விதித்தது



‘‘ஏண்டா பாண்டியா, இந்த மாசம் ஆர்டர்கள் எப்படி?’’ - தன் உதவியாளன் பாண்டியனை வினவினார் அரிசி ஆலை அதிபர் செல்வம்.‘‘பிரமாதம் ஐயா! போன மாசத்தைவிட முப்பது சதவீதம் அதிகம். கல், குருணை இல்லாம, ஊர் ஊரா நீங்க அலைஞ்சு தரமான நெல்லை வாங்கி பக்குவமா நம்ம மில்லுல நொய் இல்லாம அரைச்சு தமிழ்நாடு பூரா சப்ளை பண்ணுறீங்க.

ஆர்டர் இனி என்னிக்குமே நமக்கு ஏறுமுகம்தான் ஐயா!’’பாண்டியன் சொல்லவும் தன் அரிசி ஆலையை பெருமை பொங்க பார்த்த செல்வம், ‘‘சரிப்பா! நான் மதியச் சாப்பாட்டுக்கு கிளம்புறேன்’’ என்றவாறு தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினார்.

வீட்டு டைனிங் ஹால்... மனைவி சுந்தரியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் செல்வம். ‘‘சுந்தரி செல்லம்... ஒரு நாலு கவளம் சோறு, கொஞ்சம் ரசம், ஒரு அப்பளம்... ப்ளீஸ்டி!’’‘‘கிடையவே கிடையாது. அரிசி சாதத்து பக்கம் நீங்க போகவே கூடாதுன்னு டாக்டர் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். இப்பவே ஷுகர் முன்னூறை தாண்டிடுச்சு.

 கோதுமை கஞ்சியும், காணத் துவையலும் வச்சிருக்கேன். குடிச்சிட்டு சீக்கிரம் மில்லுக்குக் கிளம்புங்க’’ என்றாள் சுந்தரி.ஊருக்கே அரிசி சப்ளை செய்யும் செல்வம் கோதுமைக் கஞ்சியை ஸ்பூனில் எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.                                        

வி.சகிதா முருகன்