வைரமுத்துவுக்கு நான் போட்டி!



‘‘சிறுகதை வடிவம் மனித இனம் தொடங்கியபோதே தொடங்கிவிட்டது. இலக்கிய வடிவில் அதற்கு பெரும் இடம் உண்டு. எண்ண ஓட்டத்தைத் தெளிவு படுத்தி மனதையும், புத்தியையும் இணைக்கும் பாலமே சிறுகதை வடிவம்.

அந்த வகையில் வைரமுத்து சிறுகதைகள் தமிழ் இலக்கியத்திற்கு ஏற்றம் தந்து சிறப்பு செய்கின்றன.  அவரது கவிதைகளைப் போலவே சிறுகதைகளும் ஆற்றொழுக்காக இருப்பவை!’’ - என கம்பீரக் குரலில் பேசினார் கலைஞர். சென்னை காமராசர் அரங்கத்தில் நடந்த கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ புத்தக வெளியீட்டு விழாவில்தான் இந்த உணர்ச்சி மிகுந்த பேச்சு.

விமர்சனப் பாங்கில் பேசிய கமல்ஹாசன், ‘‘திருக்குறள், நாலடியார் இவற்றைக் கூட நான் சிறுகதைகளே என்ற கணிப்பில்தான் படிக்கிறேன். இந்தச் சிறுகதைகளைப் பற்றி அவர் எழுதிய முன்னுரையைக் கூட ஒரு சிறுகதையாகத்தான் எண்ணிப் படித்தேன். வைரமுத்துவின் இந்த சிறுகதைகளில் உண்மையும், மனிதத் தன்மையும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

எனக்கே இம்மாதிரி புத்தகம் வெளியிடுகிற ஆசை இருக்கிறது. எழுதிக்கொண்டும் இருக்கிறேன். என் கவிதைகளை நான் பிரசவித்தவுடன் அதை அப்படியே கவிஞரிடம் வாசித்துக் காண்பிப்பேன். அவரது எழுத்து வாசகர்களைப் போய்ச் சேர்வதோடு, எழுத்தாளர்களையும் உருவாக்குகிற இரட்டைப் பணியைச் செய்கிறது!’’ என்றார்.

‘‘பெரியார், அண்ணா ஆகிய பெரும் தலைவர்களோடு மேடையில் இருந்த கலைஞரின் அருகில் நானும் கமலும் அமரக் கிடைத்த வாய்ப்பே அருமை பெருமையானது. நான் 12 வயதில் தமிழ் உச்சரித்தது கலைஞரின் விரல் தொட்டும், சிவாஜியின் குரல் கேட்டும்தான். கலை என்பது ஒருவரை விடுதலைப்படுத்த வேண்டுமேயன்றி அடிமைப்படுத்தக் கூடாது. அந்த வகையில்தான் என்னால் இந்த சிறுகதைகளை உணர்வுபூர்வமாக எழுத முடிந்தது!’’ - இப்படி ஏற்புரை நிகழ்த்த வந்த வைரமுத்துவின் குரலில் நிறைவும், நிம்மதியும் ததும்பி வழிந்தன.

தலைமையுரை ஆற்ற வந்தார் கலைஞர். ‘‘வைரமுத்துவின் எழுத்தில் நான் எப்போதும் மனதைப் பறிகொடுத்து வந்திருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பே அவரின் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையில், ‘கறுப்பு மனிதனுக்குள் நெருப்புப் பிழம்பா! இதயப் பைக்குள்ளே எத்தனை கர்ப்பப் பைகள்! மூளைக்குள்ளே எத்தனை விதைகள்!’ என எழுதி இருக்கிறேன்.

அவர் எழுத்து கிராமிய மணத்தோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் வாதாடுகிறது. நான் 1945லேயே சிறுகதைகள் எழுதிவிட்டேன். அந்த வகையில் வைரமுத்துவிற்கு நான் அப்பொழுதே போட்டி!’’ என விழாவை கலகலப்பாக்கினார் கலைஞர்.

- நா.கதிர்வேலன்