நேர்மை



இன்டர்வியூவுக்கு வந்திருந்த கூட்டத்தைக் கண்டதுமே சிவகுமாருக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. இரண்டே  காலியிடங்களுக்கு இவ்வளவு பேர் போட்டியா? இதில் எத்தனை சிபாரிசுகளோ! இந்தக் காலத்தில் நேர்மையாக இன்டர்வியூ நடத்துகிறவர்கள் கூட இருக்கிறார்களா என்ன?பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளைஞன் நன்கு படித்தவன் மாதிரி தெரிந்தான்.

‘‘ஏன் பாஸ்? இங்க இன்டர்வியூ ஒழுங்கா நடக்குமா... இல்லை, வெறும் கண்துடைப்பா?’’‘‘அப்படியெல்லாம் இருக்காதுங்க... இன்டர்வியூ நடத்துறவர் ரொம்ப  நேர்மையானவர். எந்த சிபாரிசுக்கும் மசிய மாட்டார். சொந்த மகனா இருந்தால் கூட பார்க்க மாட்டார். திறமைக்குத்தான் மதிப்பு!

’’இன்டர்வியூ முடிந்து சிவகுமாருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் கையோடு கிடைத்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் மட்டும் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவனிடம் போய் சந்தோஷ செய்தியைப் பகிர்ந்துகொண்டவன், ‘‘உங்களுக்கு இன்டர்வியூ என்னாச்சு பாஸ்?’’ எனக் கேட்டான்.

‘‘செலக்ட் ஆகலே. பரவாயில்ல. உங்களுக்கு வாழ்த்துக்கள்!’’‘‘சரி, இன்டர்வியூதான் முடிஞ்சிடுச்சே... எதுக்காக காத்திருக்கீங்க?’’‘‘இன்டர்வியூ பண்ணாரே, அவர்தான் எங்கப்பா. அவரால நடக்க முடியாது. கைத்தாங்கலா பிடிச்சிக்கிட்டு, அவரைக் கூட்டிட்டுப் போகத்தான் வெயிட் பண்றேன்!’’ என்றான் அந்த இளைஞன். இன்னும் இப்படிப்பட்ட மனிதர்களும், அவர்களிடம் நேர்மையும் இருப்பதை நினைத்து நெகிழ்ந்தான் சிவகுமார்.