ரம்மி என்பது சூதாட்டம் இல்லை!
கொஞ்ச காலமாய் ஃபேஸ்புக் நடுவே ‘ஆட வாங்க ஆன்லைன் ரம்மி’ என ஒரு சீரியல் லைட் போட்ட விளம்பரம் சிரிச்சிருக்குமே..? ’நாங்க கை நிறைய சம்பாதிச்சோம். நீங்களும் ரம்மி ஆடி சம்பாதிங்க’ என பணக்கட்டோடு பலர் போஸ் கொடுத்திருப்பார்களே..?
எல்லாம் நம்ம சுப்ரீம் கோர்ட் சொன்ன ஒரு தீர்ப்பால் வந்தது. மகாஜனங்களே, இந்தியாவில் ரம்மி விளையாடுவது குற்றமில்லையாம்... அது சூதாட்டமே இல்லையாம். ‘அறிவை உபயோகித்து ஆடும் ஒரு அறிவாளி ஆட்டம்தான் ரம்மி’ என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருக்கிறது.
‘நெசமாவாங்க?’ என விசாரித்தால், நெஞ்சக் குமுறலைக் கொட்டுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்!‘‘மகாபாரத சகுனி காலத்திலிருந்தே இந்தியாவில் சூதாட்டம் இருக்கிறது. ஆனால், அதை முறைப்படுத்த சரியான சட்டங்கள்தான் இல்லை. இந்தியாவில் 1867ல் இயற்றப்பட்ட பப்ளிக் கேம்ப்ளிங் ஆக்ட் எனும் அரதப் பழசான சட்டம்தான் நடைமுறையில் உள்ளது. அதன்படி, வெறும் திறமையை வைத்து ஆடப்படும் ரம்மி, சூதாட்டக் குற்றம் ஆகாது!’’ என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரான சுப்பிரமணியன்.
‘பெரும் பணத்தை பணயம் வைத்து ஆடினாலும், ரம்மி சூதாட்டம் இல்லையா?’ என்பது இந்தச் சட்டம் ஒன்றரை நூற்றாண்டுகளாகக் கிளப்பி விட்டிருக்கும் நிரந்தர சர்ச்சை. அந்த சர்ச்சையில்தான் ஒரு புரட்சித் தீர்ப்பு இப்போது வெளியாகியிருக்கிறது.‘‘ரம்மி தொடர்பாக 1867 சட்டம் இருந்தாலும் 1967ல்தான் முதன்முதலாக இது தொடர்பாக கைது நடவடிக்கை எடுத்தார்கள்.
அந்த வழக்கு சத்தியநாராயணா என்பவருக்கும் ஐதராபாத் மாநிலத்துக்கும் இடையிலான வழக்காகப் பதியப்பட்டது. 1867ல் போடப்பட்ட இந்த சட்டத்தைக் காரணம் காட்டி, ‘பணம் வைக்காமல் ரம்மி விளையாடுவது தப்பில்லை’ என்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது. பிறகு சென்னையின் மகாலட்சுமி கல்ச்சுரல் அசோசியேஷன் என்ற கிளப்பில், ‘பணம் வைத்து சூதாடினார்கள்’ என்று சென்னை காவல்துறை ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர்கள் ‘நாங்கள் சூதாடவில்லை... திறமை அடிப்படையிலான ரம்மிதான் விளையாடினோம்’ என்று தப்பித்தார்கள். காவல்துறை விடாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பென்ச், பணத்துக்காக ஆடப்படும் ரம்மியின் சமூகக் கேடுகளை விலாவாரியாக எடுத்துரைத்து, ‘ரம்மியை திறமையின் அடிப்படையில் விளையாடினாலும் அதை காசு வைத்து விளையாடினால் சூதாட்டமே’ என்று புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அந்த கிளப்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் போதிய ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட நிலையில், ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது’ என அந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். ஆக, இனி எந்த ரூபத்திலும் ரம்மி விளையாடுவதையும் காவல்துறை கட்டுப்படுத்தாது எனும் நிலைதான் உருவாகியிருக்கிறது. பொது இடங்களில், ரோட்டோரங்களில் சீட்டுக்கட்டோடு சூதாட்டக்காரர்கள் தில்லாக ஒரு கை போடுகிற காலம் கூட இந்தியாவில் வரலாம்!’’ என பயமுறுத்துகிறார் சுப்பிரமணியன்.
இந்த வழக்கிலேயே ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களும் தங்களை இணைத்துக்கொண்டு வாதாடினர். ‘இந்த வழக்குக்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கும் தொடர்பு இல்லை’ என சொல்லிவிட்டது உச்ச நீதிமன்றம்.
கிரிக்கெட் சூதாட்டம் உட்பட சூதாட்டங்களில் பல புதிய வரவுகள் வந்திருக்கும் இந்த வேளையில், எது சூதாட்டம் எனும் தர்ம எல்லைகள் பற்றிப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞரும் இது தொடர்பான அனுபவம் அதிகமுள்ளவருமான சூரித் பார்த்தசாரதி.‘‘சூதாட்டங்களை முழுமையாக சட்டத்தால் தடுக்க முடியுமா என்று தெரியவில்லை.
இதனால்தான் ஐரோப்பிய நாடுகளில் சூதாட்டத்துக்கு என்றே பல நிறுவனங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் கேசினோ போன்ற கிளப்புகளில் மட்டும் சூதாட அனுமதி உண்டு. இந்த நாடுகளில் எல்லாம் சூதாட்டத்தை அரசு கண்காணிக்கிறது.
இதனால் பணம் கட்டுபவர்கள் மோசடிக்கு உள்ளாவதும், கடன் சொல்லி விளையாடி தற்கொலை செய்து கொள்வதும் அங்கெல்லாம் குறைவு. எதுவுமே கட்டுப்பாடு இல்லாதபோதுதான் பிரச்னையாகிறது. ரம்மி விளையாட்டையும், செஸ், கிரிக்கெட் போன்ற திறமை அடிப்படையிலான விளையாட்டாக பப்ளிக் கேம்ப்ளிங் ஆக்ட்டும், சீட்டாட்ட நிபுணர்களும் கருதுவதால் இதிலும் அரசு கட்டுப்பாட்டுடன் சூதாட்டத்தை அனுமதிக்கலாம்!’’ என்கிறார் அவர்.
ஆனால், ரம்மி உண்மையிலேயே வெறும் திறமை அடிப்படையிலான ‘நல்ல’ விளையாட்டுதானா? - இதிலேயே வழக்குரைஞர் சுப்பிரமணியனுக்கு மாற்றுக் கருத்து உள்ளது.‘‘உங்களுக்கும், பிறருக்கும் போடப்படும் கார்டை தீர்மானிப்பது அதிர்ஷ்டம். கீழே இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு கார்டும் அதிர்ஷ்ட அடிப்படையிலானது.
மற்றபடி எதிராளி போடும் கார்டை நினைவு வைத்திருப்பது, அடுத்த கார்டை யூகம் செய்வது போன்றவை திறமை அடிப்படையிலானவை. ஆக, திறமையும் அதிர்ஷ்டமும் கலந்ததொரு விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும். அது சூதாட்டமே இல்லை எனச் சொல்வது குற்றங்கள் பெருகத்தான் வழி செய்யும்.
சூதாட்டத்தின் மூலம் கொழுத்த பணம் பார்க்கும் கிளப்களும், கலாசார மையங்களும் பெருகிவிட்டன. சூதாட்டம் மது போலவே ஒரு போதை; மதுவைவிட மோசமான போதை. எனக்குத் தெரிந்து வக்கீல்கள், ஆசிரியர்கள் மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் பலர் விட்டதைப் பிடிக்கிறேன் என்று இதில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.
கிளப்களில் உணவு, காபி, மதுபானம், சிகரெட் என செளகரியங்களை அதிகமாகச் செய்து தருவார்கள். காரணம், ஒவ்வொரு சீட்டாட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட கமிஷன் தொகை அவர்களுக்குப் போய்ச் சேருகிறது. சூதாட்டக்காரர்கள் குஷியாக இங்கே தங்களை அடமானம் வைக்கிறார்கள்.
இந்த கிளப்களையும் டேபிள் ரம்மிகளையும் விட, பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது ஆன்லைன் ரம்மி சூதாட்டமே. ஆண்கள் புழங்கும் கிளப்களுக்குப் போகக் கூச்சப்படும் பெண்களையும் வளர் இளம் பிள்ளைகளையும் கூட சூதாட்டத்தில் இழுத்துப் போட்டுவிடுகிறது இது. டேபிள் ரம்மி சூதாட்டத்துக்கே சட்டம் கைவிரித்துவிட்டது என்றால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய இந்தியா இன்னொரு முறை சுதந்திரம்தான் வாங்கவேண்டும்!” என்கிறார் அவர் ஆதங்கம் பொங்க!
நம்மை சூது கவ்வியாச்சு போலிருக்கே!ஆண்கள் புழங்கும் கிளப்களுக்குப் போகக் கூச்சப்படும் பெண்களையும் வளர் இளம் பிள்ளைகளையும் கூட சூதாட்டத்தில் இழுத்துப் போட்டுவிடுகிறது ஆன்லைன் ரம்மி.
- டி.ரஞ்சித்
|