்கு லாபம் வச்சு விற்கலாம்.’’
பயிற்சி?‘‘ஒன்றரை மணி நேரத்துல ரெண்டையும் செய்யக் கத்துக்கலாம். மெட்டீரியல்களோட கட்டணம் 550 ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்:ஆர்.சந்திரசேகர்