குட்டிச்சுவர் சிந்தனைகள்



‘ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக’, ‘அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக’ன்னு  நம்ம ஆளுங்க பெருமை பேசுன காலமெல்லாம் மலையேறிப் போக, இப்ப வெளிநாட்டு நடிகர் நடிகைகள், ‘என்னைய உசிலம்பட்டில கூப்பிட்டாக’, ‘என்னைய உதகமண்டலத்துல கூப்பிட்டாக’ன்னு பெருமை பேசுற காலம் வந்தாச்சு. ‘ஐ’ பட ஆடியோ ரிலீஸுக்கு வந்த ‘ஹாலிவுட் ரஜினி’ அர்னால்டு, இப்ப ‘எந்திரன் 2’க்கு வில்லனா நடிக்க வர்றாராம்.

ஒருவேளை ‘எந்திரன் 2’வை மிஸ் பண்ணினாலும், இன்னொரு 2 வருஷத்துக்குள்ள எப்படியும் அந்த ஹாலிவுட் சிங்கத்த கோலிவுட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திடுவாங்க. ஒரு படத்துக்காக நடிக்க வந்தாலும் எமி ஜாக்சனை மொத்தமா நாம புடிச்சு வைக்கலையா? அதுபோல அர்னால்டு சிக்குனா எப்படியும் அஞ்சாறு வருஷம் வச்சு செய்ய மாட்டோம்? தமிழ்ப் படங்களில் நடிக்க வருவதற்கு முன் அர்னால்டு கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

* அர்னால்டு செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, லுங்கி கட்ட கற்றுக்கொள்ள வேண்டியது. இன்னைக்கு வர பத்து படங்களில் எட்டு படங்கள் கிராமத்துக் கதைகளாதான் இருக்கு. செம்மண் அள்ளிக்கொட்டிய ஒரு சட்டையும், சாகற வரை கழட்ட மாட்டேன் என்கிற சபதத்தோட சுத்தியிருக்கிற கைலியும்தான் கிராமத்து கேரக்டர்களின் காஸ்டியூமா இருக்கு. தமிழ்நாட்டுல அரசுப் பேருந்துகளுக்கு அப்புறம் அழுக்கா இருக்கிறது, இப்படி கிராமத்துப் படங்கள் என்கிற பேருல வர்ற படங்களின் கதாபாத்திரங்கள்தான். அதனால, இப்பவே ஆறு லுங்கிய வாங்கி அழுக்குப்படுத்தி அக்குள்ள வச்சுக்கிட்டா, மாசம் மூணு கிராமத்து படம் பண்ணிடலாம்.

* அடுத்ததா வெத்தலை பாக்கு போட கற்றுக்கொள்வது நல்லது. வாயில வெத்தலைய நல்லா குதப்பி ‘என்ரா, கொன்ரா’ பேசவும், அதை கைல இருக்கிற சொம்ப தவிர மத்த இடங்களில் புளிச் புளிச்னு துப்பவும் கத்துக்கிட்டா, மார்க்கெட் போற நேரத்துல, கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் நாட்டாமை வேஷம்,
கொத்துக்காரர் வேஷம்னு போட வசதியாயிருக்கும்.

* ‘திருடன் காவலுக்கு இருந்தா பொருள் காணாப்போறதும், கவாஸ்கர் கமென்ட்ரில இருந்தா டீம் வீணாப்போறதும் சகஜந்தானேப்பா’, ‘கம்ப்யூட்டர்ல கூகுள் குரோம் பிரவுசரா வரதும், அஞ்சான்ல சமந்தா டவுசரோட வரதும் சகஜந்தானேப்பா’, ‘வெயில்ல வச்சா தண்ணி ஹீட்டாகுறதும், திரிஷா கல்யாணம் லேட்டாகுறதும் சகஜந்தானேப்பா’ - இப்படி சம்பந்தமே இல்லாத நாலு வரிகள தெரிஞ்சு வச்சுக்கிட்டா, பிற்காலத்துல பம்பு செட்ட ஸ்டார்ட் பண்ணி விடுற மாதிரி, பஞ்சாயத்த ஸ்டார்ட் பண்ணி விடுற கேரக்டருங்கள செய்யலாம்.

* மன்சூர்அலிகான்ல இருந்து மொட்டை ராஜேந்திரன் வரை, டெரர் வில்லனா அறிமுகமாகி இப்ப பக்கா காமெடியன்களா எரர் ஆகிப்போனவங்க லிஸ்ட் ரொம்ப பெருசு. இன்னைக்கு தமிழ் சினிமாவுல காமெடிங்கிறது, குடிச்சுட்டு உளறுறதும், காட்டுக் கத்து கத்தறதும்தான்.

அதனால அர்னால்டு அவர்கள் நமது டாஸ்மாக் சரக்கை குடித்து பழகிக்கொள்ள வேண்டும். அதோடு, தான் காமெடிதான் பண்ணுறோம் என்கிற தன்னம்பிக்கை எண்ணத்துடன் காட்டுக் கத்து கத்த வேண்டும், டபுள் மீனிங்கோடு கத்தினால், டபுள் ஓகே. இதைத் தெளிவாக செய்தால், யார் படத்தில் சான்ஸ் இல்லாவிட்டாலும் ராஜேஷ் -

* அர்னால்டுக்கு ஆக்‌ஷன் கை வந்த, கால் வந்த கலை என்றாலும், பத்து கிலோ பவுடர முகத்துல கொட்டி பேயாகவும், அரை மணி நேரம் இட்லி குண்டான்ல வெந்து ஆவியாகவும் நடிக்கத் தெரியணும். ஏன்னா, இன்றைய தேதில புரொடியூசருங்களுக்கு லாபத்த தர்றது ரெண்டே வகை படங்கள்தான். ஒண்ணு பேய் படங்கள், இன்னொண்ணு, ‘ஏ’ சர்டிபிகேட் வாங்குன ஆய் படங்கள்.

* மத்த சினிமாக்களை கம்பேர் பண்றப்ப, நம்ம சினிமா எல்லாத்துக்கும் மேல. ஹீரோ ஜீப்புல வந்தாலும் விமானம் போற உயரத்தை விட மேல வருவாரு. ஹீரோயின் போடுற டிரஸ் எப்பவும் அவங்களோட முழங்காலுக்கு மேலதான் இருக்கும்.

நம்மாளுங்க நடிப்பு கூட இயல்புக்கு மேல. இதனாலதான் சொல்றோம், நம்ம தமிழ் சினிமா எப்பவும் கொஞ்சம் மேலதான் இருக்கும். இப்படிப்பட்ட தமிழ் சினிமாவுக்கு வரும் அர்னால்டு, கொஞ்சம் எக்ஸ்ட்ராவா அழுது வடிய கத்துக்கணும். ஏன்னா, பிற்காலத்துல ஆண்களை மையப்படுத்தி வரும் மெகா சீரியல்களில் நடிக்க வசதியா இருக்கும்.

நம்ம நாட்டுல, இப்பவெல்லாம் நைட்டு நேரத்துல பேய்க்கு பயப்படுறவங்கள விட நாய்க்கு பயப்படுறவங்க அதிகமாயிட்டாங்க. பத்து வருஷம் முன்னாடியெல்லாம் ஒவ்வொரு தெருவுலயும் குட்டிச்சுவரா தேடிப் பிடிச்சு, வயசுப் பசங்க ஊர் அடங்குன பிறகு உட்கார்ந்திருப்பாங்க. இப்பவெல்லாம் நல்ல முட்டுச்சுவரா பார்த்து அதுக்கு கீழ ஏழெட்டு நாய்ங்க வட்ட மேசை மாநாடு போட்டுட்டிருக்குதுங்க.

நைட்டு வாக்கிங் போலாம்னு போனவங்களை எல்லாம் வெறிகொண்டு துரத்தி ஜாக்கிங் போக வைக்குதுங்க. தெருல நாலு நாய்ங்க டிரான்ஸ்போர்டர் கார் மாதிரி உடம்பை வளைக்கிறதும், நம்ம அரவம் தெரிஞ்சாலே குரைக்கிறதும், அதுங்களுக்கு வணக்கம் வச்சு போனாக்கூட சைடா முறைக்கிறதும்... பத்து படம் ப்ளாக்பஸ்டர் கொடுத்த ஹீரோ கூட இம்புட்டு பில்டப் கொடுக்க மாட்டான், இதுங்க நடத்துதுங்க.

நைட்டு செகண்ட் ஷோ பார்த்துட்டு சொந்த தெருவுக்குள்ள நுழையறவனைக்கூட ஏதோ பாகிஸ்தான் பார்டர்ல பந்து விளையாடப் போன மாதிரி துரத்தித் துரத்தி நொந்து போகச் செய்யுதுங்க. அம்பர்லா புடிக்கிறளவு அடைமழை பெய்யுற ஐப்பசி மாசத்துலயே இந்த வாங்கு வாங்குதுங்கன்னா, அன்டைம்ல அனார்கலிய தேடிப் போற மார்கழி மாசத்துல நம்மளை மூன்றாம் உலகப் போருக்குக் கூப்பிட்டாலும் கூப்பிடுங்க. தெரு நாய ஐஸ் வைக்க டைகர் பிஸ்கட் வாங்கிப் போட்டே கடனாளி ஆனவங்க ஊருக்கு ஆயிரம் பேரு இருக்காங்களாம்.

கவர்மென்ட் கருத்தடை பண்ணிப் பார்த்துருச்சு, கார்ப்பரேஷன் கடத்திக்கிட்டுப் போய் பார்த்துடுச்சு, பட்டினியோட போனதெல்லாம் ‘பாகுபலி’ மாதிரி திரும்பி வந்துடுச்சுங்க. இங்கதான் நம்ம ஐடியாவ யூஸ் பண்ணச் சொல்றோம். ஒருத்தர திருத்தி நம்ம வழிக்கு கொண்டு வர்றத விட, ஒருத்தர கெடுத்து நம்ம வழிக்குக் கொண்டு வந்துடலாம். இந்த தெரு நாய்ங்களுக்கு எல்லாம் குடிக்க கத்துக்கொடுத்துட்டா, நைட்டு டாஸ்மாக் பூட்டுற நேரத்துக்குள்ள குடிச்சுட்டு கவுந்துறாது?

நாலு வயசு குழந்தைக்கு  ஊத்திவிட்டு, அந்த வீடியோவ வாட்ஸ் அப்ல  விடுற நாடு இது... நன்றியுள்ள உயிரினத்துக்கு நாலு சொட்டு இலவசமா ஊத்தாது? நாலு காலா இருந்தா என்ன, ரெண்டு காலா இருந்தா என்ன, பைசாவ வாங்கிக்கிட்டு பாட்டில் தரும் தேசம்தானே இது? குடிச்சவனே போதையில நாலு காலுலதான் வீட்டுக்குப் போறான், நாலு காலு மிருகங்கள் குடிச்சுட்டு ரோட்டுக்குக் கூட போகக் கூடாதா? இப்படிப்பட்ட ஐடியாவ சொன்னா நம்மள....

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்