எனக்கு பெஸ்ட் ஜோடி சமந்தா!
கும்கும்மென செமத்தியான உடம்புடன் ஹாட் அண்ட் ஸ்மார்ட்டாக வந்திருந்தார் விக்ரம். ஸ்வீட் குரலில், ‘‘எஸ் பாஸ்’’ என இறுக்கிய கைகளில் கூட இதம். இதோ, ‘10 எண்றதுக்குள்ள’ ரெடி. 1,000 தியேட்டர்களில் அதிரடியாய் வெளியாகும் சந்தோஷத்தில் மிளிர்கிறார் விக்ரம்.
‘சார், வந்துட்டீங்களா... குட் மார்னிங்’’ எனப் பிரகாசமாக நுழைந்தார் டைரக்டர் விஜய் மில்டன். இடம், கோடம்பாக்கம் மந்திரா ஸ்டூடியோ. படத்தின் கடைசி கட்ட ஷார்ப் பணிகளிடையே நிதானமான உரையாடல்...
‘‘நிச்சயமா இந்தப் படம் எனக்கு புது அனுபவம். மில்டன் என்கிட்ட சொன்ன உடனே நான் ‘சரி’னு சொன்ன படம். ‘ரோடு மூவி’ன்னு ஒரு ரகத்தில் இதைச் சொல்லலாம். ஆனால், பார்த்து முடிக்கும்போது ‘அடடா, காதல் படமாயிருக்கே’னு சொல்ல வேண்டியிருக்கும். முற்றிலும் வேறுபட்ட ரெண்டு பேருக்கு, ஒரு டிராவலில் காதல் வந்தால் எப்படியிருக்கும்... ஜாக் அண்ட் ஜில்னு சொல்லுவாங்களே... அதேதான்.
படமே நாலஞ்சு நாளில் நடக்கிற கதைதான். அந்த நாலு நாளில் வந்து சேருகிற காதலை, நாலு வருஷம் நடந்த மாதிரி அழுத்தத்தோடு சொல்ற ட்ரீட்மென்ட் இதில் இருக்கும். மத்தபடி வீரம், கம்பீரம், காதல், ஆக்ஷன்னு பல தளங்களில் ‘விர்’னு போய்க்கிட்டு இருக்கும்!’’ என்கிற விக்ரமை தொடர்ந்தார் இயக்குனர் விஜய் மில்டன்.
‘‘மனுஷன்னா அவனோட இன்னொரு பக்கமும் தெரியணும்னு மணிரத்னம் சார் சொல்வார். வில்லன்னா, அவன் எப்பவுமே ‘உர்’னுதான் இருப்பான்ங்கிறது கட்டாயம் கிடையாது. ஹீரோவும் அப்படியே வெள்ளையா, கல்யாண குணங்களோட இருக்க மாட்டார். நாலு நாளில் காதல் வந்து சேர்ந்ததற்கு வேண்டிய காரண காரியங்கள் இருக்குமே, அதுவும் இதில் சுவாரஸ்யமான அடுக்கு.
விக்ரம் சார் என்கிட்ட ‘நான் எந்த மாதிரி கெட்டப்பில் வரணும்’னு கேட்டார். ஒண்ணும் வேண்டாம்... அப்படியே குளுமையா வரணும். சுஜாதா, ‘கவனமா கலைச்சு விடப்பட்ட தலை’னு எழுதியிருப்பார்னு அதையெல்லாம் சொன்னேன். ஷூட்டிங் ஸ்பாட் வந்தால் நம்பவே முடியலை. சமந்தாவை விட இளமையில் கொஞ்சினார். ஒவ்வொருத்தருக்குமே இது இன்பச் சுற்றுலாதான்.
கொஞ்ச நாள் கேப் விட்டால், ‘நம்ம படம் என்னைக்கு ஆரம்பம்... டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணணும்... சொல்லுங்க ப்ளீஸ்’னு குறுந்தகவல் வரும் ஷாம்கிட்ட இருந்து. படத்தில் நடிக்கிறவங்க இதை ‘நம்ம படம்’னு நினைக்கிற இடம்தான் டைரக்டருக்கு செட் ஆகிற இடம். ஒரு நாள் யாரும் சிணுங்கி புலம்பினதா ஞாபகத் துணுக்கு கூட இல்லை. முதல் நாள் காட்டிய புன்னகையை இன்னும் மறக்காம இருக்கிற முருகதாசுக்கு வணக்கம்!’’ ‘‘விக்ரம், உங்களுக்கு எப்படி சமந்தா?’’
‘‘சிம்ப்ளி சூப்பர்ப். எனக்கும் த்ரிஷாவுக்கும் ஜோவுக்கும் நல்லா செட்டாகும். ‘திரையில் நல்ல ஜோடி’னு பாராட்டு கிடைச்சிருக்கு. இது அதுக்கும் மேல. இப்போ திரையில் எனக்கு நல்ல ஜோடி சமந்தாதானோன்னு எனக்கே தோணுது. எங்களுக்கு டயலாக் எல்லாம் ரொம்பச் சின்னதுதான். ‘நீ எல்லா விஷயத்தையும் பத்து செகண்ட்ல முடிச்சிடுவியா?’னு டிரெய்லர்ல கேட்கிறப்போ சிரிப்பு எகிறுதுல்ல. அப்படித்தான் சின்னச் சின்ன டயலாக்ஸ்.
ஆரம்பத்தில் ஸ்பாட்டுக்கு வந்து மேக்கப் போட்டுட்டு ‘டயலாக் பேப்பர் கொண்டு வாங்க’னு சொல்லுவாங்க. ‘அப்படி ஒண்ணு இல்லை’னு சொல்லும்போது ஷாமுக்கு ஆச்சரியம் தாங்காது. எப்படியிருந்தாலும் ஊறுகாய், மசாலா நம்ம மக்களுக்கு வேணுமில்லையா... அதுவும் அதுதான்னு தெரியாமல் படத்தில் இருக்கு!’’ ‘‘இவ்வளவு நாளாச்சே... அதில் ஒண்ணும் சிரமம் இல்லையா?’’
‘‘பயணம் அப்படி. நடிப்பு இருக்கணும்... ஆனா, அது வெளியே யதார்த்தமா வரணும். கெட் அப் இல்லை... ஆனால், ஸ்டைல் இருக்கணும். ‘மில்டன் இப்படி பண்றாரே’னு கொஞ்சம் நாங்கள் யோசிச்ச இடமெல்லாம் இப்பப் பார்த்தா ‘அடடா, சரியா இருக்கே’னு தோணுது. சிம்பிள் ஐடியாதான். ஒரு முடிச்சு அவிழும்; அல்லது ஒரு முடிச்சு இறுகும். இதை இவ்வளவு டயத்திற்கும் குறைவாக பண்ணியிருக்கவே முடியாது. கண்டிப்பா படம் பார்க்கிறங்களை ‘அடடா, எப்படி உழைச்சிருக்காங் க’னு வியக்க வைக்கும். நிச்சயம் எங்களின் உழைப்பிற்கு பெரிய மரியாதை கிடைக்கும். படம் பார்த்துட்டு, ‘சூப்பர்... ரொம்ப நல்லாயிருக்கு... நல்ல ஸ்பீடு’னு முருகதாஸ் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார்!’’
‘‘முதல்முறையா இப்படி பெரிய அளவில் ஹீரோவை வச்சு படம் செய்றது எப்படியிருந்தது மில்டன்?’’‘‘அவரை மணி சார், ஷங்கர்னு நிறைய பேர் கையாண்டு இருக்காங்க. அவரோட பெஸ்ட் அதில் வந்திருக்கு. இதில் நம்ம மாதிரி ‘கோலி சோடா’ டைரக்டருக்கு ஒத்துழைப்பு வருமானு சந்தேகம் ஒட்டிக்கிட்டே இருந்தது. ‘பயமாயிருக்கு சார்’னு போய்ச் சொன்னேன்.
‘போய் உன் வேலையைப் பாருப்பா... கவலையே படாதே’னு சொன்னார். அந்தச் சொல்லை காப்பாத்திக்கிட்டே இருக்கிற நல்ல ஆத்மா. இதில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் சமந்தா உங்களோடு பேசுவார். ஜாலிதான்!’’ என மில்டன் கண் சிமிட்ட, ஆரம்பிக்கிறது சமந்தாவிற்கான எதிர்பார்ப்பு.
காலேஜ் லீவ் மாதிரி! சமந்தா
ஒரு ரகசியம் மாதிரி வந்து எதிரே அமர்கிறார் கோலிவுட்டின் கோல்டன் ஃபிஷ் சமந்தா. வரிசை கட்டி நிற்கிற நல்ல படங்களின் சந்தோஷம் அப்படியே முகத்தில் தெரிகிறது. ‘‘ஹாய்... நைஸ் மீட்டிங்’’ என சியர்ஸ் சிரிப்புடன் ஆரம்பிக்கிறது பச்சரிசி பல் உரையாடல்...‘‘ ‘10 எண்றதுக்குள்ள’ எனக்கு முக்கியமான படம். ஹீரோயின்னா கொஞ்சம் பாடல்கள், காதல்னு கடந்து போகும். இது எனக்கும் விக்ரமுக்குமான டிரிப். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பயணிக்கிறதில் இருக்கிற சுவாரஸ்யமான பின்னணி. அவருக்கு ஈக்குவலா நின்னு நடிச்சாகணும்.
நிறைய பொறுப்பு. இதில் என் உழைப்பு நிறைய இருக்கு. விஜய் மில்டனுக்கு பெரிய வணக்கம் வைக்கணும். என்னால இந்த ரோலை பண்ணிட முடியும்னு வச்ச நம்பிக்கையே ரொம்பப் பெருசு. விக்ரம் மகா நடிகர்னு நமக்கே நல்லாத் தெரியும். நான் அந்தப் பாதையில் கொஞ்சம்தான் கடந்திருக்கேன். விக்ரம் சார் அவரோட சீன் முடிஞ்ச பிறகும், எழுந்து போயிட மாட்டார். என் காட்சிகளின்போது இருந்து உதவி செய்வார். நான் ஒரு ஷாட் முடிச்சிட்டு மில்டன், விக்ரம் ரெண்டு பேர் முகத்தையும் பார்ப்பேன். அவங்க முகத்தில் திருப்தி தெரிஞ்சாதான் வெளியே வருவேன். சிக்கிம்ல இருந்து...
அதாவது, இந்தியாவின் உயரத்திலிருந்து அப்படியே கீழே இறங்கி, ஒவ்வொரு கலாசாரம், பழக்க வழக்கம், உணவுனு உள்வாங்கிட்டு எப்பவும் சிரிச்சபடி குறும்பு பண்ண அனுமதிக்கிற யூனிட்டோடு பயணிச்சிருக்கேன். காலேஜ் லீவ்ல வீட்டுக்கு வந்திருக்கிறது மாதிரிதான் இந்த ஒரு வருஷமும் உணர்ந்தேன்!பெரிய படங்களில் இருக்கிறதோடு, அதில் நமக்கு முக்கியத்துவம் வரும்போது கிடைக்கிற சந்தோஷம் எப்பவும் இரட்டிப்புதான்!
வசனம் சொல்லித் தர்றது, தேவையான வசதியெல்லாம் கிடைக்குதானு கவனிக்கிற அக்கறை, பத்திரமா ஊர் போய் சேர்ந்துட்டீங்களானு விசாரிக்கிற மனசு, நடிச்சதை எடிட்டிங்ல முதல் ரவுண்டு பார்த்துட்டு சூப்பர்னு தகவல் அனுப்புகிற விதம்... இப்படி எல்லாத்திலும் விஜய் மில்டன் ரொம்ப அபூர்வம்! எங்க உழைப்புக்கான பலனை அனுபவிப்பேன்னு நம்பறேன்!’’
- நா.கதிர்வேலன்
|