தமிழ்நாட்டில் சீரழியும் உயர்கல்வி
அலட்சிய அரசு அவதியில் மக்கள்
‘‘ஸ்வீப்பர் வேலையில இருந்து துணைவேந்தர் வேலை வரைக்கும் எல்லாத்துக்கும் பணம்... துறைக்கு சம்பந்தமே இல்லாத கட்சிக்காரங்கள்லாம் ‘வேலை வாங்கித் தாரேன்’னு ஊருக்குள்ள பணம் வசூல் பண்றாங்க. உதவிப் பேராசிரியர் வேலை வாங்கித் தாரேன்னு புதுக்கோட்டை மாவட்டத்துல நிறைய பேர்கிட்ட தலா 10 லட்ச ரூபாய் வரைக்கும் வசூல் பண்ணியிருக்காங்க.
மாணவர்களோட வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது உயர்கல்விதான். அதை மேம்படுத்தி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய அரசு, கட்சிக்காரங்களோட வசூல்வேட்டையைத் தடுக்காம அவங்களைப் பாதுகாக்கிறதும், தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கிறதும் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் துரோகம்...’’ - ஆவேசமாகப் பேசுகிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் உச்சிமாகாளி.
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக உயர்கல்வித்துறையில் ஊழலும், முறைகேடுகளும் புரையோடி விட்டதாக களப்பணியாளர்களும் கல்வியாளர்களும் குமுறுகிறார்கள். ‘அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவித்து மக்களின் உயிரையும் உழைப்பையும் உறிஞ்சுகிறது அரசு’ என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. உயர்கல்வி முடித்த இளைஞர்கள் வேலைக்காக அலைகிறார்கள். நேர்காணல் அரங்குகள் நிரம்பி வழிகின்றன. நம்பிக்கையோடு உள்நுழையும் மாணவர்கள் சோர்வாலும், தாழ்வு மனப்பான்மையாலும் தாக்குண்டு இருண்ட முகத்தோடு வெளியில் வருகிறார்கள். ‘ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும்’ என்று படிப்புக்குத் தொடர்பில்லாத வேலைகளில் அரை மனதோடு அமர்கிறார்கள். இன்னொரு பக்கம், கேம்பஸ் இன்டர்வியூ என்ற பெயரில் நிறைய பித்தலாட்டங்கள் அரங்கேறுகின்றன. வேறு வழியில்லாமல் போட்டித் தேர்வுகளை நாடுகிறார்கள் இளைஞர்கள். 500 இடங்களுக்கான போட்டியில் 5 லட்சம் இளைஞர்கள் தேர்வு எழுதக் குவிகிறார்கள்.
ஊருக்கு ஊர் தனியார் கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளிக்கிற அரசு, வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த முனைப்பும் காட்டவில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். விளைநிலங்கள் எங்கும் கல்வி நிறுவனங்களே முளைத்திருக்கின்றன. எவ்வித உள்கட்டமைப்பும் இல்லாமல், தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமல், ஆய்வகங்கள் இல்லாமல், மாணவர்களிடம் பணத்தைப் பிடுங்குவது மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன பெரும்பாலான தனியார் கல்லூரிகள். படிப்ைப முடித்துவிட்டு எதிர்காலம் புரியாமல் தவித்து நிற்கிறது இளைஞர் சமுதாயம்.
கடந்த 4 ஆண்டுகளில் 146 தனியார் பொறியியல் கல்லூரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு கண்டறிந்துள்ளது. அக்கல்லூரிகளின் பட்டியலை இணையத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்த வேண்டிய அண்ணா பல்கலைக்கழகம், அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அக்கல்லூரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசும் அமைதி காத்து, கல்வித் தந்தைகளைக் காப்பாற்றுகிறது. இதுபோன்ற சூழலால் 1.98 லட்சம் பொறியியல் பட்டதாரிகளும், 1.87 லட்சம் பொறியியல் முதுநிலை பட்டதாரிகளும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உண்டு. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் உள்பட 22 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதேநேரம் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை தனியார்தான் நடத்துகிறார்கள். தவிர, நூற்றுக்கணக்கான தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் செயல்படுகின்றன.
அரசுக் கல்லூரிகளில் மிகக் குறைந்த இடங்களே இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் தனியார் கல்லூரிகளையே தஞ்சமடைகிறார்கள். தனியார் கல்லூரிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு ஏகமாக பணம் பிடுங்குகின்றன. அரசுக் கல்லூரிகளில் இடங்களை அதிகப்படுத்த வேண்டிய அரசு, தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாகச் செயல்படுவதாக கல்வியாளர்கள் வருந்துகிறார்கள்.
‘‘பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. பல கல்லூரிகளில் கட்டிட வசதிகள், சோதனைக்கூட வசதிகள் கூட இல்லை. இதுபற்றி ஆராய்ந்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு மதிக்கவேயில்லை. அதேபோல, அரசுக் கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அரசு செவி சாய்க்கவில்லை.
தனியார் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்க, அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசிடம் திடமான அமைப்பு இல்லை. கவுன்சிலிங் நடத்தி இடம் பெற்றுத் தருவதோடு அரசின் கடமை முடிந்து விடுகிறது.
அதன்பிறகு மாணவர்கள் படும்பாடு பற்றி அரசுக்கு அக்கறையில்லை. பெரும்பாலான தொடக்கக் கல்வி, உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணம் வரையறை இல்லாமல் வசூலிக்கப்படுகிறது. அரசு போடுகிற குழுக்கள் தீர்மானிக்கும் கட்டணம் என்பது வெறும் ஏட்டளவில்தான். பல தனியார் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.
ஒழுக்கம் என்ற பெயரில் கடும் அடக்குமுறைகளை மாணவர்கள் மீது ஏவி மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். வளாகங்களிலேயே வன்முறைகள் நடக்கின்றன. காவல்துறை மாணவர்களை மிக மோசமாகக் கையாள்கிறது. கல்லூரிகளில் ஜனநாயகபூர்வமாக மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தினால் இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க முடியும். லிங்டோ கமிஷன் உள்பட உயர்கல்விக்காக நியமிக்கப்பட்ட பல குழுக்கள் மாணவர் பேரவைத் தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. ஆனால் உயர்கல்வித்துறை மௌனம் காக்கிறது.
அதேபோல உயர்கல்வி நிறுவனங்களில் கலை, விளையாட்டுக்களுக்கு சிறிதும் இடமளிப்பதில்லை. குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை மிகவும் இறுக்கமாக நடத்துகின்றன. ஜனநாயகபூர்வமாக அவர்களை வழிநடத்துவதில்லை...’’ என்று குற்றம் சாட்டுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. அண்ைமயில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை, தமிழகத்தின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்தியாவில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட மக்கள்தொகை அடிப்படையில் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள இந்திய மாநிலங்களில் தமிழகத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் 1 லட்சம் பேருக்கு 35 கல்லூரிகள் இருக்கின்றன. ஆந்திராவில் 48 கல்லூரிகளும், கர்நாடகாவில் 44 கல்லூரிகளும், கேரளாவில் 34 கல்லூரிகளும் புதுச்சேரியில் 61 கல்லூரிகளும் உள்ளன.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு வெறும் 33 கல்லூரிகள்தான். அரசுக் கல்லூரிகள் எண்ணிக்கையிலும் பெரிதும் பின்தங்கியிருப்பது தமிழகம்தான். தென் இந்தியாவிலேயே அதிக தனியார் உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். ஆந்திராவில் 419 அரசுக் கல்லூரிகள் உள்ளன. கர்நாடகாவில் 600 அரசுக் கல்லூரிகளும் மகராஷ்டிராவில் 721 அரசுக் கல்லூரிகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 314 அரசுக் கல்லூரிகள் மட்டுமே உண்டு. ஏழை, எளிய குடும்பத்துப் பிள்ளைகள் கல்விக்கடனை வாங்கி தனியார் கல்வி நிறுவனங்களில் கொட்டிக் கொடுத்தே படிக்க வேண்டியிருக்கிறது.
‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை உயர்கல்வித்துறை பணம் காய்ச்சி மரமாகத்தான் இருக்கிறது. எந்த அரசு வேலையும் பணம் கொடுக்காமல் கிடைக்காது என்ற நிலைதான். எந்தக் கல்லூரியில் போஸ்டிங் போடப்போகிறார்கள் என்று தெரிந்து கொண்டு அங்கே வசூல் வேட்டையைத் தொடங்கி விடுகிறார்கள். இதை அரசு கண்டும் காணாமலும் இருக்கிறது.
இந்த சூழலை மறைப்பதற்காக அவ்வப்போது டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தி கொஞ்சமாக ஆள் எடுக்கிறார்கள். பணி நியமனத்தில் சிறிதும் வெளிப்படைத் தன்மை இல்லை. பணம் கொடுத்து வேலையில் சேரும் ஒரு பேராசிரியர், மாணவர்களுக்கு சேவை செய்ய நினைப்பாரா? போட்ட பணத்தை எடுக்க முனைவாரா? இதுபோன்ற தவறுகளைக் களைந்து உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டிய அரசு மௌனமாக இருந்து எல்லாத் தவறுகளையும் ஊக்குவிக்கிறது...’’ என்கிறார் உச்சிமாகாளி.
உலகில் வேறெங்கும் இல்லாத இளைஞர் வளம் இந்தியாவில் இருக்கிறது. சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா போன்ற இளைஞர்கள் உலகின் மிக பிரமாண்ட நிறுவனங்களில் உச்ச பொறுப்புகளில் இருக்கிறார்கள். எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் வல்லமை தென்னிந்தியாவுக்கே இருக்கிறது என்று கணிக்கிறார்கள் உலக வல்லுனர்கள்.
ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் 35 சதவீதத்துக்கு மேல் ஆந்திர மாணவர்களே நிறைகிறார்கள். அம்மாநிலத்தின் கல்வித்தரத்திலும், உள்கட்டமைப்புகளிலும், நிர்வாகங்களிலும் அரசு துளியளவும் சமரசம் செய்து கொள்வதில்லை. அந்த அக்கறை தமிழக அரசுக்கு இல்லை என்பதுதான் கல்வியாளர்களின் குற்றச்சாட்டு. தமிழகத்தின் எதிர்காலம் கவலையளிக்கிறது.
நேர்காணல் அரங்குகள் நிரம்பி வழிகின்றன.நம்பிக்கையோடு உள்நுழையும் மாணவர்கள் சோர்வால் தாக்குண்டு இருண்டமுகத்தோடு வெளியில்வருகிறார்கள்.அரசுக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. பல கல்லூரிகளில் கட்டிட வசதிகள், சோதனைக்கூட வசதிகள் கூட இல்லை.
- வெ.நீலகண்டன்
|