கவிதைக்காரர்கள் வீதி



*பேருந்து இருக்கையின் பின்புறத்தில்
யாரோ ஒருவன்
காதலைச் சொல்லியிருக்கிறான்
எழுத்துப் பிழை ஏதுமின்றி...

*இரண்டு சுற்றுக்குள்
அடங்கிப் போகும்
கடிகார நாளைப் போல்
சீராக அமைவதில்லை
எல்லா சந்திப்புகளும்!

*மாமரக் கிளை தாவும்
அந்த அணில்
சுற்றிச் சுற்றி வருகிறது
சொல்ல மறந்து விட்டேன்...
நேற்றுதான் பறித்தாயிற்று
அதற்கான கனிகளையும் சேர்த்து

*வெயிலில் காய்கின்றன
நேற்றைய மழையில்
நனைந்த மேகங்கள்!

*முகத்தின் மொத்த அழகையும்
துப்பட்டாவினுள்
பொட்டலம் கட்ட கற்பித்த
ஏவாள் யாரோ?!

*தன்னை நம்பாமல்
அர்ச்சனைத் தட்டு
வாங்கிய கடையிலேயே
செருப்புகளைப் பார்த்துக்கொள்ள
சொன்னவர் யாரென
தெரிந்து போகும் கடவுளுக்கு...
ராசி, நட்சத்திரம் சொல்லும்போது!

*வறியவரின் வயிறென
வெற்றிடங்களால் நிரம்பியிருக்கிறது
பண்டிகை நாளின் மாநகரச் சாலை!

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

படம்: புதூர் சரவணன்