ஆச்சி... ஆர்ப்பரித்த அருவி!



திரையுலகில் 57 ஆண்டுகள் இயங்கிய ஒரு தேர்ந்த நடிகை. ஆர்ப்பரித்த அருவி ஓய்ந்துவிட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? ‘கண் திறந்தது’ படத்து கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதன்தான் மனோரமாவின் கணவர். பூபதியின் தகப்பனார். மிகையான நடிப்பியல்பு கொண்ட நடிகர். கண்ணதாசனின் ‘கறுப்புப் பணம்’ படத்தில், ‘தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன ஆடுது...’ என்ற சீர்காழி பாடலுக்கு இவர்தான் நடித்தார்.

பிரிந்துவிட்ட தம்பதியை மீண்டும் இணைத்து வைக்க சிலர் முயன்றபோது ராமநாதன் சொன்னார் - ‘‘உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாது!’’ ‘ஆச்சி’ என்பார்கள். திரையுலகில் எல்லோரும் ‘‘அக்கா... அக்கா...’’ என்பார்கள். ஆனால் நான் அவரை அப்போது ‘‘அம்மா’’ என்றுதான் அழைத்திருக்கிறேன்.

 கோபிச்செட்டிப்பாளையத்தில் சாப்பிட்டு முடித்து வாக்கிங் போய்விட்டு ஹோட்டலுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது மற்றொரு படத்தில் நடிக்க வந்திருந்த மனோரமா அந்த வழியே காரில் திரும்பிக்கொண்டிருக்கிறார். அந்த இருட்டிலும் என்னை அடையாளம் கண்டு, ‘‘என்னப்பா... காரில் ஏறிக்கங்க’’ என்று அன்போடு சொன்னார். இதுதான் ஆச்சி!

கமல்ஹாசன் தன் முதல் மகள் ஸ்ருதி பிறந்த சமயம், ‘‘பிரசவத்தின்போது மனோரமாவை கூப்பிட்டிருந்தால் சரிகாவிற்கு ஒத்தாசையாக இருப்பதற்கு நிச்சயம் வந்திருப்பார்’’ என்று சொன்னது அதனால்தான். ஒரு துணை நடிகைக்கு டப்பிங் பேச வந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டின் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருப்பார். தன் வேர்களை மறக்காத எளிமை. ஆனால் தற்பெருமை, கர்வம், அகந்தை கொண்ட Egoist கதாபாத்திரத்தை மனோரமா போல சிறப்பாக யாராலும் செய்ய முடிந்ததேயில்லை.

எம்.ஜி.ஆர் பற்றி, ‘‘எங்கண்ணன் குரல் வெங்கல மணி அடிச்ச மாதிரி கணீர்னு இருக்கும். 1950களில் ஒரு தடவை வாணி மஹால்ல நான் எங்கம்மாவோட  நுழையிறேன். எங்கண்ணன் பேசிக்கிட்டிருந்தாரு. அப்படி கணீர் கணீர்னு வெங்கல மணிக்குரல். அப்புறம் குண்டடி பட்டு ‘காவல்காரன்’ படத்தில அவரு, ‘பாழ்த்தேன் சுசிலா பாழ்த்தேன்’னு பேசினதக் கேட்டுட்டு அப்படி அழுதேன்யா..!’’ என்று தழுதழுத்து என்னிடம் சொன்னார்.

மனோரமா ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். ஏதேனும் ஒரு படத்தில் அவர் பேசிய ஒரு டயலாக்கின் ஓரிரு வரி சொன்னால் மீதியை உடனே ‘டாண்’ என்று சொல்வார். ஒரு தடவை டப்பிங் தியேட்டரில் அப்போதைய சூழ்நிலை ஒன்றிற்கேற்ப, பழைய படம் ஒன்றில் அவர் நாகேஷைப் பார்த்து சொன்ன டயலாக்கான ‘கண்ணு சரியில்ல... மூக்கு சரியில்ல... வாய் சரியில்ல... எதுவுமே சரியில்ல...’ என்பதை நான் சொல்லும்போதே மனோரமா ‘அதனாலதான் சொல்றேன். இந்தாளுதான் என் புருஷன்!’ என்று முடித்து அந்தக் கால நினைவில் மூழ்கி சிரித்தார்.

அவரிடம் இருந்த Frankness! அடடா, இவரால் எப்படி இந்த ஓட்டைவாய்த்தனத்தோடு சினிமாவுலகில் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடிந்தது? ‘‘சிவாஜிக்கு மனுஷ வாடையே ஆகாது. அவரை நோக்கி ஆர்வமா ரசிகர்கள் பரவசமா வரும்போது ‘டேய்! அவனுங்கள அப்படியே கொண்டு போயிடுங்கடா... என்கிட்ட வர விட்டுடாதீங்க...’னு பதறிடுவாரு!’’ - இது மனோரமா.

முறையான கல்வி பெற்றிடாத மனோரமா ஒரு ஜீனியஸ். ஏவி.எம்மில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படத்தில் டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு லூப் பேசி முடித்தவுடன் லைட் போட்டபோது அங்கு வந்திருந்த எழுத்தாளர் சுஜாதாவைப் பார்த்து அதிர்கிறார். ‘‘சார்! நீங்க இங்க ஒக்காந்திருக்கறது தெரிஞ்சிருந்தா நான் நிச்சயமா டப்பிங் ஒழுங்கா பேசியிருக்க மாட்டேன்!’’ என்றார். சுஜாதா சொன்னார், ‘‘உங்களுக்கு ஒரு பெரிய எழுத்தாளருக்குள்ள தகுதி இருக்கும்மா. சமீபத்துல ‘திருமலை தென்குமரி’ படம் பார்த்தேன். அதில் நீங்க பண்ணியிருந்ததெல்லாம் ஒரு ரைட்டருக்குள்ள அப்சர்வேஷன்!’’

எத்தனையோ படங்களில் நடித்து இமயம் தொட்ட மனோரமா தன்னுள் இருந்த ‘இயல்பான மனுஷி’யை இழந்ததேயில்லை. நான் பணிபுரிந்த ஒரு படத்தில் ஒரு புதிய நடிகை கொஞ்சம் அலட்டலாக இருந்தார். தன்னைப் பற்றி அதீத பிரமை அவரிடம் இருந்தது. படம் முடியும்போது, ‘வணக்கம்’ எழுத்து தன் மீது விழுந்தால் நன்றாக இருக்கும் என்ற  தன் ஆசையை அந்த நடிகை வெளிப்படுத்தினார். இதை மனோரமா கேள்விப்பட்டபோது கொந்தளித்து விட்டார். தன்னுடைய அந்தஸ்துக்கு கால் தூசு பெறாத அந்த சாதாரண நடிகை மீதான கோபத்தை உடனே வெளிப்படுத்திவிட்டார். ‘‘அவளுக்கு நினப்ப பாரு. என்ன திமிரு..?’’

எஸ்.எஸ்.ஆர் நாடகக் கதாநாயகியாக ஆரம்பித்து, கண்ணதாசனின் ‘மாலையிட்ட மங்கை’யில் காக்கா ராதாகிருஷ்ணனுடன் அறிமுகமாகி, மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் மறையுமுன் கடைசியாக இயக்கிய ‘கொஞ்சும் குமரி’யில் ஆர்.எஸ்.மனோகருடன் கதாநாயகியாக நடித்தார் மனோரமா. பின் நகைச்சுவை நடிகையாக சீனியர்கள் கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி என ஜோடி சேரத் துவங்கி, பிரமாதமாக நாகேஷுடன் கொடி கட்டிப் பறந்து, பின் சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி என்று எத்தனையோ சிரிப்பு நடிகர்களுடன் கலக்கியவர்.

நீண்ட காலமாக ஒரு வேலையைச் செய்யும்போது ஒரு செக்கு மாட்டுத்தனம் வந்துவிடும். ஆனால் ஆச்சியின் நடிப்பில் அது கிடையாது என்பது விசேஷம். அதோடு அவர் திரையில் பாடிய நடிகை. அந்தப் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். ‘வா வாத்தியாரே ஊட்டாண்டே...’‘பாடணும்னு மனசுக்குள்ளே ஆச நிறைய கீது’
‘தெரியாதோ நோக்கு தெரியாதோ’‘டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’

வெளிப்புற படப்பிடிப்பில் கலந்துகொள்ள மேக்கப்புடன் காரிலிருந்து இறங்குவார். சுற்றிலும் கூடியுள்ள ஜனங்கள் ‘மனோரமா’ என்று முகமலர்ந்து சொல்லும்போது சுற்றிலும் பார்த்து பெருமையாக சிரிப்பார்.

கிராமத்து ஜனக்கூட்டத்தின் ஆரவாரம் அப்போது கூடும்!அவருக்கு அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா... என தமிழக முதல்வர்களாக இருந்தவர்கள், இருப்பவருடனான பாசமிக்க பிணைப்பு பற்றிய பெருமிதம் நிறைய உண்டு. கல்யாணச்சாவுகளாக நிறைய பார்த்தாகிவிட்டது. ‘ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது’ என்ற வார்த்தை Cliche! அதற்கு மேலே...நீண்ட காலமாக ஒரு வேலையைச் செய்யும்போது ஒரு செக்குமாட்டுத்தனம் வந்து விடும். ஆனால் ஆச்சியின் நடிப்பில் அது கிடையாது என்பது விசேஷம்.

படங்கள் உதவி: ஞானம்