தீர்வு



‘‘இங்கேயும் அதே கதைதாண்டா. எனக்கும் ப்ரியாவுக்கும் சண்டையே ஓயறதில்ல. நான் கொஞ்சம் குரல் உயர்த்திட்டாலும், ஒண்ணு அழ ஆரம்பிச்சிடறா... இல்ல, பெட்டியத் தூக்கிக்கிட்டு கிளம்பிடறா. என்னத்த பண்றது!’’ - ரூமுக்குள் தன் கணவன், நண்பனிடம் போனில் பேசிக்கொண்டிருந்தது ப்ரியாவின் காதில் விழுந்தது.

‘‘எதுக்காக என்னைப் பத்தி இல்லாததும் பொல்லாததுமா சொல்லிட்டிருந்தீங்க? நான் என்ன அப்படியா நடந்துக்கறேன்?’’ - போன் பேசிவிட்டு வெளியே வந்தவனிடம் கோபமாய்க் கேட்டாள் அவள்.

‘‘ஓ... அதுவா? வீட்ல ஒரே சண்டைன்னு அவன் பொலம்பிட்டிருந்தான். உண்மையோ, பொய்யோ... எல்லா வீட்லயும் இப்படித்தான்னு சொன்னா, அவனும் கொஞ்சம் சமாதானம் ஆவான்ல. அதான்!’’ - சிரித்தான் ரகு.‘‘நல்ல கதையா இருக்கே. நமக்குள்ள மட்டும் சண்டை சச்சரவு வராமலா இருக்கு? ஆனா நாம எத்தனை விஷயங்கள்ல விட்டுக்கொடுத்து நடந்துக்கறோம்.

இதை எடுத்துச் சொன்னாதானே அவரோட பிரச்னைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். நீங்க பாட்டுக்கு எல்லா வீட்லயும் சண்டை சகஜம்னு சொன்னா, அவர் பிரச்னை தீந்துடுமா? முதல்ல விட்டுக் கொடுத்தாதான் வாழ்க்கைங்கறதை அவருக்குப் புரிய வைங்க. எல்லாம் சரியாயிடும்!’’ என்று ஒரு குட்டு வைத்துவிட்டு நகர்ந்தாள் ப்ரியா.
                               

யுவன் ராம்