மேஷ லக்னத்துக்கு செவ்வாயும் சனியும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 9

பொதுவாகவே செவ்வாயும் சனியும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் அவர்கள் ரசவாதம், மூலிகைகளின் மருத்துவ குணங்களை அறிதல், கல்வெட்டு மற்றும் அகழ்வாராய்ச்சி, சுரங்கங்கள் தோண்டுதல் என இருப்பார்கள் என்று ஜோதிட நூல்கள் பேசுகின்றன.

தற்காலப் பலன்களின்படி கிரானைட் குவாரி, நிலக்கரிச் சுரங்கம் என இவர்களின் தொழில் அமையலாம்.  ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த சேர்க்கைதான் மிகவும் கடினமானதும், சவால்கள் மிக்கதும் ஆபத்தானதும் ஆகும். ஏனெனில், இவை இரண்டும் சேருவதென்பது முரண்பாடுகளின் முழுத் தொகுப்பாகும். நந்தி வாக்கியம், பிருஹத் ஜாதகம், உத்தரகாலாமிர்தம் போன்ற ஜோதிட நூல்கள், இவ்விரு கிரகங்கள் எங்கு சேர்ந்திருப்பினும் ஆபத்தானது என்றுரைக்கின்றன.

நாம் ஆராய்ந்த வரையிலும்  கணவன்-மனைவி விவாகரத்துக்கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும்  சேர்க்கை இது. மண வாழ்க்கையில் சூறாவளியை சந்தேகத்தாலும் பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்னையாலும் உண்டாக்கும். நீதிமன்றத்தில், ‘‘எனக்கேற்ற துணை இவரல்ல’’ என்று குற்றம்சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கைதான். வேகம், விரைந்து முடிவெடுத்தல், தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று நினைத்தல், முரட்டுத்தனம்...

 இவையெல்லாம் செவ்வாய் தரும் குணங்கள். ‘‘நான் சொன்னா சொன்னதுதான். அவரு வேணா இறங்கி வரட்டும். நான் ஏன் இறங்கிப் போகணும்’’ என்று பேச வைப்பதும் செவ்வாய்தான். சனி என்பது, இதற்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டிருக்கும் கிரகம். செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம்.

பால் போல, அரிசி உலை போல, எரிமலையின் லார்வா அக்னிக் குழம்பு போல பிரச்னையின் போக்கை செவ்வாயின் ஆதிக்கத்திலுள்ளவர்கள் வெளிப்படுத்துவார்கள். சனி ஆதிக்கம் உள்ளவர்கள், ‘எல்லாம் முட்டி மோதி அடங்கட்டும், அதன்பிறகு போய் நியாயம் பேசலாம்’ என்றிருப்பார்கள். ஊரே கூடி நரம்பு புடைக்க கத்தினாலும், எதுவும் நடக்காதது போல ஆகாயம் பார்த்தபடி இருப்பவர்களே சனி ஆதிக்கமுள்ளவர்கள்.

மேற்கண்ட இரு குணங்களும் ஒருவருக்குள் முட்டி மோதிக் கலந்திருக்கும்போது என்ன நிகழுமோ, அதுதான் சனி - செவ்வாய் சேர்க்கையாகும். அதனால், இந்த இரண்டு கிரகங்களுமே ஒரு ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் தரமுடியும். ஆயுட்காரகன் சனி என்றால், ஆரோக்யகாரகன் செவ்வாய். அதர்மத்தையும் தாங்கிக் கொள்ளுமளவுக்கு சகிப்புத்தன்மைக்குரியவர் சனி என்றால், தர்மத்தைக் காக்க அதர்மத்தை வேரோடு பெயர்க்கும் கிரகமே செவ்வாய்.

ஒரு மனிதருக்கு இந்த இரண்டு குணங்களுமே வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் அத்தியாவசியமாகிறது. ஐம்புலன்களையும் முறுக்கேற்றி வீராவேச வேட்கையுடன் வாழ்க்கையை நடத்த வைப்பது செவ்வாய் என்றால், நெறிப்படி வாழ வைத்து அடுத்த தலைமுறையையும் பேச வைக்கும் ரோல்மாடலாக மாற்றுபவர் சனி.

வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் இந்த இருகிரக சேர்க்கை பாதிப்பை உண்டு பண்ணும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலிலிருந்து  பிரச்னைகள் தொடங்கும். மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் மேல் கன்னப் பகுதியில் கருநீலத் திட்டுகள் உருவாதல் என பல பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் ராசிநாதனாகிய செவ்வாய்க்கு ஜென்மப் பகையாக சனி வருகிறார். ‘பண்ணு லக்னம் சரமானால் பதினோராமாதி பலனே தாரான்’ என்ற பாடலின்படி பாதகாதிபதியாக சனி வருகிறார். மேஷ லக்னத்திற்குத்தான் இந்த இரு கிரக சேர்க்கைகள் அதிக பாதிப்புகளைத் தரும். மேஷம் சனிக்கு நீச வீடாகும். உங்கள் லக்னாதிபதியோடு சனி இங்கு அமர்ந்திருந்தால் எதிலும் ஆர்வமில்லாமல் மசமசவென்று இருப்பார்கள்.

ஒரு வேலையைச் சொன்னால் உடனே முடிக்காமல் ‘இதோ போகிறேன்... இதோ போகிறேன்...’ என்று இழுத்தடிக்கும் குணம் மேலோங்கி இருக்கும். பல்வலியும் ஒற்றைத் தலைவலி யும் அவ்வப்போது வந்து படுத்தி எடுக்கும். இவர்கள் சமையற்கலை படிப்பில் மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள். பொய்யைப் பேசிக்கொண்டேயிருக்கும் குணமும் உண்டு. ‘எதற்குமே பொறுப்பேற்காமல் வாழ்வது எப்படி?’ என்று கேட்டால் அதற்கு புத்தகமே எழுதுவார்கள். சீக்கிரமாக தலைமுடி நரைக்கும்.

இந்த இரண்டு கிரகச் சேர்க்கைகள் ரிஷபத்தில் சமபலத்தோடு இருக்கின்றன. வாதிடும் குணம் மிகுந்திருக்கும். திறமையான கிரிமினல் வழக்கறிஞர்கள் அதிகமாக இந்த சேர்க்கையில் பிறந்தவர்களாக இருப்பார்கள். மாறுகண் அமைப்பும் உண்டு. சிலருக்கு கண்ணில் நீர்வடிதல், கண் அழுத்தம் இருக்கும். நெருப்பருகே செல்லும்போது எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். கோபமாகப் பேசுதல், மனதில் பட்டதை மறைக்காமல் பேசுதல் போன்ற குணங்களும் உண்டு. இயற்கைச் சீற்றத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு இவர்கள்தான் முதலில் சென்று உதவுவார்கள். ஆங்கிலப் பேச்சாற்றலில் சிறந்து விளங்குவார்கள். பத்து நாட்கள் மும்பையில் இருந்தால் பதினோராம் நாள் இந்தியில் சகஜமாகப் பேசத் தொடங்கி விடுவார்கள். திக்குவாய் கோளாறும் சிலருக்கு இருக்கும்.

மிதுனத்தில் இவர்களிருவரும் அமர்ந்தால் பேசவேண்டிய இடத்தில் பேசாமல் பேசக் கூடாத இடத்தில் பேசுதல், செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் செய்யக் கூடாத நேரத்தில் வேலையைச் செய்தல் என இருப்பார்கள். முடிவெடுப்பதில் தடுமாற்றமுண்டு. காற்றுள்ளபோது தூற்றிக் கொள்ளாமல் காற்றடிக்கும் காலத்தில் மாவு விற்கச் செல்பவர்கள் இவர்கள்தான். தற்போதைய உலக நடப்பு குறித்துப் பேசாமல், பழங்கதை பேசும் குணம் இருக்கும். தூது செல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். மூன்று நான்கு படிப்புகளை ஒரே நேரத்தில் சாமர்த்தியமாகப் படிப்பார்கள். காதில் சீழ் வடியும் தொந்தரவு இருக்கும். ஒற்றைக் காதில் வளையம் மாட்டிக் கொண்டு அலைவார்கள்.

கடகமானது சனிக்கு பகைவீடாகும். செவ்வாய் நீசமும் ஆகிறார். இந்த அமைப்பில் உள்ளவர்கள் சுயம்புவாக முன்னேறுவார்கள். தாய் தந்தை இருந்தாலும், தாத்தா பாட்டியிடமே வளர்வார்கள். இந்தச் சேர்க்கையானது கடகத்தில் இருந்தால் வெளி மாநிலம், வெளிநாடுகளுக்குச் சென்றால்தான் பணவசதியோடு நன்றாக இருக்க முடியும். மற்றவர்களுக்கெல்லாம் கைக்கும் வாய்க்குமே சரியாகப் போய்விடும். இந்த சேர்க்கையில் பிறந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்கள் புகழ்பெற்றிருப்பதைப் பார்க்கலாம். நிறைய தலைமுடி, தாடி வளர்த்துக் கொண்டிருப்பார்கள். கல்வித் தடை இருக்கும்.

தண்ணீர் அல்லது கடல்சார்ந்த தொழில்நுட்பப் பணியில் பலர் இருப்பார்கள். இவர்கள் தங்கள் பெயரில் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லதாகும். இவர்களுக்கு உறவினர்களும் குறைவு; அவர்களின் ஆதரவும் குறைவாகவே இருக்கும். சிலருக்கு பிறக்கும்போதே இதயத்தில் கோளாறு ஏற்பட்டு பிறகு சரியாகும்.

சிம்மத்தில் செவ்வாயும் சனியும் இருந்தால் மூர்க்கன், கோபக்காரன், தந்தையை நிந்திப்பவன், சட்டங்களின் ஓட்டைகளில் புகுந்து தப்பிப்பவன் என்றெல்லாம் பழைய நூல்கள் சொல்கின்றன. லக்னாதிபதியோடு சனி சேரும்போது அவசரக் குடுக்கையாக இருப்பார்கள். எதிலுமே மிகையுணர்ச்சி கொள்வார்கள். சிலநேரங்களில் அதிபுத்திசாலிகளாகவும், சில சமயங்களில் முட்டாள்களாகவும் நடந்துகொள்ள வைக்கும்.

ஆனால், அனுபவ அறிவோடு பேசியும் கவர்வதால் இவர்கள் எப்படிப்பட்டவர்களென்று புரிந்துகொள்வதே சிரமமாக இருக்கும். பூர்வீகச் சொத்தை இவர்கள் வழக்காடித்தான் பெற வேண்டியிருக்கும். குமரப் பருவத்தில் கடவுளை மறுத்துப் பேசி கடவுள் இல்லையென விவாதிப்பார்கள். பின்வயதில் சிவாலயங்கள் எழுப்புவார்கள். இந்த அமைப்பானது முதலில் கருச்சிதைவை ஏற்படுத்தி பின்னரே மழலை பாக்கியத்தை கிட்டச் செய்யும்.     

கன்னியில் பாதகாதிபதியான சனியானவர் ஆறில் மறைவது நல்லது. திடீர் பணவரவு, வழக்கில் வெற்றி, ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபம், அந்நிய மதத்தினர் மற்றும் அயல்நாட்டில் வசிப்பவர்களால் ஆதரவு என வாழ்க்கை நகரும். லக்னாதிபதியோடு பாதகாதிபதியும் சேர்ந்து மறைவதால் சட்டத்திற்குப் புறம்பான வருமானத்தில் வசதியாக இருந்துவிட்டு சில காலம் தண்டனையும் பெறுவார்கள். பெட்ரோல் பங்க், தோல் தொழிற்சாலை, மதுபானத் தொழிற் கூடங்களில் வேலை பார்ப்பவர்களுமுண்டு. கொஞ்சம் கால்தாங்கி நடப்பார்கள். ஆறு விரல், யானைக் காது என சிலருக்கு அமையும். விபத்தில் தாடை எலும்பு, பல் விழும் அபாயம் உண்டு. எச்சரிக்கை.

துலாத்தில் பாதகாதிபதியான சனி பகவான் உச்சமாகிறார். ஏழாமிடம் வாழ்க்கைத் துணையைக் குறிப்பதால் இவ்விரு கிரகங்கள் அமர்ந்தால் ஒரே வயதுள்ள அல்லது தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை மனைவியாக அடையும் வாய்ப்புண்டு. வசதி வாய்ப்புகளோடு பிறந்திருந்தும், சிறு வயதில் தாயையோ அல்லது தந்தையையோ இழந்த பெண் இவருக்கு மனைவியாக வரக்கூடும்.

கலப்புத் திருமணம், காதல் திருமணம் போன்றவற்றிற்கும் வாய்ப்புண்டு. வியாபாரத்தில் கூட்டு கூடாது. இவர்கள் பொதுவாகவே வாழ்க்கைத்துணையோடு வீண் சண்டை போடக்கூடாது. வார்த்தைகளால் ஏற்படும் மன வருத்தங்களால் மனைவி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரியக் கூடும். தொழிலில் கூட்டாளிகளால் ஆதாயமும் ஆபத்தும் சம அளவில் இருக்கும்.

விருச்சிக ராசியான எட்டில் சனி மறைவது நல்லதேயாகும். இது நீண்ட ஆயுளைத் தரும். நிறைய பேர் ஹோட்டல், லாட்ஜ் வைத்து நடத்துவார்கள். பாதயாத்திரை செல்லும் பக்த கோடிகளுக்கு கைங்கரியம் செய்வார்கள். இதில் ஒரு சிலர் நல்ல ஓவியர்களாக மிளிர்வார்கள். தத்துவ ஞானம் பேசுபவர்களும் அதிகமுண்டு.

குருவி சேர்க்கிற மாதிரி பணத்தைச் சேர்த்து வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கை தேவை. இந்த சேர்க்கையின் மீது சுபகிரகத்தின் பார்வை விழவில்லையெனில் கள்ளத்தனமும், கபடமாகப் பேசும் குணமும் இருக்கும். நாய்க் கடி, வனவிலங்குகளால் தாக்கப்படுதல், திருடு போதல், பேசி முடிக்க வேண்டிய விஷயத்திற்கெல்லாம் வழக்கு தொடுத்தல் என்று பிரச்னைகளும் வந்து நீங்கும். 

தனுசு குரு பகவானின் வீடாகும். சனிக்கும் இது நல்ல இடமாகும். இங்கு சனி சுபத் தன்மையை அடைகிறார். தவம், யோகம், தர்ம சிந்தனைகள், கல்யாண மண்டபம் கட்டி ஏழைகளுக்கு விடுதல் என்றெல்லாம் நற்செயல்களில் ஈடுபடுவார்கள். இவர்களில் பலர் யோகா, தியானம் கற்றுத் தருபவர்களாக இருப்பார்கள். பணத்தின்மீது அவ்வளவு ஆசை இருக்காது. தந்தையை மீறிய ஞானத்தோடு விளங்குவார்கள். இவர்களிடம் காசு தங்காது. மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். இளைய சகோதரர்களோடு கருத்து மோதல்கள் இருக்கும். சூழ்நிலையால் பிள்ளைகளைப் பிரிந்து வாழ்ந்து, பின்னர் சேருவார்கள்.
 
மகரத்தில் சனி ஆட்சி பெறுகிறார். செவ்வாய் உச்சமடைகிறார். கிரக யுத்தமில்லாமல் இந்த இரண்டு கிரகங்களும் இங்கு இடம் பெற்றிருந்தால் ஐ.எஃப்.எஸ்., வனவியல் துறை, சுற்றுலாத்துறையில் பெரிய பதவிகள், குழந்தைகள் காப்பகம், அடிபட்ட பசுவிற்கு மருத்துவ சிகிச்சை, உளவாளியாக செயல்படுதல், கோழிப் பண்ணை என தொண்டும் பணியுமாக இருப்பார்கள்.

இவர்களிடம் அசாத்திய ஆற்றலும், தொலைநோக்குச் சிந்தனையும் இருக்கும். எல்லோரும் விரும்பும்படி பேசுவார்கள். இதில் அதிகமானவர்கள் சுயதொழிலைத்தான் விரும்புவார்கள். தேயிலைத் தோட்டம், மிளகு, ஏலக்காய் வியாபாரம் செய்வார்கள். ஹார்டுவேர்ஸ், பெயின்ட் கடை வைத்து நடத்துவார்கள். தங்களின் இறுதிக்காலத்தில் குலத்தொழிலைச் செய்வார்கள்.

கும்ப ராசியான பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி பகவானே வருகிறார். திடீரென்று எல்லா விஷயத்திற்கும் கணக்கு பார்க்க ஆரம்பிப்பார்கள். மூத்த சகோதரரோடு இணக்கமாக இருப்பது நல்லது. இல்லையெனில் அவரால் பிரச்னைகள் வரக்கூடும். சிலர் மூத்த சகோதரரை அடக்கி ஆளுவார்கள். ‘‘நான் என்னங்க பண்றது? அண்ணனை மீற முடியாது’’ என்றும் பேசுவார்கள். சனி ஆட்சியாக அமர்வதால் முதுகுப் பகுதியில் மச்சம் இருக்கும்.

மீன ராசியில் லக்னாதிபதியான செவ்வாயும் சனியும் மறைகிறார்கள். குடத்திலிட்ட விளக்காக இருப்பார்கள். எங்குமே இவர்கள் இரண்டாம் இடத்தைத்தான் வகிப்பார்கள். திறமையிருந்தும் வெளிப்படாமல் இருப்பார்கள். உடன்பிறந்த சகோதரர்களுக்கு இந்த அமைப்பு கொஞ்சம் ஆகாதுதான். புண்ணியதலங்களுக்குச் சென்று வருவார்கள்.   

இந்த அமைப்பானது கொஞ்சம் சிக்கலானது என்று பார்த்தோம். மேலும் வீர்யம் மிக்கதுமாகும். பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும். அதனால் உக்கிரமான தெய்வங்களின் வழிபாடு இதற்கு முக்கியமாகும். எனவே, நரசிம்மர் ஈசனை தரிசிக்கும் அல்லது வணங்கிய கோயில்களுக்குச் சென்று வருதல் நல்லது. அப்படிப்பட்ட ஒரு அபூர்வ தலமே நரசிங்கம்பேட்டை சுயம்புநாதர் சிவாலயமாகும்.

இத்தலத்தில் நரசிம்மரே லிங்கம் நிறுவி அதை வழிபட்டிருக்கிறார். ரண்யகசிபுவைக் கொன்ற தோஷம் நீங்குவதற்கும், தன்னுடைய கோபாவேசம் தணிவதற்கும் இங்குள்ள சுயம்புநாதரை வணங்கியிருக்கிறார். எனவே, நீங்களும் கும்பகோணம்- மயிலாடுதுறை மார்க்கத்திலுள்ள நரசிங்கம்பேட்டை தலத்தில் அருளும் நரசிம்மர் வணங்கிய சுயம்புநாதரை வணங்கி வாருங்கள். மேலும், இத்தலத்திலேயே அமைந்துள்ள யோக நரசிம்மரின் ஆலயத்திற்கும் சென்று வாருங்கள்.

 (கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்