கத்துக்குட்டி



ஒரு கிராமியக் கதைக்குள் மக்களின் வாழ்வியலோடு அரசியல் பேசி, அதையும் அழகியலோடு பேசுபவனே ‘கத்துக்குட்டி’.சலசலவென புரண்டோடும் காவிரியின் ஆற்றுப்படுகையில் விவசாயம் செய்து கூடி வாழும் மக்களின் சகல பரிமாணங்களையும் கொண்ட கதை.

மீத்தேன், ரியல் எஸ்டேட், ரசாயனக் கலப்பு, விவசாயி தற்கொலை, மது, அரசியல் உள்குத்து என பரபர அத்தியாயங்களை பிரசார நெடி தவிர்த்து காட்டிய வகையிலும், இப்படி ஒரு களத்தைக் கண்டெடுத்த தினுசுக்காகவுமே அறிமுக இயக்குநர் இரா.சரவணனுக்கு பாராட்டுகள்!

படித்துவிட்டு, விவசாயமே மூச்சு என திரிபவர் நரேன். அவருடைய நிழலாக சூரி. இரண்டு பேரும் கூட்டு சேர்ந்ததில் கிடைத்தது கெட்ட பெயர் மட்டுமே. ஒரு திருப்பத்தில் நரேனின் அப்பாவிற்குக் கிடைக்க வேண்டிய தேர்தல் வாய்ப்பு நரேனுக்கு வருகிறது. இதற்கிடையில் மீத்தேன் பரிசோதனையைத் தடுக்கும் ஒரு விவசாயியின் தற்கொலை, நரேன் மீது பழியாக விழ... அதிலிருந்து அவர் தப்பினாரா என்பதே படம்.

தமிழில் மிஷ்கினின் கண்டுபிடிப்பு நரேன். கிராமியக் கதாபாத்திரத்தில் செம ஸ்கெட்ச் அடித்திருக்கிறார். வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, துளி பில்டப் இல்லாமல் அறிமுகமாகிறார். ‘‘உன் வலிக்கு ஒரு மாத்திரை போட்டா சரியாகிடும். ஆனால், என் மண்ணை மாத்துறதுக்கு என்ன மாத்திரை சார் இருக்கு?’’ என ஆவேச அனல் கொட்டுவது, ‘‘சாப்பிட வழியில்லாம சாகுறதுக்குப் பேரு பட்டினிச் சாவு இல்லடா, நாலு பேருக்கு சாப்பாடு போட வழியில்லாமப் போச்சேனு நினைச்சு சாகுறோம் பாரு... அதான் பட்டினிச் சாவு’’ என நரேன் காட்டுவது ஆல் ரவுண்ட் அசத்தல்.

கிட்டத்தட்ட இன்னொரு அல்ல... இணை நாயகன் சூரியே! சாருக்கு இது செம சிக்ஸர் சினிமா. சூரியின் அலம்பல் காமெடிக்கு, லாரியை மடக்குகிற காட்சியே ஒருசோற்றுப்பதம். காது வளர்த்த பாட்டிக்கும் சூரிக்கும் நடக்கும் வார்த்தை மோதலில் தியேட்டரே அலறுகிறது சாமி! அந்தச் சமயமெல்லாம் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி ஒன் மேன் ஷோ ஆக்கி விடுகிறார் சூரி.

அசத்தல் பாந்தமாக, சாந்தமாக, கிறக்கமாக, தீர்க்கமாக வசீகரிக்கிறார் ஸ்ருஷ்டி டாங்கே. அந்தக் கன்னக்குழியை ஸ்ருஷ்டித்த பிரம்மனையும் நினைக்க வைக்கிறார். விவசாயப் போராளியாக ராஜா தற்கொலை செய்துகொள்வது உறைய வைக்கிற நெகிழ்ச்சி. நரேனின் அப்பா ஜெயராஜ், பாந்த நடிப்பில் ஈர்க்கிறார். மாவட்டச் செயலாளர் ஞானவேல் நடுரோட்டில் போடுகிற குத்தாட்டம் துறுதுறு... கலகல.

கவிஞர் விக்ரமாதித்தனின் வாரிசு சந்தோஷ், கவிஞனாவதற்கு பதில் கேமரா கலைஞன் ஆகிவிட்டார். தஞ்சையின் பசுமைப் பரப்பிலாகட்டும், பரபரப்பு நிமிடங்களில் ஆகட்டும், உணர்வைக் கடத்துகிறது ஒளிப்பதிவு. ‘களக்கட்டு கண்ணாலே’ பாட்டுக்கு அருள்தேவின் இசை, முத்து.

பட்ஜெட்டில் கட்டிப் போட்டதால், பரபரப்பு + பிரமாண்டமாக வந்திருக்க வேண்டிய பிரசாரங்கள் சரிவர எடுபடவில்லை. தேர்தல் மூடு மிஸ்ஸிங் சாரே! குடிக்காட்சிகள் படத்தின் குறைதான். சமூக அக்கறையில் வந்த படைப்புக்கு, இந்த சரக்கு, சைடுடிஷ் எல்லாம் எதற்கு? கதையில் இருக்கும் நேர்த்தி, மேக்கிங்கில் குறைந்தாலும், விவசாய ஜீவன்களின் மனசாட்சியாக நின்ற விதத்தில்... வாழ்வியலை பொய் இல்லாமல், காமெடி கோட்டில் கொடுத்த வகையில்...
‘கத்துக்குட்டி’ கருத்துக்குட்டி!

- குங்குமம் விமர்சனக் குழு