ஆபத்தை விற்குமா ஆன்லைன் மருந்துகடைகள்!



கடைசி குடிமகனுக்கும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கித் தந்து இந்தியாவை ஆன்லைனில் இணைப்பது பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய கனவு. ஏற்கனவே செல்போன் முதல் காய்கறி வரைக்கும் அனைத்திலும் நுழைந்து விட்டது ஆன்லைன் வியாபாரம்.

அந்த வரிசையில் மருந்துகளையும் ஆன்லைனில் விற்பதற்கு அனுமதியளிக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. விரைவில் ஆன்லைன் மருந்துக்கடைகள் முளைக்க இருக்கின்றன. ஆனால், ‘‘இது தேசத்தை ஆபத்தில் தள்ளிவிடும். மக்களின் உயிரோடு விளையாடும் முயற்சி இது’’ என்று எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

‘‘இந்தியாவில் 7.25 லட்சம் மருந்துக்கடைகள் இருக்கின்றன. 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது. இந்த வணிகத்தை மொத்தமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்காகவே  ஆன்லைன் பார்மசிகளை அனுமதிக்கப் பார்க்கிறது மத்திய அரசு...’’ என்பது மருந்து வணிகர் சங்கங்களின் குற்றச்சாட்டு. அரசின் முடிவைக் கண்டித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் எனக் களமிறங்கியிருக்கின்றன அந்த அமைப்புகள்.

‘‘எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகளை ஆன்லைனில் விற்பதற்கும், மருந்துப் பொருட்களை விற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மருந்து வணிகம் மிகவும் கட்டுக்கோப்பானது. விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒரு நீண்ட வரலாறை மருந்தகங்கள் பராமரிக்கின்றன. குறிப்பிட்ட நாளில் விற்ற ஒரு மாத்திரையில் பிரச்னை இருப்பதாகக் கருதினால், அதைத் தயாரித்த கம்பெனி, தயாரித்து பேக் செய்யப்பட்ட நாள், அதன் டிஸ்ட்ரிபியூட்டர், மருந்தகத்திற்கு வந்த நாள், விற்ற நாள், வாங்கிய நபர் உள்பட அத்தனை தகவல்களையும் சில நிமிடங்களில் எடுத்து விடலாம்.  மருந்தில் பல வகைகள் உண்டு.

 ‘ஓவர் த கவுன்ட்டர்’ பிரிவில் வரும் மருந்துகளை பெட்டிக்கடைகளில் கூட வைத்து விற்கிறார்கள். சில மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே தர வேண்டும். சைக்கியாட்ரிக் நோய்களுக்கான மாத்திரைகளில் போதை தரக்கூடிய சில ரசாயனங்கள் உண்டு. மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே அந்த மாத்திரைகளை விற்க வேண்டும். தவறாகக் கொடுத்து விட்டாலோ, காலாவதியான மாத்திரைகளைத் தந்து விட்டாலோ பல விளைவுகள் ஏற்படும்.

இவ்வளவு பொறுப்புகள் நிறைந்த மருந்து விற்பனையை ஆன்லைனில் கொண்டு வருவது நிச்சயம் எதிர்பாராத பாதிப்புகளை உருவாக்கிவிடும். இதில் இரண்டு விதமான பாதிப்புகள் உண்டு. ஒன்று மக்களுக்கானது, மற்றொன்று மருந்து வணிகர்களுக்கானது. ‘மருத்துவர் தரும் மருந்துச் சீட்டை ஸ்கேன் செய்து ஆர்டர் செய்தால், ஆன்லைன் பார்மசி மருந்தை வீட்டுக்கே அனுப்பும்’ என்கிறார்கள்.

மருத்துவர்கள் எழுதும் மருந்துச்சீட்டை பழக்கப்பட்ட நபர்களால் மட்டுமே படித்துப் புரிந்துகொள்ள முடியும். அடுத்த தெருவில் இருக்கும் மருந்தகங்களுக்குச் சென்றாலே, நன்கு விசாரித்தபிறகுதான் ‘இந்த மருந்து’ என்று முடிவு செய்வார்கள். ஆன்லைனில் அனுப்பும் மருந்துச்சீட்டை ஆன்லைன் பார்மசியில் இருப்பவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பது முதல் நடைமுறைச் சிக்கல்.

பெரும்பாலான மக்களுக்கு மருந்தைப் பற்றி எதுவும் தெரியாது. மருத்துவர்கள் எழுதும் மருந்தை பார்மசியில் உள்ளவர்கள் சரியாகத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் வாங்கிச் சாப்பிடுபவர்களே அதிகம்.

ஒருவேளை மருந்து ஒவ்வாமை ஏற்படுத்தினாலோ, காலாவதி ஆகியிருந்தாலோ, தவறாகத் தந்துவிட்டாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட மருந்தகத்துக்கு வந்து கேட்பார்கள். ஆன்லைன் பார்மசியில் அதற்கான வாய்ப்பு இல்லை. ஆன்லைன் பார்மசியின் அலுவலகம் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பொறுப்பேற்கச் செய்வது எளிதில்லை.

ஏற்கனவே ஆன்லைன் வணிகத்தில் ஏகப்பட்ட மோசடிகள் நடக்கின்றன. மொபைல் போன் வாங்க பணம் கட்டினால் செங்கல் வருகிறது. தவறு செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நம்மிடம் தொழில்நுட்பமும் இல்லை. கட்டுப்பாடாக விற்கப்பட வேண்டிய போதை தரும் மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள் எல்லாம் சர்வசாதாரணமாக ஆன்லைனில் விற்கப்படலாம். அறைக்குள் இருந்தபடியே மாத்திரை வாங்கும் வாய்ப்பு கலாசாரச் சீரழிவை
உருவாக்கலாம்.

அமெரிக்கா, பிரிட்டன், பல்கேரியா ஆகிய நாடுகளில் ஆன்லைன் பார்மசிகள் உள்ளன. அங்கெல்லாம் மிகப்பெரிய ஆன்லைன் டேட்டாபேஸ் இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியாக நம்பர் தந்திருக்கிறார்கள்.

தவிர, டாக்டர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்தாளுனர்கள் அனைவரையும் ஆன்லைனில் இணைத்து ஒரு டேட்டா லிங்க் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வந்தால் அவரைப் பற்றிய டேட்டா, அவர் வாங்குகிற மருந்து, வாங்குகிற மருந்தகம், பார்த்த மருத்துவர் வரை அனைத்தும் ஆன்லைனில் பதிவாகிவிடும்.

இத்தனை ஏற்பாடுகள் இருந்தும் கூட அங்கு ஏராளமான பிரச்னைகள் நடக்கின்றன. அமெரிக்காவில் 360 ஆன்லைன் பார்மசிகளை அரசு அங்கீகரித்திருக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி பார்மசிகள் ஆன்லைனில் இருக்கின்றன. வயாக்ராவில் இருந்து, கருக்கலைப்பு மருந்துகள் வரை அனைத்தும் விற்கின்றன.

இந்தியாவில் இப்போதுதான் 10 சதவீதம் பேர் இணையத்தை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘டிஜிட்டல் இந்தியா’ என்கிற குரலே இப்போதுதான் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. மருத்துவமனைகள், மருத்துவர்கள் சார்ந்த முழுமையான கணக்கெடுப்புகள் எதுவும் அரசிடம் இல்லை. ஆன்லைன் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் நமக்கு இல்லை. இப்படியான சூழலில் ஆன்லைன் பார்மசிகளை அனுமதிப்பது பெரும் பாதகத்தை உருவாக்கும்.

ஆன்லைன் வணிகத்தில் உணவுப்பொருட்களை சேர்த்ததால் ஏற்பட்ட விளைவுகளை இன்றைக்கும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். தொழிலுக்குத் தொடர்பில்லாத பெரு முதலாளிகள் உள்ளே நுழைந்து கோலோச்சத் தொடங்கிவிடுவார்கள். ஒரு கட்டத்தில் மருந்துக் கடைகளே இல்லாமல் போய்விடும்.

அவசரகால தேவைக்கான மருந்துக்குக்கூட ஆன்லைன் பார்மசிகளை நாட வேண்டியிருக்கும். கிராமப்புற, அடித்தட்டு மக்களுக்கான மருத்துவத் தேவைகள் நிறைவேறாமல் போய் விடும் அபாயம் உள்ளது’’ என்கிறார் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் செயலாளர் எஸ்.எஸ்.செல்வம்.

‘‘இந்தியாவில் 8 லட்சம் பேர் நேரடியாக பார்மசி தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள். சுமார் 40 லட்சம் பேர் இந்தத் துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்களை நம்பி ஒன்றரைக் கோடிப் பேர் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்கி வாழ்வளிக்க வேண்டிய அரசு இத்தனை பேரின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி சாலையில் நிறுத்தப் பார்க்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசின் முடிவை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்துவோம்...” என்கிறார் அவர். இந்திய மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கமும் அரசின் முடிவை எதிர்க்கிறது.

‘‘டிரக்ஸ் அண்ட் காஸ்மெடிக்ஸ் சட்டம், மேஜிக் ரெமெடி அண்ட் அப்ஜெக்‌ஷனபிள் அட்வர்டைஸ்மென்ட் ஆக்ட் ஆகிய சட்டங்கள் மருந்து வணிகத்தை கட்டுப்பாடாகவும், தவறில்லாமலும் நடத்த வழிவகை செய்கின்றன. இந்த இரண்டு சட்டங்களுக்கும் முரணானது அரசின் முடிவு. ‘ஷெட்யூல்டு டிரக்ஸ்’ எனப்படும் மிகக் கவனமாகக் கையாளவேண்டிய மருந்துகள் பல இருக்கின்றன.

அவற்றை ஆன்லைனில் விற்பது பெரும் ஆபத்தில் முடியும். தனி நபர்களின் நலனைக் கருதி அரசு முடிவெடுக்கக்கூடாது. ஒட்டுமொத்த மக்களின் உயிர் பிரச்னை இது. மிகவும் கவனமாகவும், அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும்...’’ என்கிறார் இச்சங்கத்தின் அகில இந்திய செயலாளர் ரமேஷ் சுந்தர். நடந்து கொள்ளுமா அரசு..?
கட்டுப்பாடாக விற்கப்பட வேண்டிய போதை தரும் மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள் எல்லாம் சர்வசாதாரணமாக ஆன்லைனில் விற்கப்படலாம்.

- வெ.நீலகண்டன்