திருப்பித் தரப்படும் சாகித்ய விருதுகள்...



சகிப்புத்தன்மைக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் பெயர்போன நாடாகக் கொண்டாடப்படுகிறது இந்தியா. உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் படைப்பாளிகள் அடைக்கலம் கேட்டு இங்குதான் வருவார்கள். ஆனால், இந்தியாவின் அண்மைக்கால முகம் கொடூரமாக மாறத் தொடங்கியிருக்கிறது.

எழுத்தாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்களையும், மாற்றுக் கருத்துக்களையும் ஆயுதத்தால் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் சமூக விரோதிகள். சமூக ஆர்வலர்களும் பகுத்தறிவுவாதிகளுமான தபோல்கர், கோவிந்த் பன்சாரே, சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் கல்புர்கி  ஆகியோர் துள்ளத் துடிக்கக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பல அமைச்சர்களும், இந்துத்துவ அரசியல்வாதிகளும், வலதுசாரி அறிவாளிகளும் எழுத்தாளர்களுக்கு எதிரான வன்முறைகளை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்திய எழுத்தாளர்களைப் பிரதிநிதித்து வப்படுத்தும் சாகித்ய அகாடமி அமைப்பு, இந்த மரணங்களைக் கண்டு மௌனித்துக் கிடக்கிறது.

இந்த மௌனத்தைக் கண்டித்தும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கோட்பாட்டிலிருந்து இந்தியா வழுவுவதை எதிர்த்தும் 10க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதைத் திருப்பியளித்து எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். சாகித்ய அகாடமியின் நிர்வாகிகளும் பதவியிலிருந்து விலகுகிறார்கள்.

இப்படி வட இந்திய எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வரும் நிலையில், தமிழகத்தின் விருதுபெற்ற எழுத்தாளர்கள் வெறும் எதிர்ப்பு அறிக்கையோடு தங்கள் கடமையை முடித்துக்கொண்டு முடங்கி விட்டதாக பலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
இந்த விமர்சனத்தை படைப்பாளிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

“கல்புர்கி, சாகித்ய அகாடமியின் விருது பெற்றவர் மட்டுமல்ல... அந்த அமைப்பின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தவர். சில மாதங்களுக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். மதவாதிகளின் போக்கை விமர்சித்துப் பேசியதாலும், எழுதியதாலும் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சாகித்ய அகாடமி அமைப்பு குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கையைக் கூட வெளியிடவில்லை.

சாகித்ய அகாடமிக்கு இருவிதமான பொறுப்புகள் உண்டு. தகுதியான படைப்பாளிகளை அங்கீகரித்து மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்ப்பது, படைப்பாளிகளின் மனசாட்சியாகச் செயல்படுவது.

இரண்டாவது பொறுப்பை அது சரியாகச் செய்யவில்லை. கல்புர்கியின் மரணம், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கடுமையாகக் கண்டித்து அரசுக்கு நெருக்கடி தந்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. அதனால் அந்த அமைப்பின் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள். விருதுகளைத் திருப்பித் தருவது ஒரு எதிர்ப்பு நடவடிக்கை.

இது வரவேற்கத்தக்கது. ஆனால் விருதைத் திருப்பித் தருவது மட்டுமே எதிர்ப்பல்ல. அதற்கு பல்வேறு வடிவங்கள் உண்டு. தமிழகத்தைச் சேர்ந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற 17 எழுத்தாளர்கள் அகாடமியின் நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளோம். மேலும் அனைத்துப் படைப்பாளிகளையும் ஒருங்கிணைத்துப் போராடவும் முடிவெடுத்திருக்கிறோம்.

இது எங்களின் போராட்ட வடிவம். விருதுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்கிற விமர்சகர்களின் குரல் பொருளில்லாதது. விருதைத் திரும்பக் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அவர்களின் குரல் மாறி மாறி ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்...’’ என்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன்.

‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன், ‘‘விருதுகளைத் திருப்பி அளிப்பது வெளிப்படையான விளம்பர அரசியல்’’ என்கிறார். ‘‘எழுத்தாளர்கள் எதிர்ப்பை சமூகத்தோடு சேர்ந்து முன்வைக்க வேண்டும். அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்கி ஊடக கவனத்தைப் பெறுவதற்காக விருதைத் திருப்பி அளிப்பதாகச் சொல்வது பிரச்னையின் மையத்திலிருந்து கவனத்தை திசை திருப்பி விடும்...’’ என்கிறார் அபிலாஷ்.

‘‘விருதுகளைத் திரும்ப ஒப்படைப்பது அநீதிக்கு எதிரான ஒரு எதிர்ப்புச் செயல்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது எந்த விதத்திலும் அரசை அசைக்கப்போவதில்லை. மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்வதைப் போல சலசலப்பை உருவாக்குகிற நிகழ்வாகவே அது இருக்கும். இது ஒருவிதமான நஷ்டமே இல்லாத அரசியல் விளையாட்டு. தற்காலிகமான போராட்ட வடிவம். சாகித்ய அகாடமி என்பது அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் வருகிற அமைப்பல்ல.

பெரும்பாலும் இடதுசாரிகளே அதில் பங்களிக்கிறார்கள். ஆளுங்கட்சிகள் எந்தக் காலத்திலும் அந்த அமைப்பைக் கட்டுப்படுத்த நினைத்ததில்லை. காரணம், அதன்மூலமாக அவர்களுக்கு ஓட்டுக்களோ வேறுவிதமான ஆதாயங்களோ கிடைக்கப்போவதில்லை. அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக உணர்வுகளை வெளிக்காட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகள் எப்போதும் விரும்பியதில்லை.

ஆனால் கல்புர்கி உள்ளிட்டோர் படுகொலை பற்றி அந்த அமைப்பு பேசியிருக்கத்தான் வேண்டும். அதற்கு அழுத்தம் கொடுப்பது வேறு. பேரணி, ஊர்வலம், உண்ணாவிரதம் என அதற்கு பல்வேறு வடிவங்கள் உண்டு. மாறாக விருதுகளைத் திரும்ப ஒப்படைப்பது என்பது இரு மடங்கு புகழைப் பெறுவதற்கான வழி. அரசுக்கும், அகாடமிக்கும் அழுத்தம் தருவதற்குப் பதிலாக சுய தம்பட்டமாக, கவனத்தை ஈர்ப்பதாகவே அது அமைகிறது...’’ என்கிறார் அபிலாஷ்.

‘‘தமிழகப் படைப்பாளிகள் தங்கள் சாகித்ய விருதுகளைத் திரும்ப அளிக்க வேண்டும் என்பது அர்த்தமற்ற கோரிக்கை...’’ என்பதே எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் கருத்துமாக இருக்கிறது.‘‘தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் இல்லை. நடிகர்களையும், நடிகைகளையும் கொண்டாடும் தமிழர்கள், எழுத்தாளர்களை மதிப்பது கூட இல்லை. எழுத்தாளர்கள் இங்கே அனாதைகளாகத்தான் இருக்கிறார்கள்.

பிறகு எந்த தார்மீக அடிப்படையில் விருதுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்’’ என கேள்வி எழுப்புகிறார் சாரு நிவேதிதா. ‘‘பி.ஜே.பி. சார்ந்த வலதுசாரி சிந்தனையாளர்கள் புத்திஜீவிகளுக்கு எதிரானவர்களாகவே இருக்கிறார்கள். அந்த அத்துமீறல்கள் முடிவு கட்டப்பட வேண்டும்’’ என்றும் வலியுறுத்துகிறார் அவர்.

‘‘விருதுகளைப் புறக்கணிப்பது ஒரு போராட்ட வழிமுறை. அரசுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டவே எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திரும்ப அளிக்கிறார்கள். இங்கு அரசியல் சார்ந்த எழுத்தாளர்கள் உண்டு; அரசியல் சாராதவர்களும் இருக்கிறார்கள். அரசியல் சார்ந்தவர்களின் போராட்ட வடிவம் வேறுபட்டதாக இருக்கிறது. அதற்காக மற்றவர்களும் விருதை திருப்பித் தர வேண்டும் என்று கேட்பதும் வசைபாடுவதும் நியாயமில்லை.

ஒரு அரசு சார்ந்த நிறுவனம், ஒரு நடுவர் குழுவின் மூலம் விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்கிறது. மக்கள் பிரதி நிதிகளால் விருது வழங்கப்படுகிறது. விருதோடு தரப்படுகிற தொகை மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் வருகிறது. எனவே இந்த விருதானது இந்திய மக்கள் அளிக்கிற அங்கீ காரம். இலக்கியவாதிகளை அவமதிக்க வாய்ப்புத் தேடுபவர்கள் இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு வசைபாடுகிறார்கள்...’’ என்கிறார் ஜெயமோகன்.

எழுத்தாளன், தேசத்தின் கண்ணாடி. தன் எழுத்தின் மூலம் அவன் சமூகத்தைப் பிரதிபலிக்கிறான். எந்த தேசத்தில் எழுத்தாளர்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் இருக்கிறார்களோ, அதுவே மனித உரிமையை மதிக்கும் தேசம். ஆனால் இந்தியாவில் உரிமைக்கும், நியாயத்துக்கும் குரல் கொடுப்பவர்கள் படுகொலை செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்கிறது. இது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும்.

- வெ.நீலகண்டன்